சிறப்புக் கட்டுரைகள்

அன்பு நடமாடும் கலைக்கூடமே... என்றென்றும் கண்ணதாசன் (6) + "||" + Love is a walking ballroom

அன்பு நடமாடும் கலைக்கூடமே... என்றென்றும் கண்ணதாசன் (6)

அன்பு நடமாடும் கலைக்கூடமே... என்றென்றும் கண்ணதாசன் (6)
படித்தவர்கள் சினிமாவுக்கு வரத் தயங்கிய காலம் ஒன்று உண்டு.
‘கூத்தாடிகள்’ என்று அந்தக் காலத்தில் சினிமாக்காரர்களை அழைப்பார்கள். அப்படிப்பட்ட காலத்தில் எம்.ஏ. படித்து விட்டு சினிமாவுக்கு வந்தவர் ஏ.சி.திருலோகசந்தர். பிரபலமான இயக்குனராக திகழ்ந்த அவர், எம்.ஜி.ஆர். நடித்த ‘அன்பே வா’, சிவாஜியின் ‘தெய்வமகன்’, ‘பாபு’ போன்ற படங்களை இயக்கியவர். மிகவும் திறமைசாலியான இயக்குனர். ஏவி.எம். நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குனராக வலம் வந்தவர்.

இவர் ஒரு புத்தகப் புழு. கையில் ஒரு புத்தகத்துடன்தான் எப்போதும் இருப்பார். கதை விவாதத்தின் போதும், இயக்கும் போதும், பாடல் எழுதப்படுகின்ற போதும் புத்தகம் படித்துக் கொண்டிருப்பார்.

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா, நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், படப்பிடிப்புக்கு வந்தால், தான் உண்டு.. தன் வேலை உண்டு என்று இருப்பார். யாருடனும் பேச மாட்டார். நடிக்காத நேரத்தில் படப்பிடிப்பு அரங்கத்தின் ஒரு மூலையில் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருப்பார்.

ஆனால் ஒரு படப்பிடிப்பில் அவர் இயக்குனரிடம் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தால், அது நிச்சயமாக திருலோகசந்தரின் படப்பிடிப்பாகத்தான் இருக்கும். இருவரும் புத்தகங்களைப் பற்றித்தான் பேசுவார்கள்.

அப்பாவுக்கும் ஏ.சி.திருலோகசந்தருக்கும் இடையில் எப்போதும் ஒரு இறுக்கம் இருந்துகொண்டே இருக்கும். அதற்கு காரணமும் புத்தகங்கள்தான்.

மேலும் தொடர்வதற்கு முன், அந்தக் காலகட்டத்தில் பாடல் எழுதப்பட்ட விதத்தை முதலில் சொல்லி விடுகிறேன்.

ஒரு படத்திற்கு பாடல் எழுத்தப்பட வேண்டும் என்றால், முதலில் அந்தப் படத்தின் இயக்குனரும், கதாசிரியரும் விவாதித்து, எந்த இடத்தில் பாடல் வரவேண்டும் என்று முடிவு செய்வார்கள். பிறகு இசை அமைப்பாளர், பாடலாசிரியர் இருவருக்கும் செய்தி சொல்லப்பட்டு, அவர்கள் சொல்லும் தேதியில் பாடல் எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

அந்த தேதியில் இயக்குனர், கதாசிரியர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், இசைக்கலைஞர்கள், தயாரிப்பாளர் எல்லோரும், அந்த பட நிறுவனத்திற்கு வருவார்கள். பாடலுக்கான சூழல் இசையமைப்பாளருக்கு சொல்லப்படும். அவர் அந்தச் சூழலிற்கு தகுந்தாற்போல் பல மெட்டுக்களை போடுவார்.

இயக்குனர் தனக்குப் பிடித்த மெட்டை தேர்வு செய்வார். பிறகு பாடலாசிரியர் பாடல் வரிகளை எழுதத் தொடங்குவார். இயக்குனரும், கதாசிரியரும் தேர்வு செய்த வரிகள், பாடலாக பதிவு செய்யப்படும். இதுதான் பாடல் பிறக்கும் கதை.

ஆனால் திருலோகசந்தரின் படத்திற்கான கம்போசிங் வேறு விதமாக இருக்கும். இவர்கள் இசை அமைத்து பாடல் எழுதிக் கொண்டிருப்பார்கள். அவர் அவ்வப்போது புத்தகத்தில் இருந்து தலையை தூக்கிப் பார்த்து கருத்து சொல்வார்.

என் பெரியப்பா மகன் கே.என் சுப்பு ‘அவன்தான் மனிதன்’ என்ற படத்தை தயாரித்தார். நான் அந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் உடன் இருந்தேன். படத்திற்கான பாடல் எழுத அப்பாவும், எம்.எஸ்.விஸ்வநாதனும் வந்து விட்டார்கள்.

விஸ்வநாதன் ஒரு மெட்டை வாசித்து காட்டி, “இதுதான் இந்த பாட்டுக்கு நான் போட்ட மெட்டு” என்றார்.

