அன்றும்... இன்றும்... இந்திக்கு எதிராக தமிழகம், போர்க்கோலம் பூணும் வரலாற்று பின்னணி : நேருவின் வாக்குறுதியை நிலைநிறுத்த போராடும் அரசியல் கட்சிகள்

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் இந்தி என்றாலே நெருப்பு பொறி பறக்கிறது. சமீபத்தில் கஸ்தூரிரங்கன் கமிட்டியின் வரைவு அறிக்கை பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய மொழிக் கொள்கை குறித்த அறிக்கை ஒன்றை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் சமர்பித்தது.
அதில் தாய் மொழி, ஆங்கிலம், இவற்றுடன் மூன்றாவதாக ஒரு தேசிய மொழி கற்றுத் தரப்பட வேண்டும். அது இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியாகவும், இந்தி பேசும் மாநிலங்களில் ஏதாவது ஒரு இந்திய மொழியாகவும் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. வளரும் தலைமுறைக்கு இனி இரண்டுக்கு மேற்பட்ட மொழிகள் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். ஆகவே, மும்மொழி அல்லது பன்மொழியை பயிற்றுவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.
இந்த அறிக்கை வெளியானதும் தமிழகத்தில் எதிர்கட்சிகள் கொதித்து எழுந்தன. “இந்தி திணிப்பை எந்தவிதத்திலும் ஏற்க மாட்டோம். தமிழகம் போர்க்கோலம் பூணும்..” என அறிக்கைகள் வெளியாயின. இதை தொடர்ந்து மத்திய அரசு உடனே எதிர்வினையாற்றி “இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமல்ல, மாணவர்கள் விருப்பத்திற்கேற்ப மூன்றாவதாக ஒரு இந்திய மொழியை தேர்ந்தெடுத்து படிக்கலாம்” என அறிவித்துவிட்டது.
இந்தியாவில் வேறெந்த மாநிலத்தை விடவும் தமிழகத்தில் மட்டும் ஏன் இந்தி என்றால் நெருப்பு பற்றி எரிகிறது? என்பதற்கு ஒரு நீண்ட வரலாற்று பின்புலம் உள்ளது. அதை மிக சுருக்கமாக பார்ப்போம்.
முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம்
1937-ல் ராஜாஜி சென்னை மாகாண முதல்வராக இருந்த போது குறிப்பிட்ட 125 பள்ளிகளில் மட்டும் பரீட்சார்த்த முயற்சியாக 6, 7, 8 ஆம் வகுப்புகளில் இந்தி மொழி கற்பிக்கப்படும் என அறிவித்தார். அதற்கு தமிழ் பேசும் பகுதிகளில் மட்டும் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. அன்றைய சென்னை மாகாணத்தில் இருந்த ஆந்திர, கேரளா, கர்நாடக பகுதிகளில் எதிர்ப்பே இல்லை. ஆனால் தமிழக பகுதிகளில் பெண்கள், இளைஞர்கள், தமிழறிஞர்கள் போராடி சிறை சென்றனர். அப்போது போராட்டத்தில் கைதாகி, இறந்த தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராசன் நினைவாக இன்றும் சென்னை எழும்பூரில் பெரிய கட்டிடம் தமிழக அரசு அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. இரண்டு வருடம் தொடர்ச்சியாக நடந்த இந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை சமாளிக்க முடியாமல் ராஜாஜி திணறிப் போனார்.
இந்தியை தமிழர்கள் மட்டும் ஏன் எதிர்த்தனர்?
இந்தியைக் காட்டிலும் தமிழ் தொன்மையான இலக்கிய வளம் மிக்க மொழி என்பது மட்டுமல்ல, மற்ற இந்திய மொழிகள் எல்லாம் சமஸ்கிருத மொழியோடு நெருங்கிய தொடர்பு உடையவை. ஆனால், தமிழ் மட்டுமே சமஸ்கிருதத்தின் துணையில்லாமல் தன்னைத் தானே நிறுவிக் கொண்ட சுயம்புமொழியாகும். அதனால், தமிழகத்தில் இந்த இரு மொழிகளுக்கும் இடையிலான ஒருவிதமான பகை உணர்வு நீறுபூத்த நெருப்பாக இருந்தது. அந்நாளில் தமிழ்மொழியில் சமஸ்கிருதக் கலப்பு மிக அதிகமாக காணப்பட்டது.
