அரசியல் ரீதியாக அங்கீகாரம் கிடைத்தாலும் 10 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேறுவதில் சிக்கல்


அரசியல் ரீதியாக அங்கீகாரம் கிடைத்தாலும் 10 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேறுவதில் சிக்கல்
x
தினத்தந்தி 18 July 2019 7:22 AM GMT (Updated: 18 July 2019 7:22 AM GMT)

சமீபத்தில் தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் பொருளாதார ரீதியில் முன்னேறிய பிரிவினருக்கு பத்து சதவீதம் கல்வி, வேலைவாய்ப்பில் இடம் ஒதுக்குவது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த சட்டதிருத்தம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் நடத்தியது.

மீபத்தில் தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் பொருளாதார ரீதியில் முன்னேறிய பிரிவினருக்கு பத்து சதவீதம் கல்வி, வேலைவாய்ப்பில் இடம் ஒதுக்குவது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த சட்டதிருத்தம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் நடத்தியது. ஏனெனில், இந்த பத்து சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மருத்துவக்கல்வியில் 25 சதவீதம் கூடுதலான இடங்கள் தரப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.

இதில் பத்து சதவீத இடஒதுக்கீட்டை பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் ஆகிய 5 கட்சிகள் ஆதரித்தன. ஆனால், தி.மு.க., திராவிடர் கழகம், பா.ம.க., ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட 16 கட்சிகள் எதிர்த்தன. ஆளும் கட்சியான அ.தி.மு.க. தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. அதே சமயம் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பக்குவமாக, ‘இந்தியாவிலேயே சமூகநீதியை நிலைநாட்டும் வண்ணம் தமிழகத்தில் தான் 69 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது. அதற்கு எந்த விதத்திலும் பாதகம் நேராத வண்ணம் சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி நிச்சயம் ஆவன செய்யப்படும்’ என்றார்.

பா.ஜ.க.வும், பத்து சதவீதமும்!

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 7-ந் தேதி பா.ஜ.க. அரசு நாடாளுமன்றத்தில் பொருளா தாரத்தில் நலிந்த பிரிவினருக்கு பத்து சதவீத இடஒதுக்கீடு என்ற மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்றியது. அதன்பிறகு ஜனவரி 10-ந் தேதி ராஜ்ய சபாவிலும் இம்மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கடுத்து இம் மசோதாவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜனவரி 12-ந் தேதி ஒப்புதல் அளித்தார்.

எனினும், ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தற்போதைய 50 சதவீத இடஒதுக்கீட்டை ஒரு போதும் அதிகப்படுத்தக்கூடாது என கறாராக கூறியுள்ள நிலையில், பரவலாக எல்லா மாநிலங்களிலும், ஆதரவு பெறவும், இதை வாக்குவங்கியாக மாற்றவும் பா.ஜ.க. விரும்புகிறது. இதற்கு இந்தியா முழுமையிலும் பரவலான வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் இதற்கு முழுமையான வரவேற்பு பெற முடியவில்லை.

தமிழகமும், இட ஒதுக்கீடும்!

இடஒதுக்கீட்டில் தமிழகம் இந்தியாவிற்கே ஒரு முன்னோடி மாநிலமாகும். இடஒதுக்கீடு, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் போன்ற குரல்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க நிலையிலேயே தமிழகத்தில் ஒலித்தன. இந்தக்குரலை அரசியல், சமூக அரங்கில் வலுவாக ஒலித்தவர் பெரியார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

1928-ம் ஆண்டு சுப்பராயன் முதல்-அமைச்சராக இருந்தபோதும், 1947-ம் ஆண்டு ஓமந்தூர் ராமசாமி முதல்-அமைச்சராக இருந்தபோதும் முன்னேறிய பிரிவினரை உள்ளடக்கிய வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது கவனத்திற்குரியது. 1950-களில் தமிழக இட ஒதுக்கீடு அணுகுமுறைக்கு பிரச்சினை வந்தபோது அன்றைய பிரதமர் நேருவிடம் பேசி அரசியல் சட்ட திருத்தத்தின் மூலமாக அதை காப்பாற்றியவர் காமராஜர்.

காமராஜர் ஆட்சிக்காலத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 16 சதவீத இடஒதுக்கீடும், பொதுப்பிரிவினருக்கு 59 சதவீத இடஒதுக்கீடும் இருந்தது.