அப்பா உடனே, “டேய் அந்த உயரமான மனுஷன் வருவான் (திருலோகசந்தர் 6.2 அடி உயரம்). புத்தகத்தை படிச்சுக்கிட்டே எட்டிப்பார்த்து இந்த மெட்டு பிடிக்கலை, வேற மெட்டு போடுன்னு சொன்னான்னா, இந்த மெட்டுக்கு வேற கம்பெனியில நான் தான் பாட்டு எழுதுவேன். வேற யாருக்காவது இதை வித்துட்டே அவ்வுளவுதான்” என்றார்.

“இல்லண்ணே இந்த மெட்டுக்கு உங்களுக்குத்தான்” என்றார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

அப்பா ஏன் இப்படி சொன்னார் என்று எனக்கு அப்போது புரியவில்லை.

ஏ.சி.திருலோகசந்தர் வந்தார். அப்பா, எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் தரையில் மெத்தை விரித்து உட்கார்ந்து இருக்கிறார்கள். இயக்குனரால் கீழே உட்கார முடியாது என்பதால் அவருக்கு நாற்காலி போடப்படுகிறது. உட்கார்ந்த வேகத்தில் ஒரு புத்தகத்தை எடுத்து கையில் வைத்துக்கொண்டார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் மெட்டை வாசிக்க ஆரம்பித்தார்.

‘தான தனனான தனனானனா, தான தனனானனா’ - தத்தகாரத்தில், கேட்கவே சுகமான ராகத்தை பாடுகிறார்.

பாடி முடித்ததும் “டைரக்டர் சார் உங்களுக்கு ஓகே வா?” என்று கேட்கிறார்.
சிறிது யோசனைக்குப் பிறகு டைரக்டர் ‘ஓகே’ என்கிறார்.
‘அப்பாடா’ என்று விஸ்வநாதன் முகத்தில் ஒரு சிரிப்பு.

அப்பா பாடல் வரிகளை சொல்லத் தொடங்குகிறார்...
“அன்பு நடமாடும்
கலைக்கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும்
எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே”
இராம.கண்ணப்பன் வரிகளை எழுதி விஸ்வநாதனிடம் தருகிறார்.

அவர் அந்த வார்த்தைகளுடன் மெட்டைப் பாடிப் பார்க்கிறார். பிறகு “அண்ணே அளவு சரியா இருக்கு” என்கிறார்.

இது நடக்கும்போது ஏ.சி.திருலோகசந்தர் புத்தகத்தில் மூழ்கி இருக்கிறார்.
“சார் பல்லவி கேளுங்க” விஸ்வநாதன் அவரிடம் சொல்கிறார்.
புத்தகத்தில் இருந்து தலையை தூக்கி பல்லவி பாடப்படுவதை கேட்கிறார்.

பிறகு அப்பாவிடம் “அது என்ன அன்பு நடமாடும் கலைக்கூடம்?” என்று கேட் கிறார். “கதைப்படி கதாநாயகனுக்கு கால் உடைந்து போய் விடுகிறது. கதாநாயகி அவனை ஒரு சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக்கொண்டு வருகிறாள். அப்படி வரும்போது ஆறுதலாக ஒரு பாட்டுப்பாடுகிறாள். இதுதானே சிச்சுவேஷன்.

உன்னால் நடக்க முடியாமல் போனால் என்ன? நீ வருத்தப்படாதே, நீயே ஒரு அன்பு நடமாடும் கலைக்கூடம்னு அவனுக்கு ஆறுதல் சொல்ற மாதிரி சொல்லி இருக்கேன். வேணாம்னா மாத்தி தரேன்”.

“இல்லை... இது நல்லாதான் இருக்கு” மீண்டும் புத்தகத்தில் மூழ்கி விடுகிறார். ஏ.சி.திருலோகசந்தரின் சொந்த நிறுவனமான சினி பாரத், தயாரித்த எந்தப் படத்திற்கும் அப்பா பாடல்கள் எழுதியது இல்லை.

ஆனாலும் திருலோகசந்தர் இயக்கிய வீரத்திருமகன், நானும் ஒரு பெண், ராமு, தங்கை, என் தம்பி, அன்பளிப்பு, தெய்வமகன், எங்க மாமா, அவன் தான் மனிதன் போன்ற பல வெற்றிப் படங்களில் அப்பாவின் பாடல்கள் பெரும் வெற்றி பெற்றிருக்கின்றன. இது ஒரு விசித்திரமான காம்பினேஷன்.

எம்.எஸ்.விஸ்வநாதனை பரிந்துரை செய்த கண்ணதாசன்

எம்.ஜி.ஆர். “உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படத்தை தொடங்க இருந்த நேரம். முதலில் பாடல் பதிவு என்று முடிவு செய்து சென்டிமென்டாக அப்பாவை பாடல் எழுத அழைத்திருந்தார்.

எம்.ஜி.ஆர். பிக்சர்சுக்கு அப்பா போனபோது, அங்கே குன்னக்குடி வைத்தியநாதன் இருந்தார். அந்தப் படத்திற்கு அவர்தான் இசையமைப்பாளர்.

