சிறப்புக் கட்டுரைகள்

ஆதிச்ச நல்லூரில் ஆபரணங்களின் கண்டுபிடிப்பு + "||" + The discovery of ornaments in Athicha nallur

ஆதிச்ச நல்லூரில் ஆபரணங்களின் கண்டுபிடிப்பு

ஆதிச்ச நல்லூரில் ஆபரணங்களின் கண்டுபிடிப்பு
இன்றைய காலத்தில் மக்கள் தங்கத்தால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுபோன்று பழங்காலத்தில் வாழ்ந்த மனிதர்களும் தங்க அணிகலன்களை அணிந்து மகிழ்ந்துள்ளனர்.
இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டத்திற்கு அருகில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட பண்டைய அணிகலன்கள் பல கிடைத்துள்ளன. நெற்றிச்சுட்டிகள், நெற்றிப்பட்டங்கள், தங்கச்சரம், தங்கத்துகள்கள் பல கிடைத்துள்ளன. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்கள் பயன்படுத்திய பொருட்கள் இவை. இன்று அவ்வூர் மண்களும், கற்குவியல்களும், பாறைகளும் நிறைந்து மேடாகக் காட்சி தருகிறது.

ஆதித்தநல்லூர் இப்போது ஆதிச்சநல்லூர் என்று அழைக்கப்படுகிறது. ஆதி என்றால் மிகவும் பழமை என்பது பொருள். தோற்றத்தை அறிய முடியாத பழமை எனலாம். மிகப்பழைய காலத்தை கற்காலம், உலோக காலம் என்று வகைப்படுத்துவர். செதுக்கப்படாத கற்களைக் கருவிகளாகவும், ஆயுதங்களாகவும் பயன்படுத்திய காலம் பழைய கற்காலம் என்றும், செதுக்கிச் செம்மைபடுத்தப்பட்ட கற்கருவிகளைப் பயன்படுத்திய காலத்தைப் புதிய கற்காலம் என்றும் குறிப்பர். புதிய கற்காலத்தை அடுத்துத் தோன்றிய காலம் உலோக காலம். தங்கம், இரும்பு, பித்தளை, வெண்கலம் போன்ற உலோகங்கள் இக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

உலோக கால நாகரிக மக்களே ஆதிச்சநல்லூர் பகுதியில் வாழ்ந்துள்ளனர். இரும்பு உலோகம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது தங்கம். எனவே, மிகத்தொன்மையான காலகட்டத்தைச் சேர்ந்த ஆதிமனிதர்கள் இங்கு வாழ்ந்தனர் என்பதை அறியலாம்.

ஆற்றங்கரைகளில்தான் நாகரிகம் முதன் முதலில் தோன்றி வளர்ச்சி பெற்றுள்ளது. நாடோடிகளாக அலைந்த ஆதி மனிதன் ஆற்றங்கரைகளில் தங்கி உழவுத்தொழில் செய்து பயிரிட்டு வாழ்ந்துள்ளான். ஆதிச்சநல்லூர் தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ளது. இங்கு கிடைத்துள்ள இரும்புக் கலப்பைகள், கலப்பையின் முனைகள், மண்வெட்டிகள் போன்றவை உழவுத்தொழிலில் ஈடுபட்ட மக்கள் பயன்படுத்தியவை.

தானியங்களின் சிதைவுகள் கிடைத்தமை எண்ணத்தக்கது. பெரிய பெரிய தாழிகள் கிடைத்துள்ளன. இவற்றுள் முழு மனிதனின் எலும்புக்கூடுகள், எலும்புகளின் சிதறல்கள், மண்டை ஓடுகள் காணப்படுகின்றன. மண்டை ஓடுகள் அடிபட்டு சிதைக்கப்பட்டுள்ளன. மிகப்பெரும் போர் ஒன்று நடைபெற்று இறந்தவர்களின் உடல்களைத் தாழிகளுக்குள் வைத்து அடக்கம் செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. தாழிகள் உயரமானவை. அகலமானவை. கழுத்துப் பகுதிகள் அழகாகச் செய்யப்பட்டுள்ளன.

தாழிகள் மூடி போட்டு மூடப்பட்டுள்ளன. தாழிகளை 6 அடி முதல் 10 அடி வரை ஆழமான குழிகளில் புதைத்து விட்டு கற்பலகைகளைக் கொண்டு மூடியுள்ளனர். கருப்பு நிறப்பானைகளும், சிவப்பு நிறப்பானைகளும், கருப்பும் சிவப்பும் கலந்த நிறத்தில் புனையப்பட்ட பானைகளும் கிடைத்துள்ளன. இது இம்மக்கள் மண்பாண்டக் கலையில் தேர்ந்தவர்கள் என்பதைக் காட்டுகின்றன.

தாழிகளுக்கு உள்ளும் வெளியிலும் இரும்பு ஈட்டிகள், திரிசூலங்கள், வாள்கள், வேல்கள் இரும்பு விளக்குகள், வெண்கலத்தால் செய்யப்பட்ட சேவல் உருவங்கள், சேவல் கொடி போன்ற அமைப்புகள் கிடைத்துள்ளன. ஒருவேளை முருக வழிபாடு இங்கு இருந்திருக்கலாம்.

