விழிப்புணர்வு பெறுவோம்; லஞ்சம் தவிர்ப்போம்...!


விழிப்புணர்வு பெறுவோம்; லஞ்சம் தவிர்ப்போம்...!
x
தினத்தந்தி 19 Feb 2019 6:14 AM GMT (Updated: 19 Feb 2019 6:14 AM GMT)

மது அருந்துவது உடல் நலத்துக்குக் கேடு தரும். இது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனாலும் ஊரெங்கும் மது விற்பனைக் கடைகளை அரசாங்கமே நடத்தும் அவலநிலை இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

ஆனாலும், மது விற்பனை செய்யப்படும் இடங்களில் “மது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு” என்று சமூக நலன் கருதியும், உடல் நலம் கருதியும் மது அருந்துபவர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுக்கிறது. இப்போதெல்லாம், மது அருந்தும் காட்சிகள் இடம் பெறாத திரைப்படங்களே கிடையாது. நம் திரைப்படக் கதாபாத்திரங்களுக்கு சந்தோஷம் என்றால் அதை மதுவுடன் தான் கொண்டாடுகிறார்கள். சோகம் என்றால் கேட்கவே வேண்டாம். அப்போதும் அவர்கள் நாடுவது மதுவைத்தான். அதே போல புகை பிடிப்பது உடல்நலத்துக்குக் கேடு; புற்றுநோய் வரும் என்பதும் உலகமே அறிந்த உண்மை. மத்திய அரசு, சிகரெட் பாக்கெட்டுகளின் மீது புகை பிடிப்பதால் ஏற்படும் விளைவினை அச்சுறுத்தும் வகையில் புகைப்படத்துடன் வெளியிடுவதை கட்டாயமாக்கி இருக்கிறது. சிறுவர்களுக்கு சிகரெட் விற்பதற்கு தடை விதித்துள்ளது.

சமூகத்தின் மீது மிகப்பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய ஊடகம் சினிமா என்பதால், மது அருந்தும், புகை பிடிக்கும் காட்சிகள் திரைப்படங்களில் வருகிறபோது, மது அருந்துவது, புகைபிடிப்பது உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்ற எச்சரிக்கை வாசகம் திரையின் கீழ்ப்பகுதியில் இடம்பெறவேண்டும் என்பதைக் கட்டாயமாக்கி இருக்கிறது. இதற்கும் மேலாக, எல்லா திரைப்படங்களுமே மது அருந்துவது, புகைப்பிடிப்பது ஆரோக்கியக் கேடு என்பதை வலியுறுத்தும் நோக்கத்துடன் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களின் உண்மைக் கதை, பிரபலங்களின் மூலமாக பிரசாரம் என்று பல்வேறு உத்திகளில் மதுவுக்கும், புகை பிடிப்பதற்கும் எதிரான பிரசாரத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

மலையாளத் திரைப்படங்கள் இன்னும் ஒரு படி மேலே போய், இன்னொரு விழிப்புணர்வு பிரசாரத்தையும் மேற்கொண்டு வருகிறார்கள். அது என்ன தெரியுமா? இரண்டு சக்கர வாகனங்கள் ஓட்டிச் செல்லும்போது, தலைக்கு ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்வது. ஆம்! திரைப்படங்களில் இரண்டு சக்கர வாகனங்கள் ஓட்டிச் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றால், வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வது போலக் காட்டுகிறார்கள். ஹெல்மெட் அணியாமல், வாகனம் ஓட்டிச் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றால், திரையில், இரண்டு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது, ஹெல்மெட் அணியுங்கள் என்ற எச்சரிக்கை வாசகம் இடம்பெறுகிறது. அதே போல, கார் ஓட்டும்போது காரை ஓட்டுபவர் கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையான வாசகம் இடம்பெறுவது வழக்கமாக இருக்கிறது.

மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் இந்த மாதிரியான சமூக அக்கறையுடன் கூடிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. அதற்காக, நாம் அந்த அரசாங்கங்களை மனதாரப் பாராட்டலாம். இதே வகையில் இன்னொரு விழிப்புணர்ச்சியையும் திரைப்படங்கள் மூலமாக ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இன்று அரசு எந்திரத்தின் அனைத்து மட்டங்களிலும் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்து ஆடுகின்றன. நமது திரைப்படங்களில், அரசாங்க அலுவலகத்தில் பணியாற்றும் கடை நிலை ஊழியரில் தொடங்கி, மிக உயர் பதவிகள் வகிக்கும் தலைவர்கள் வரையிலான பல்வேறு கதாபாத்திரங்களும், லஞ்சம் வாங்குவது போன்ற காட்சிகள் இடம் பெறுகின்றன. சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் இருக்கும் பொதுமக்கள் அவர்களுக்கு தாங்களுக்கு வேண்டியதை சாதித்துக்கொள்ள லஞ்சம் கொடுப்பதாக காட்டப்படுகிறது. இதை, படம் பார்க்கிற கோடிக்கணக்கான மக்களும் வெகு யதார்த்தமாக எடுத்துக்கொள்கிறார்கள்.

மது, புகை பிடித்தல், ஹெல்மெட் அணிதல், சீட் பெல்ட் அணிதல் ஆகியவை போல லஞ்ச ஊழலுக்கு எதிரான விழிப்புணர்ச்சியை வீச்சு மிகுந்த ஊடகமான திரைப்படங்களின் மூலமாக பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தவேண்டும். இதற்கு என்ன செய்யலாம்திரைப்படங்களில் யாரும் லஞ்சம் கொடுப்பதைப் போலவோ அல்லது லஞ்சம் வாங்குவதைப் போலவோ காட்சிகள் இடம்பெறும் சமயத்தில், திரையில் “லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும், சட்டபடி குற்றம்” என்ற வாசகம் திரையில் இடம்பெறும்படிச் செய்யலாம். அதே போல, திரைப்படத்தின் தொடக்கத்திலும், இடைவேளைக்குப் பிறகும், உடல் நல எச்சரிக்கை அறிவிப்பினைப் போல, லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுப் பிரசாரத்தை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். மத்திய கண்காணிப்பு ஆணையம் (சென்டிரல் விஜிலன்ஸ் கமிஷன்) இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலமாக நாட்டின் மூலை முடுக்குகளிலும், பட்டி தொட்டிகளிலும் மக்கள் மத்தியில் லஞ்ச ஒழிப்பு குறித்து ஒரு விழிப்புணர்வு ஏற்படும். நாட்டில் லஞ்ச ஊழல் ஓரளவுக்காவது கட்டுப்படும்.

-எஸ்.சந்திரமவுலி

Next Story