ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தயாராகுங்கள்; வீரர்களுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவுறுத்தல்


ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தயாராகுங்கள்; வீரர்களுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 19 March 2020 4:29 PM GMT (Updated: 19 March 2020 4:29 PM GMT)

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தயாராகும்படி வீரர்களுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது.

ஏதென்ஸ்,

32வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24ந்தேதி முதல் ஆகஸ்டு 9ந்தேதி வரை நடத்தப்படுகிறது.  ஆனால் கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுமைக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

இதனால் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது பற்றிய சந்தேகம் எழுந்தது.  இந்நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டனர்.  இதில் ஒலிம்பிக் போட்டி நடைபெற 4 மாதங்கள் உள்ள சூழலில், போட்டியை ரத்து செய்வது குறித்து தற்போது முடிவு எடுக்க தேவையில்லை என தீர்மானிக்கப்பட்டது.

அதனால் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள ஏதுவாக தயாராகும்படி விளையாட்டு வீரர்களை அறிவுறுத்தியுள்ளது.  ஒலிம்பிக் போட்டி ரத்தானால் ஜப்பானுக்கு ஏறக்குறைய ரூ.97 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.  எனினும், 56 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்து இருக்கும் ஒலிம்பிக் வாய்ப்பை நழுவ விட்டு விடக்கூடாது என்பதில் ஜப்பான் அரசாங்கமும் எல்லாவிதமான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஒலிம்பிக் தீபம் கிரீஸ் நாட்டின் விளையாட்டு மந்திரியிடம் இருந்து ஜப்பானின் முன்னாள் நீச்சல் வீராங்கனை இமோட்டோ நவோக்கோவிடம் ஒப்படைக்கப்பட்டது.  இதன் பின்னர் ஒலிம்பிக் தீபம் டோக்கியோ நகருக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

Next Story