இரும்பு ஆயுதங்கள் போர் ஆயுதங்களாக இருப்பதால் மன்னர்களும், வீரர்களும் இப்பகுதியில் வாழ்ந்திருக்கலாம். இவ்வூருக்கு அருகே ஆற்றின் வடக்கே அமைந்துள்ள கொங்கராயக்குறிச்சியில் பண்டைய நகரம் மற்றும் அரசர்கள் வாழ்ந்த அரண்மனையும் இருந்திருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுவார்கள். மிகப்பெரிய போர் ஒன்று நடைபெற்று நகரமும் மக்களும் அழிந்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

1902-1903-ம் ஆண்டுகளில் அரசு தொல்லியல் துறை அகழாய்வுகளை மேற்கொண்டது. அதற்குப்பிறகும் பல முறை அகழாய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளில்தான் மேற்கூறப்பட்ட 1000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. ஏக்கருக்கு 1000 தாழிகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 114 ஏக்கர் நிலப்பரப்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இங்கு கிடைத்த தாழிகள் சிந்து வெளியிலும், கொற்கையிலும் கிடைத்த தாழிகளை விடப் பெரியவை. தாழிகள் கால் உடையவை. இங்கு கண்டெடுக்கப்பட்ட தங்கச்சரம் அலெக்சாண்டர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இது ஜெர்மனியில் பெர்லின் பொருட்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது என்பர். பிற பொருட்கள் சென்னை அரசு அருங்காட்சியகத்திலும், கொல்கத்தா அருங்காட்சியகத்திலும் உள்ளன. ஆதிச்சநல்லூரில் கிடைத்த வெண்கல வேல், வெண்கல சேவல் உருவம் போன்றவை பிற இடங்களில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முருக வழிபாடு இங்கு இருந்திருக்க வேண்டும் என்பது உறுதி செய்யப்படுகிறது.

முருகன் எழுந்தருளியுள்ள திருச்செந்தூர் இவ்வூரில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது எண்ணத்தக்கது. சிவப்பு நிற பானை ஓடுகளும், கருப்பு நிற பானை ஓடுகளும் இரண்டு நிறமும் கலந்த பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. ஆனால் இவற்றில் குறியீடுகளோ, எழுத்துக்களோ இல்லை. சிந்துவெளி மற்றும் தமிழகத்து ஊர்களில் கிடைத்த பானை ஓடுகளில் குறியீடுகளும், எழுத்துக்களும் உள்ளன.

ஆதிச்சநல்லூரில் பானை ஓடுகளில் எழுத்துக்கள் இல்லை என்பதால் எழுத்து வரி வடிவம் தோன்றியிருந்த மிகப்பழங்காலத்தைச் சேர்ந்தவை இவை என்று அறியலாம். சிந்துவெளியிலும், தமிழகத்தின் பிற ஊர்களிலும் ‘பிராமி’ என்றும் பழந்தமிழ் எழுத்துக்கள் என்றும் அழைக்கப்படும் எழுத்துகள் எழுதப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றிற்கெல்லாம் முற்பட்ட காலம் ஆதிச்சநல்லூர் காலம் என்பது மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்படுகிறது.

ஆதிச்சநல்லூர் பானை ஓடுகளில் இல்லை. முழுக்க முழுக்க தமிழ் நாகரிகத்தின் சின்னங்களே ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ளன. பூச்சாடிகள், மணிகள் முதலியவையும் கிடைத்துள்ளன. இவை பித்தளையால் ஆனவை. இவை சிறப்பான நாகரிகச் சின்னங்களாக விளங்குகின்றன. கற்காலத்தில் பொற்காலம் கண்டது ஆதிமனிதனின் ஆதிச்சநல்லூர்.

ஆனால் போர்களால் அழிந்து மண் மேடாகிப்போனது என்பதை அங்குக் கிடைத்த போர்க்கருவிகள் காட்டுகின்றன. பொருணை ஆற்றின் வழி மாற்றங்களாலும், இயற்கைச் சீற்றத்தாலும் மண் மேடாகப் போயிருக்கலாம். கொற்கை முகத்துவாரத்தில் இருந்து ஆதிச்சநல்லூர் வரை பொருணை ஆற்றின் வழியாக படகுப் போக்குவரத்தும் இருந்துள்ளது.

பாண்டிய நாட்டில் பிரளயம் வருகிறது என்று மீன் ஒன்று பாண்டிய மன்னனுக்கு அறிவுறுத்தியதாம். மன்னனும் பாதுகாப்பான கப்பல் செய்து அதில் ஏறிக்கொள்ள அந்த மீன் கப்பலை பொருணைஆற்றின் வழியாகக் கொற்கையிலிருந்து ஆதிச்சநல்லூருக்கு இழுத்துச் சென்று மேட்டுப்பகுதியில் மன்னனைக் காப்பாற்றியது என்பார்கள்.

ஆதிச்சநல்லூரின் வரலாறு இன்பியலாகவும், துன்பியலாகவும் அமைந்துள்ளது. அவர்களது நாகரிக வாழ்வு இன்பியலாகவும், போரால் ஏற்பட்ட துன்பியலாகவும் அமைந்துள்ளது.

- பேராசிரியர் அ.பாஸ்கரபால்பாண்டியன், தொல்லியல் அறிஞர்.