உதாரணமாக, மொழிக்கு பாஷை, துணிக்கு வஸ்த்திரம், பெண்களுக்கு ஸ்திரி, தண்ணீருக்கு ஜலம், உரையாடலுக்கு சம்பாஷணை, ஆசிரியருக்கு உபாத்தியார் என்று சமஸ்கிருதக் கலப்பான பேச்சு வழக்கும், எழுத்து வழக்கும் நிலவியது. அத்துடன் கோவில்களில் அதற்கு முன்பிருந்த தமிழ் வேதங்களாக கருதத்தக்க தேவாரம், திருவாசகம், திருமூலம், நாலாயிர திவ்விய பிரபந்தம், ஆண்டாள் பாடல்கள் போன்றவை பின்னுக்கு தள்ளப்பட்டு, சமஸ்கிருத மந்திரங்கள் மட்டுமே நிலை கொண்ட சம்பவங்கள் எல்லாமே தமிழ் அறிஞர்களையும், சைவ பெரியார்களையும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருந்தன. இந்தி என்பதை சமஸ்கிருதத்தின் மறுவடிவமாக அவர்கள் கருதினார்கள். அதனால் தான் அன்றைய இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பெரியார் ஈ.வெ.ராமசாமி, மறைமலை அடிகள், திரு.வி.க., சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதம், பாரதிதாசன் போன்றவர்கள் தலைமை தாங்கினார்கள்.
இரண்டாவது இந்தி எதிர்ப்பு
1948-ல் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் சென்னை மாகாண முதல்வராக இருந்தபோது பள்ளிகளில் இந்தியை விரும்புபவர்கள் விருப்ப பாடமாக படிக்கலாம் எனக் கொண்டு வந்த போதும் கடுமையான எதிர்ப்புகள் ஏற்பட்டதை தொடர்ந்து அறிவிப்பை பின்வாங்கிவிட்டார். ஆனால், சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவில் அந்நிய மொழியான ஆங்கிலத்தை முற்றாக தவிர்த்துவிட்டு, அனைத்து இந்தியர்களையும் ஒருங்கிணைக்கும் மண்ணின் மொழியாகிய இந்தியை அலுவல் மொழியாக்க வேண்டும் என அனைத்து தேசிய தலைவர்களும் விரும்பினார்கள். காந்தி, நேரு, பட்டேல், ராஜாஜி, அம்பேத்கர் என அனைவருக்கும் இதில் ஒரு மித்த கருத்து இருந்தது.
அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் இந்தியை தேசிய மொழியாக்க பரிந்துரை செய்ததோடு, மொழி வழி மாகாண பிரிவினை எதிர்காலத்தில் மொழியை அரசியல்வாதிகள் ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்தக்கூடிய சாத்தியம் இருப்பதால் தவிர்க்க வேண்டும் என்றார். ஆனால், ஆங்கிலம் முற்றாக வேண்டாம் இந்தி மட்டுமே போதுமானது என்பதை ராஜாஜி, டி.டி.கிருஷ்ணமாச்சாரி போன்றவர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து முன்ஷி அய்யங்காரிடம் இந்த விஷயத்தில் ஆய்வு செய்து பரிந்துரைகள் தரும்படி கேட்கப்பட்டது. அவர் தந்த பரிந்துரைப்படி, இன்னும் 15 ஆண்டுகள் இந்தி பேசாத மாநிலங்கள் தயாராகும் வரை ஆங்கிலமும் இணைப்பு மொழியாக தொடரலாம் என்றும் அதற்கு பிறகு இந்தி மொழி மட்டுமே அலுவல் மொழி என்பதை உறுதிபடுத்தி கொள்ளலாம் எனவும் முடிவானது.