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் குறிப்பாக 1971-ல் ஏ.என்.சட்டநாதன் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் அமைக்கப்பட்டு பரிந்துரை பெறப்பட்டது. அதன்படி பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 31 சதவீதமும், தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவீதமும், பொதுப்பிரிவினருக்கு 51 சதவீதமும் ஏற்பாடானது. தந்தை பெரியாரின் ஆலோசனையிலும், ஆசீர்வாதத்திலும் இது நிறைவேற்றப்பட்டதாக கருணாநிதி கூறினார்.



கருணாநிதியை அடுத்து பதவிக்கு வந்த எம்.ஜி.ஆர். பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக்கினார். தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவீதம், பொதுப் பிரிவுக்கு 32 சதவீதம் என நிர்ணயித்தார். இதனால் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு வெகுவாக உயர்ந்தது. இதனால் எம்.ஜி.ஆரை விடவும் தன் செல்வாக்கை உயர்த்த நினைத்த கருணாநிதி மீண்டும் தான் ஆட்சிக்கு வந்தபோது இட ஒதுக்கீட்டை மொத்தம் 69 சதவீதம் என உயர்த்தினார்.

இடஒதுக்கீட்டின் இமயமான தமிழகம்!

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு அதிகமாக இடஒதுக்கீடு கிடையாது. இது தமிழகத்திற்கு மட்டும் எப்படி சாத்தியமாயிற்று என்று இந்தியாவே இன்று வரை தமிழகத்தின் இடஒதுக்கீட்டு சாதனையை வியந்து பார்க்கிறது. ஆனால், இதில் ஒரு சூட்சுமம் உள்ளது. தமிழகம் சமூகநீதிக்கே முன்னோடி மாநிலம் என்பது ஒருபுற மென்றாலும், கருணாநிதி பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அதிகமாக்கியபோது, முன்னேறிய வகுப்பில் அதுவரை இருந்த 30 சதவீதமானவர்களை எடுத்து, பிற்டுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்துவிட்டார். ஆகவே, எந்த பிரச்சினையும் எழவில்லை.

அதேபோல எம்.ஜி.ஆரும் தன் பங்கிற்கு 5 சதவீத முன்னேறிய பிரிவினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்தார். இதனால் சமூகநீதி காத்த பெருமையோடு பலன் அடைந்த பிரிவினரின் ஓட்டுகளையும் அறுவடை செய்ய முடிந்தது.

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இடஒதுக்கீட்டிற்கு சோதனை வந்தது. வழக்கறிஞர் விஜயன் தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து 1992-ல் சுப்ரீம் கோர்ட்டு சென்றார். இடஒதுக்கீட்டின் வரம்பான 50 சதவீதத்திற்கும் மேலாக தமிழகம் ஒதுக்கியது செல்லாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இட ஒதுக்கீட்டை கட்டிக்காப்பாற்றாவிட்டால் தன் அரசியல் செல்வாக்கை தமிழகத்தில் நிலை நிறுத்த முடியாது என்று உணர்ந்த ஜெயலலிதா உடனடியாக போர்க்கால நடவடிக்கை எடுத்தார். கடந்த 1993-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி சட்டமன்றத்தைக் கூட்டி 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினார். அதையடுத்து தமிழகமே மிரளும் வண்ணம் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக ஒரு ‘பந்த்’ நடத்தினார்.

அனைத்து கட்சி கூட்டம் நடத்தி ஆதரவு பெற்று, இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் வண்ணம் அரசியல் சட்டத்தின் 31(பி) மற்றும் 31(சி) பிரிவுகளின் கீழ் தனிச்சட்டம் ஒன்றை தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். அதற்கு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் 1994-ல் அங்கீகாரமும் கிடைத்தது.

இந்த வகையில் 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட அது அரசியல் சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டு 76-வது திருத்தம் ஒருமனதாக நிறைவேறியது. அதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் கொடுத்தார்.

மண்டல் கமிஷனும் மத்திய அரசுகளும்!

