விருத்தாசலத்தில், மாநில எறிபந்து போட்டி: வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு


விருத்தாசலத்தில், மாநில எறிபந்து போட்டி: வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
x
தினத்தந்தி 12 Oct 2021 5:23 PM GMT (Updated: 12 Oct 2021 5:28 PM GMT)

அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்

விருத்தாசலம், 

தமிழ்நாடு அளவிலான 19-வது மாநில எறிபந்து போட்டி விருத்தாசலம் சி.எஸ்.எம். கலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிகளில் தமிழகம் முழுவதும் இருந்து 19 வயதிற்கு உட்பட்ட மாணவ-மாணவிகள் கொண்ட அணியினர் கலந்து கொண்டனர். எறிபந்து போட்டியை விருத்தாசலம் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். போட்டிகள் அனைத்தும் நடைபெற்று முடிந்தவுடன் கல்லூரி வளாகத்தில் நிறைவு விழா நடந்தது. இதற்கு  தமிழ்நாடு எறிபந்து கழக தலைவர் பாலவிநாயகம் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டி பேசினார். முன்னதாக கடலூர் மாவட்ட எறிபந்து கழக தலைவர் திருமால்வளவன் அனைவரையும் வரவேற்றார்.
கஸ்டம்ஸ் உதவி ஆணையாளர் அழகேசன், சப்-கலெக்டர் செல்வபாண்டி, மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன், சி.எஸ்.எம். கல்லூரியின் தலைவர் வக்கீல் மணிகண்ட ராஜன், செயலாளர் அபிதாகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். முடிவில் சி.எஸ்.எம். கல்லூரியின் பொருளாளர் காமராஜ் நன்றி கூறினார். போட்டிக்கான ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட எறிபந்து சங்க செயலாளர் ராஜராஜசோழன் செய்திருந்தார். போட்டிகளில் ஆண்கள் பிரிவில் சென்னை முதல் இடமும், கரூர் 2-ம் இடமும், நீலகிரி 3-ம் இடமும் பிடித்தன. பெண்கள் பிரிவில் சென்னை முதல் இடம், திருவள்ளூர் 2-ம் இடமும், செங்கல்பட்டு 3-ம் இடமும் பிடித்தன. இப்போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக ஆடிய வீரர்களைக் கொண்டு தமிழ்நாடு அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த அணி வருகிற 20, 21, 22, 23 ஆகிய 4 நாட்கள் உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story