மூன்றாம் இந்தி எதிர்ப்பு போராட்டம்
1963-ல் ராஜ்ஜியசபா உறுப்பினராக இருந்த அறிஞர் அண்ணா, பிரதமர் நேருவுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். 1965-க்கு பிறகு இந்தியை மட்டுமே அலுவல் மொழியாக்க கூடாது. ஆங்கிலம் தொடர வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க கூடாது என்றார். அதற்கு வட இந்திய எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
15 ஆண்டுகள் ஆங்கிலத்தை சகித்துக் கொண்டோம். இனியாவது முன்பே திட்டமிட்டபடி இந்தியை மட்டுமே அலுவல் மொழியாக்க வேண்டும் என்றனர். அதற்கு டி.டி.கிருஷ்ணமாச்சாரி, “உங்களுக்கு ஒருங்கிணைந்த இந்தியா வேண்டுமா? இந்தி பேசும் இந்தியா வேண்டுமா?” என்றார். இதைத்தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் மந்திரிகளான சி.சுப்பிரமணியமும், ஓ.வி.அழகேசனும் ஆங்கிலத்தை வலியுறுத்தி, இந்தி மட்டுமே என்பதை ஏற்க மறுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் காமராஜர், கர்நாடக முதல்வர் நிஜலிங்கப்பா, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் அதுல்ய கோஷ், ஆந்திர முதல்வர் நீலம் சஞ்சீவரெட்டி ஆகியோர் “இந்தி பேசாத மக்களிடம் இந்தியை திணித்தால், அது பிரிவினைக்கு வழி கோலும்” என்று எச்சரித்தனர்.
நேருவின் உறுதி மொழி
இதைத் தொடர்ந்து, நேருவும், “இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பி ஏற்கும் வரை ஆங்கிலமே தொடரலாம். இந்தி திணிக்கப்படமாட்டாது.” என்ற வாக்குறுதியை கொடுத்தார். ஆனால் அண்ணா, நேருவிடம் “தொடரலாம்” என்கிறீர்களே தவிர, “தொடரும்” என உறுதிபடக் கூறவில்லை என்று வாதாடினார். இந்த வாதம் பலகட்டங்களாகத் தொடர்ந்த போதும் நேரு உறுதிபட சொல்வதில் ஆர்வம் காட்டவில்லை. இந்த வார்த்தைகளில் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை என்று சமாதானம் செய்தார்.
இந்தி தொடர்பான தன் முந்தைய கருத்தை மாற்றி கொண்ட ராஜாஜி, 1958 தொடங்கி நேருவுக்கு எழுதிய கடிதங்களில், “வேண்டாம் இந்தி ஒரு போதும், வேண்டும் ஆங்கிலம் எப்போதும்” என வலியுறுத்தினார்.
எனவே, நேரு இறந்த பிறகு சூழல்கள் மாறின. ஆகவே 1965-ம் ஆண்டு பிறந்ததும் தமிழகத்தில் பதற்றம் ஏற்பட்டது. வட இந்தியாவில் ஆங்கில மொழியை அழிக்கும் போராட்டம் வலுப்பட்டது. “இந்தி தெரியாதவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை” என்று முழங்கினர். மேலும் டெல்லி போன்ற இடங்களில் எழுதப்பட்டிருந்த ஆங்கில எழுத்துகளை அழிக்கும் போராட்டங்களும் நடந்தன.
இதன் எதிர்வினை தமிழகத்தில் வெளிப்பட்டது. குடியரசு தினமான ஜனவரி 26 அன்று தமிழகத்தில் கருப்பு கொடி ஏற்றி துக்க நாளாக அறிவித்தனர் தமிழ் உணர்வாளர்கள். தமிழகத்தில் இந்தி அழிப்பு போராட்டம் வலுத்தது.
மாணவர்களை பெருந்திரளாக களத்தில் தி.மு.க. இறக்கியது. தமிழகமெங்கும் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் வீரியமாக வெடித்தன. அப்போது தமிழக முதல்வராக இருந்த பக்தவச்சலம், இந்தி எதிர்ப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்தார். மாணவர்கள் பல இடங்களில் காவல்துறையின் துப்பாக்கி சூட்டுக்கு பலியாயினர். இதனால் ஏராளமான உயிர்பலியானது. பலர் தீக்குளித்து இறந்தனர். மாணவர்களை ஆதரிக்கும் தலைவர்களும் கைதாகினர். கருணாநிதி, குன்றக்குடி அடிகளார், கி.ஆ.பெ.விசுவநாதம், பேராசிரியர் இலக்குவனார், சி.பா.ஆதித்தனார், இரா.நெடுஞ்செழியன் ஆகியோர் போராடும் மாணவர்களை ஆதரித்து கைதாயினர்.
இதன் காரணமாக தி.மு.க.வின் செல்வாக்கு உயர்ந்தது. காங்கிரஸ் கட்சி 1967 தேர்தலில் ஆட்சியை பறி கொடுத்தது. அன்று பறி கொடுத்த ஆட்சியை இன்று வரை காங்கிரசால் தமிழகத்தில் மீட்டெடுக்க முடியவில்லை.
