யானைகளின் வாழ்விடத்தைக் காப்போம்


யானைகளின் வாழ்விடத்தைக் காப்போம்
x
தினத்தந்தி 12 Aug 2019 6:23 AM GMT (Updated: 12 Aug 2019 6:23 AM GMT)

இன்று (ஆகஸ்டு 12-ந்தேதி) உலக யானைகள் தினம்.

இந்தியாவில் மனிதர்கள் யானைகளை சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தங்களது தேவைகளுக்காகப் பயன்படுத்த ஆரம்பித்தனர். யானைகளின் படை பலத்தை வைத்து மன்னர்கள் பெருமை அடைந்தனர். இதன்மூலம் யானைகளுக்கு என்று ஒரு சரித்திரப் புகழ் ஏற்பட்டது. விவசாயத்திற்காகவும், அதை சார்ந்த பணிகளுக்கும் யானைகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன என்பது வரலாறு சொல்லும் உண்மை. யானைகளின் பழங்காலப் பயன்பாட்டை கோவில் சிற்பங்களில் இன்றும் நம்மால் பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட யானைகள் நமது நாட்டின் தேசிய பாரம்பரிய விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளன.

வனப்பகுதிகளைச் செழுமையாக்கக் கூடிய இயற்கைப் பொறியாளர் என்றும், யானைகளை அழைக்கலாம். யானைக் கூட்டம் அது நடமாடும் பகுதியில் உள்ள அனைத்து வனப்பகுதிகளிலும் பல்லுயிர் பெருக்கத்தைப் பேணிக் காக்கிறது. பறவைகள் முதல் புலிகள் வரை யானைகளால் நன்மை அடைகின்றன. வண்ணத்துப்பூச்சி, சிறு வண்டுகள், மீன்கள் போன்ற உயிரினங்களும் யானைகளைச் சார்ந்துள்ளன. பலதரப்பட்ட வனங்களான இலையுதிர்க் காடுகள், ஈரப்பசை கொண்ட இலையுதிர்க் காடுகள், பசுமைமாறாக் காடுகள், மூங்கில் வனங்கள் மற்றும் புல்வெளி போன்றவை யானைகள் வாழும் முக்கிய வனப்பகுதிகள் ஆகும். இந்தியாவில் சுமார் 65 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு யானைகளின் வாழ்விடப் பகுதியாக இருக்கிறது. இந்தியாவில் 16 மாநிலங்களில் யானைகள் இருக்கின்றன. 2018-ம் ஆண்டு யானைகள் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் சுமார் 27 ஆயிரத்து 312 யானைகள் இருக்கின்றன. ஆசிய யானைகளின் மொத்த எண்ணிக்கை 52 ஆயிரத்து 345 ஆகும். ஆசிய யானைகள் 13 நாடுகளை உறைவிடமாகக் கொண்டுள்ளன. இவற்றில் 52 சதவீத யானைகள் இந்தியாவில் மட்டும் இருக்கின்றன.

பொதுவாக யானைகள் தந்தத்திற்காக வேட்டையாடுகின்றனர். தற்போது இது குறிப்பிட்ட அளவுக்கு குறைந்து இருக்கிறது. மாறாக யானைகள் வழிமாறி புதிய வனப்பகுதிக்கு அல்லது விளை நிலப்பகுதிகளுக்குச் செல்லும்போது ரெயில் தண்டவாளம், உயர் அழுத்த மின் கோபுரம், மின்சார வயர் போன்றவற்றில் சிக்கி அதிகமாக இறக்க நேரிடுவது அதிகரித்திருக்கிறது. 2009 முதல் 2017-ம் ஆண்டு வரை சுமார் 655 யானைகள் இப்படிப்பட்ட காரணங்களால் இறந்திருக்கின்றன. சமீப காலமாக, இந்தியாவில் தினந்தோறும் ஒரு மனிதன் யானை தாக்கி மரணம் அடைவதாக தகவல் உள்ளது.