எம்.ஜி.ஆர். கதையை சொல்லி பாடலுக்கான சூழலையும் சொல்லி விட்டார். குன்னக்குடி வைத்தியநாதன், டியூன் போட அப்பாவும் பல்லவியை எழுதி முடித்து விட்டார். “மீதியை நாளைக்கு வைத்துக் கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டு அப்பா வீட்டுக்கு வந்து விட்டார்.

மாலையில் எம்.ஜி.ஆருக்கு போன் செய்து பேசினார் அப்பா.

“நீங்கள் குன்னக்குடி வைத்தியநாதனுக்கு படம் தந்தது மகிழ்ச்சி. அவரது இசையில் நான் பல படங்களுக்கு பாடல் எழுதி இருக்கிறேன். அவர் திறமையான இசை அமைப்பாளர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்..”

“ஆனால்?” - இது எம்.ஜி.ஆர்.

“நீங்கள் சொல்லிய கதையில் ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து போன்ற நாடுகளில் கதை நடக்கிறது. முழுக்க முழுக்க வெஸ்டர்னும், ஜப்பானிய மற்றும் சைனீஸ் இசையை பயன்படுத்தினால்தான் நன்றாக இருக்கும். குன்னக்குடி காலையில் போட்ட டியூன் நன்றாக இருந்தாலும், வெஸ்டர்ன் ‘டச்’ இல்லை. இது அவருக்கான பாணி இல்லை. குன்னக்குடி இசையில் ஒரு படத்தை எடுங்கள். அதற்கு அடுத்ததாக ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை விஸ்வநாதன் இசையில் எடுங்கள். அவனைத்தவிர வேறு யாராலும் செய்ய முடியும் என்று எனக்கு தோன்றவில்லை.”

“நான் நாளை பேசுகிறேன்” என்று சொல்லி விட்டு எம்.ஜி.ஆர். போனை வைக்கிறார்.

இது நடந்து முடிந்து ஒரு மாதம் வரை எம்.ஜி.ஆர். அப்பாவிடம் பேசவில்லை. ஆனால் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்கான வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன.

“கவிஞர் அந்தப் படத்திற்கு பாடல் எழுத அழைக்கப்பட மாட்டார்” என்று உதவியாளர்கள் பேசிக்கொண்டார்கள்.

ஒரு மாதம் கழித்து திடீரென எம்.ஜி.ஆர். போனில் அப்பாவுடன் பேசினார்.

“நீங்க சொன்னதை யோசிச்சுப் பார்த்தேன் ஆண்டவனே. நீங்க சொன்னது சரிதான். அதனால குன்னக் குடியை கூப்பிட்டு அவருக்கு வேற படம் தருவதாக சொல்லிட்டேன். இந்தப் படத்துக்கு எம்.எஸ்.வி. தான் மியூசிக்” என்றார்.

அப்பா அந்தப் படத்தில் ‘அவள் ஒரு நவரச நாடகம்’, ‘லில்லி மலருக்கு கொண்டாட்டம்’, ‘உலகம் உலகம்’ ஆகிய மூன்று பாடல்களை எழுதினார்.

அப்பா சொன்னது போல பாடல்கள் அந்தப் படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவின.

எம்.ஜி.ஆர்., குன்னக்குடி வைத்தியநாதனுக்கு ‘நவரத்தினம்’ என்ற படத்தை தந்து, தான் அளித்த வாக்கை காப்பாற்றினார்.

உலா வரும் கற்பனை செய்திகள்

“அன்பு நடமாடும் கலைக்கூடமே” பாடலைப் பற்றி சொல்லுகின்ற போது, இன்னொரு செய்தியையும் சொல்ல வேண்டும். இன்று இணையதளத்தில் இந்தப் பாடல் பற்றி பல செய்தி உலா வருகின்றன.

மே மாதம் படப்பிடிப்பு என்று தயாரிப்பாளர் நச்சரித்தார். அதனால் ‘மே மே’ என்று முடியும்படி கண்ணதாசன் வரிகளை சொன்னார் என்றும், எம்.எஸ்.விஸ்வநாதன் மே மாதம் முழுதும் தான் பிசியாக இருப்பதாக சொன்னதால் ‘மே மே’ என்று முடியும்படி எழுதினார் என்றும் பல பொய்யான செய்திகள்.

இந்தப் பாடல் மட்டும் இல்லை ‘அண்ணன் என்னடா, தம்பி என்னடா...’ பாடல் பற்றி ஒரு பொய்யான செய்தி, ‘எல்லோரும் கொண்டாடுவோம்’ பாடல் ‘ஓம் ஓம்’ என்று முடிகிறது என்று ஒரு பொய்யான செய்தி, (படிப்போம், நடிப்போம், உண்போம், உறங்குவோம்-இப்படி எல்லாமே ஓம் என்றுதானே முடிகின்றன) என்று வேலைவெட்டி இல்லாமல் இருக்கும் பலரின் கற்பனை இப்படி செய்திகளாக வருகின்றன.