1978-ல் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த ஜனதா ஆட்சியில், அப்போதைய உள்துறை மந்திரி சரண்சிங்கால் நீதிபதி பிந்தேஸ்வர் பிரசாத் மண்டல் தலைமையில் 5 பேரை உறுப்பினர்களாக கொண்டு குழு அமைக்கப்பட்டது. இது மண்டல் கமிஷன் என்று அழைக்கப்பட்டது. நீதிபதி மண்டல் குழு பல மாநிலங்களில் களப்பணியாற்றி, கருத்து கேட்டு தன் அறிக்கையை டிசம்பர் 31, 1980-ல் மத்திய அரசுக்கு சமர்பித்தது. அதில் இந்தியா முழுமையிலும் உள்ள 2 ஆயிரம் சாதிகளை பிற்படுத்தப்பட்டதாக அடையாளப்படுத்தியது. இவர்கள் மொத்த மக்கள் தொகையில் 52 சதவீதம் என்றது. ஆகவே பின்தங்கிய நிலையில் உள்ள இவர்களுக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு செய்யலாம் என மண்டல் குழு பரிந்துரைத்தது.

இந்த பரிந்துரையை அடுத்து வந்த ஆட்சியாளர்கள் அமல்படுத்தாமல் கிடப்பில் போட்டுவிட்டனர். ஆனால், 1989-ல் ஆட்சிக்கு வந்த வி.பி.சிங் 7.8.1990 மண்டல் பரிந்துரையை அமல்படுத்தினார். இதன் விளைவாக முற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்கள் பெரிய போராட்டங்களை முன்னெடுத்தனர். இதன் விளைவாக வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்தது.

இந்திரா சஹாணி என்பவர் மண்டல் அமலாக்கத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஜீவன்ரெட்டி தலைமையிலான 9 பேர் கொண்ட அமர்வு மண்டல் கமிஷன் அமலாக்கத்தை 16.11.1992-ல் அங்கீகரித்தது. அப்போது தான் ‘இனி மேல் இட ஒதுக்கீடு என்பது எக்காரணம் கொண்டும் 50 சதவீதத்திற்கு மேல் செல்லக்கூடாது’ என கறாராக தீர்ப்பு வழங்கியது. இது தான் இன்றைய 10 சதவீத இடஒதுக்கீட்டை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

யார் ஏழை?

வருடம் 8 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்களையோ, கிராமத்தில் 5 ஏக்கரோ, நகரத்தில் ஆயிரம் சதுர அடியையோ உரிமையாக கொண்டிருப்பவர்களையோ வாய்ப்பு பெறத்தக்க ஏழைகளாக மத்திய அரசு வரையறுத்து உள்ளது. இந்த அளவுகோலும், இதுபோன்ற வியாக்கியானங்களும் ஏற்புடையதல்ல என்ற வாதங்களும் வைக்கப்படுகிறது.

பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு!

எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது பொருளாதார ரீதியாக முன்னேறிய சாதிகளுக்கு இட ஒதுக்கீடு தரலாம் என முயற்சித்தார். ஆனால், அன்று தமிழகத்தில் இதற்கு எழுந்த பெரிய எதிர்ப்பின் காரணமாக உடனே கைவிட்டார்.

அதன் பிறகு நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு தர முயற்சித்தபோது சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை காரணம் காட்டி தடுத்துவிட்டது. ஆகவே தான் தற்போது அரசியல் ரீதியாக 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு அங்கீகாரம் கிடைத்தாலும் கோர்ட்டு இதை அனுமதிக்குமா? என்ற சந்தேகம் உள்ளது.

10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்

ஆற்காடு முதலியார், வெள்ளாள முதலியார் உள்ளிட்ட முதலியார்கள்

பிராமணர்கள்

ஆங்கிலோ இந்தியர்

ரோமன் கத்தோலிக் உள்ளிட்ட கிறிஸ்தவர்களின் ஆறு பிரிவினர்

இந்து உயர்சாதியில் இருந்து கிறிஸ்தவராக மாறியவர்கள்

தாவூத், மீர், மைமன், நவாப், லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் உள்ளிட்ட சுமார் பத்து வகை முஸ்லிம் பிரிவினர்

செட்டியார்களின் பல பிரிவுகள்

வெள்ளாளர்களின் பல பிரிவுகள்

பலிஜா நாயுடுகள்

ரெட்டியார்களின் பல பிரிவுகள்

ஆதி சைவர்கள் வீர சைவர் உள்ளிட்ட சைவர்கள்

சைவ சிவாச்சாரியர்கள், ஓதுவார்கள்

நாயர்கள் (மேனன், நம்பியார் உள்ளிட்டோர்)

Next Story