மத்திய அரசாங்கத்தால் 1982-ம் ஆண்டு யானைகள் பாதுகாப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் உள்ள யானைகளின் வாழ்விடப் பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் நீலகிரி, கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதி, ஆனைமலை, நெல்லியாம்பதி உயர் மலைப்பகுதிகள், பெரியார் அகஸ்தியர் மலை நிலப்பரப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் யானைகள் பாதுகாக்கப்பட்ட பகுதி, நிலம்பூர் அமைதிப் பள்ளத்தாக்கு மற்றும் கோயம்புத்தூர், நீலகிரி முக்குருத்தி, முதுமலை, கூடலூர் போன்ற பகுதிகள் மத்திய அரசாங்கத்தினால் யானைகள் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் தமிழ்நாட்டு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள் போன்றவை யானைகளுக்கு மிகவும் உகந்ததாக இருக்கின்றன. யானைக் கூட்டங்கள் இந்த மலைகளை பயன்படுத்தி இடப்பெயர்ச்சி செய்து தங்களின் முக்கிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கின்றன. உணவு தேடியும், வெப்பத்தைத் தணிக்கவும், யானைகள் பல பகுதிகளுக்கு நகர்ந்து வருகின்றன. இனவிருத்திக்காகவும், பூச்சி தொந்தரவுகளைத் தவிர்க்கவும், காட்டுத் தீயில் இருந்து தப்பிக்கவும், விவசாயப் பயிர்களைத் தேடியும் யானைகள் இடப்பெயர்ச்சி செய்கின்றன. வனப்பகுதிகளில் இருக்கும் யானை வழித்தடங்கள் மிக மிக முக்கியமான வாழ்விடங்களாகும். யானைகளின் சுதந்திரமான இடப்பெயர்ச்சி பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்து, அவற்றைப் பாதுகாக்க பல திட்டங்களை வனத்துறை செயல்படுத்தி வருகிறது. யானை மனிதன் முரண்பாடு ஒரு சவாலாக இருக்கிறது. இந்த முரண்பாட்டைத் தவிர்ப்பதற்கு நீண்ட கால அடிப்படையில் பல திட்டங்களை வனத்துறை வகுக்க வேண்டும். மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட நில ஆக்கிரமிப்பு, வனத்தை ஒட்டி பயிர் செய்தல், வனப்பகுதி சுற்றுச்சூழலைக் கெடுத்தல், ஆடுமாடு மேய்த்தல், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளின் அருகே அமைந்திருக்கும் தொழிற்சாலைகள், பள்ளி-கல்லூரி வளாகங்கள், தனியார் தோட்டங்கள், காபி தேயிலைத் தோட்டங்கள், இதர துறைகளின் வளர்ச்சிப் பணிகள் போன்றவை இதற்கு முக்கியமான காரணமாகும்.

பருவநிலை மாற்றம் காரணமாக யானையின் வாழ்விடப் பகுதியில் உள்ள முக்கியமான உணவு இனங்கள் மற்றும் இதர தாவர செடிகளின் அடர்த்தி மற்றும் இயற்கையில் யானைகளுக்கு கிடைக்கக் கூடிய பிரதான உணவுகள் குறைய ஆரம்பித்து இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் அனைத்து யானை வழிகளிலும் பரவி இருக்கும் உன்னிச் செடிகள். யானைகளுக்கு தாராளமாகக் கிடைக்கக் கூடிய புல் வகைகளை இவை அழித்து விடுகின்றன. பொதுவாக யானைகள் சுமார் 60 முதல் 70 சதவீத உணவை, புல் வகைகள் மூலம் பெறும். சுமார் 100-க்கும் மேற்பட்ட புல் இனங்கள் யானைகளுக்கு பிரதான உணவாக இருக்கின்றன. ஒவ்வொரு புல் வகையும் யானைகளுக்குத் தேவையான புரதச் சத்தையும், தாது உப்புக்களையும் அளித்து அவைகளின் உடலை சீராக வைத்துக் கொள்வதற்கு உதவுகிறது.

தாது உப்புக்கள் நிறைந்த புல்வகைகளை யானைகள் விரும்பிச் சாப்பிடும். தற்போது இந்த வகை புல்வகைகளைப் பார்ப்பது அரிதாகத் தான் இருக்கிறது. தற்போது அனைத்து யானைகள் வாழ்விடப் பகுதிகளிலும் இருக்கும் உன்னிச் செடிகளை வனத்துறை அகற்றி வருகிறது. இந்த திட்டத்திற்கு மேலும் ஊக்கம் அளித்து, நீர் மேலாண்மைத் திட்டங்களின் மூலம் யானைகளின் வாழ்விடப் பகுதிகளை உண்டாக்கி, ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையில் அவை வாழ திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மனிதர் யானை மோதல்களைத் தடுப்பதற்கு, யானை ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு வனத்துறையில் பணிபுரியும் வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கும், யானை விரட்டும் குழுக்களுக்கும் பயிற்சி வகுப்புகள் வனத்துறையால் நடத்தப்பட்டு வருகிறது. யானைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க தமிழகத்தில் தான் வேட்டை தடுப்புக் காவலர்கள் முதுமலை பகுதியில் முதன் முதலில் நியமிக்கப்பட்டனர். இதன் அடிப்படையில் பல மாநிலங்கள் இந்தத் திட்டத்தை இப்போது அமலாக்கி வருகின்றன.

அழியும் தருவாயில் உள்ள வன உயிரினமாக இந்திய வனவிலங்கு சட்டம் 1972-ன் மூலம் யானை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில, பன்னாட்டு அமைப்புகள் மூலம் யானைகளின் எண்ணிக்கை காப்பாற்றப்பட்டு வருகிறது. யானைகளின் வாழ்விடத்தைக் காப்பாற்ற மக்களின் பங்களிப்புடன் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசால் சட்ட வடிவங்கள் உருவாக்கப்பட்டு, அவை மாநில அரசால் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. யானைகளின் சமூக வாழ்க்கை முறைகளும், குணாதிசயங்களும் மனிதர்களைச் சார்ந்தே அமைந்திருக்கின்றன. யானைகளை மனிதர்கள் பார்க்கும் பார்வை மாறுபட வேண்டும். யானைகளையும், அதன் இருப்பிடத்தையும் காப்பாற்றுவதில் நம் பங்கு சிறப்பாக இருக்க வேண்டும்.

முனைவர். ந.சிவகணேசன்,
யானை ஆராய்ச்சியாளர்,
சுற்றுச்சூழல் கல்வி அலுவலர்,
கிண்டி பாம்பு பண்ணை.

Next Story