இந்த மூன்றாம் கட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் வினோதமான ஒரு அம்சம் என்னவெனில், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தந்தை பெரியார் ஏற்கவில்லை என்பது மாத்திரமல்ல, போராடுபவர்களின் அரசியல் உள் நோக்கத்தை கடுமையாக விமர்சித்தார். ஆனால், இந்தி ஆதரவாளராக இருந்த ராஜாஜி இந்தி எதிர்ப்பாளராகி தி.மு.க.விற்கு ஆதரவளித்தார்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவுகள்
அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகும் கூட தொடர்ந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களை அவரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. எனவே, போராட்டக்காரர்களின் சில கோரிக்கைகளை ஏற்று மாணவர்களை சமாதானப்படுத்த வேண்டியதானது. அப்போது பள்ளிகளில் இந்தி ஒரு விருப்ப மொழியாக இருந்தது. அது விலக்கி கொள்ளப்பட்டது.
அதேபோல என்.சி.சி.யில் இந்தி மொழியில் பயிற்சி மற்றும் அணிவகுப்பு இருந்ததால் அதுவும் விலக்கப்பட்டது. இதனால், தேசிய நீரோட்டத்திலிருந்து தமிழகம் விலகுவது போன்ற தோற்றம் உருவானது.
இந்தி எதிர்ப்பால் இந்தியா முழுவதும் 1980 களில் உருவான நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் வரமுடியவில்லை. இந்தியை எதிர்த்து அந்த இடத்தில் ஆங்கிலம் கற்கும் ஆர்வம் அதிகரித்துவிட்டது.
மராட்டியத்தில் இந்தி முக்கியத்துவம் பெற்று மராத்தி பின்னுக்கு தள்ளப்பட்டது. இதை எதிர்த்து சிவசேனாவின் பால்தாக்கரே மராத்திக்கு முன்னுரிமை தரும் போராட்டங்களையும், மண்ணின் மைந்தர்களான மராத்தியர்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்ற முழக்கத்தையும் வலுவாக முன்னெடுத்தார். அவர் வழியில் தற்போதும் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் செயல்படுகிறார்கள்.
தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்களில், பொதுமக்கள் கேட்கும் பட்சத்தில், பதில் தமிழிலே தரவேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. 1964-ல் நேருவும், 1968-ல் இந்திராகாந்தியும் இந்தி, ஆங்கிலம் என இரண்டையும் உள்ளடக்கிய இரு மொழி ஆட்சி கொள்கையை அமலுக்கு கொண்டு வந்து உறுதிபடுத்தினர்.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு தொடர்ந்து பேசப்பட்டு வந்தாலும், தனியார் பள்ளிகள் பெரும்பாலானவற்றில் இந்தி கற்பிக்கப்பட்டு வருகிறது, தமிழகத்தில் உள்ள இந்தி பிரசார சபாவில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் இந்தி கற்கின்றனர். இந்தி எதிர்ப்பு என்பது இன்னும் திராவிட இயக்கங்களின் அரசியல் ஆயுதமாக வலிமையோடு பார்க்கப்படுகிறது.
மேலும், ஆங்கிலத்தில் தமிழர்கள் புலமை பெற்றதால் வெளி நாடுகளில் அதிக வேலைவாய்ப்பு பெற்றனர். தொழில், வர்த்தக உறவை வளர்ப்பதிலும் ஆங்கிலம் கைகொடுக்கிறது. எனினும், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிர் துறந்தனர், ஆயிரக்கணக்கானோர் சிறைச்சாலை, போராட்டங்கள் என்று வாழ்வை அர்ப்பணித்தனர். அவர்களின் தியாகங்கள் யாவும் தமிழை காப்பதற்காகத் தான் என்பதை மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.
ஆனால், தமிழ் மொழி காப்பாற்றப்பட்டதா? என்ற சுயபரிசோதனை தேவைப்படுகிறது.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கருணாநிதி
க ருணாநிதி 1937-38-ம் ஆண்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது 14 வயது பள்ளிக்கூட மாணவனாக இருந்தார். அப்போது தான் படித்துக்கொண்டு இருந்த பள்ளிக்கூட மாணவர்களை ஒன்று திரட்டி திருவாரூர் வீதியில், புலி, வில், கயல் பதித்து இருக்கக்கூடிய தமிழ்க்கொடி ஏந்தி, ‘ஓடி வந்த இந்தி பெண்ணே கேள் - நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இதுவல்லவே’ என்று போர் பரணி பாடி, இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கி வைத்தார்.எப்போதெல்லாம் மத்திய அரசு இந்தியை கொண்டு வந்ததோ, அப்போதெல்லாம் இந்திக்கு எதிராக ஒலிக்கும் முதல் குரலாக அவரது குரல் இருந்தது. ஆட்சி பொறுப்புக்கு வந்த காலகட்டத்தில் கூட, மத்திய அரசின் அழுத்தத்திற்கு பணியாமல் இந்தியை அது எந்த வடிவத்தில் வந்த போதிலும் எதிர்ப்பதில் உறுதி காட்டினார். உச்சக்கட்ட இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் எல்லாம் கருணாநிதி தலைமை பாத்திரம் வகித்தார். அண்ணாவிற்குப் பிறகு இந்தி எதிர்ப்பு என்ற பெரு நெருப்பை அணையாமல் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுடர்விட வைத்தவர் மட்டுமல்ல, அவரது தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கூட இந்தியை எதிர்க்க வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கினார்.
இந்தியாவில் 22 இந்திய மொழிகள் அரசு அங்கீகாரம் பெற்றுள்ளது. தேசிய மொழி என்று எதுவும் கிடையாது.
* சிங்கப்பூரில் 4 மொழிகள் ஆட்சி மொழியாகவுள்ளது.
* சுவிட்சர்லாந்தில் 4 மொழிகள் ஆட்சி மொழி என்பது மாத்திரமல்ல, தேசிய கீதமே பல மொழி கலப்பாகவுள்ளது.
* தென் ஆப்பிரிக்காவில் 11 மொழிகள் ஆட்சி மொழியாகவுள்ளது.
* சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடும் உரிமை கேட்டு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தலைமை நீதிபதி நிராகரித்து விட்டார். எனினும், கீழ் கோர்ட்டுகளில் தமிழில் வாதாடும் நிலை தோன்றியுள்ளது.
* மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமான தொடர்பு மொழியாக ஆங்கிலம், இந்தி என இரண்டும் பயன்படுத்தப்படுகிறது.
* தமிழகத்தில் வருமானவரித்துறை, ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களில் மக்கள் கேட்கும் பட்சத்தில் தமிழில் பதில் தரும் நிலை உருவாகியுள்ளது.
* உச்ச நீதிமன்றத்தில் ஆங்கிலம் மட்டுமே பயன்பாட்டு மொழியாகவுள்ளது.
* அமெரிக்கா என்பது பல மொழி பேசும் சர்வதேச மக்கள் சேர்ந்து உருவான நாடு. அங்கு ஆங்கிலம், ஜெர்மனி, பிரெஞ்சு, சைனீஸ், ஆப்பிரிக்க மொழி, ஜப்பான், ஸ்பானிஸ், யூதமொழியான ஹீபு உள்ளிட்ட பல மொழியினர் வாழ்ந்தாலும் ஆங்கிலம் ஒன்றே அங்கீகரிக்கப்பட்ட ஆட்சி மொழியாக ஏற்கப்பட்டது.
* பிரான்சிலும் பல மொழி பேசுபவர்கள் வாழ்ந்தாலும் பிரெஞ்சு மொழி மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது.
* ஜெர்மனியிலும் பல மொழி இனத்தினர் இருந்தாலும் குழப்பமே இல்லாமல் ஜெர்மன் மொழியே ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவும் உள்ளது.
* இத்தாலியில் பல மொழிகள் பேசப்பட்டாலும் இத்தாலி மட்டுமே ஆட்சி மொழியாகும்.
* இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் தமிழும் ஒரு ஆட்சி மொழியாகவுள்ளது.
* ரீயூனியன், செசல்ஸ், வட அமெரிக்கா எனப்படும் கனடா ஆகியவற்றில் தமிழ் அந்த நாட்டு அரசுகளால் பண்பாட்டு மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
* உலக தொடர்பு மொழியான ஆங்கிலம், தமிழர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை தந்துள்ளன.
Related Tags :
Next Story






