ஒரு வருடம் படிக்க 2 ரூபாய் போதும்


சுஜித் சட்டோபாத்யா வீட்டில் படிக்கும் மாணவிகள்; சுஜித் சட்டோபாத்யா
x
சுஜித் சட்டோபாத்யா வீட்டில் படிக்கும் மாணவிகள்; சுஜித் சட்டோபாத்யா
தினத்தந்தி 29 Sept 2019 2:25 PM IST (Updated: 29 Sept 2019 2:25 PM IST)
t-max-icont-min-icon

மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் வருடத்திற்கு இரண்டு ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலித்து பாடங்களை கற்றுக்கொடுக்கிறார்.

அவரது பெயர் சுஜித் சட்டோபாத்யா. மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா அருகில் உள்ள ஆஸ்கிராம் என்ற கிராமத்தை சேர்ந்தவர். 76 வயதாகும் இவர் ராம்நகரில் உள்ள பள்ளியில் முதல்வராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு காலத்தில் பொழுதை போக்குவதற்கு சிரமப்பட்டவர்,பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு டியூசன் நடத்த தொடங்கிய பிறகு மன நிறைவு கிடைத்திருப்பதாக கூறுகிறார்.

‘‘என்னிடம் படிக்கும் மாணவர்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள்.அவர்களில் பலர் 25 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்துவந்து படிக்கிறார்கள். சிலர் கால் நடையாக பல மைல் தூரம் நடந்து வருகிறார்கள். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன்’’ என்கிறார்.

சுஜித் பணி ஓய்வு பெற்றதும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்திருக்கிறார். பொழுதை போக்குவதும் அவருக்கு கஷ்டமாக இருந்திருக்கிறது. அந்த சமயத்தில் 3 மாணவிகள் அவரை சந்தித்து தங்களுக்கு பாடங்களை கற்றுத் தருமாறு கேட்டிருக் கிறார்கள். அவர்கள் 20 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து வந்திருப்பதை அறிந்து ஆச்சரியப்பட்டவர், வீட்டையே பள்ளிக்கூடமாக மாற்றி பாடம் நடத்த தொடங்கி இருக்கிறார். சுற்றுப்புற பகுதியில் பள்ளிக்கூடங்கள் குறைவாக இருந்ததாலும், அங்கு தரமான கல்வி கிடைப்பது சவாலான விஷயமாக இருந்ததாலும் சுஜித்தின் வீட்டுக்கு சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. பள்ளி மட்டுமின்றி கல்லூரியும் 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அதனால் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி கல்லூரி மாணவர்களும் சுஜித்தின் வீடு தேடி வந்து படிக்கிறார்கள்.

தற்போது 350 மாணவர்களுக்கு சுஜித் கல்வி போதித்து வருகிறார். பாடங்களுடன் சமூக விழிப்புணர்வையும் விதைத்து வருகிறார். சுஜித்தின் வீட்டில் காலை 6.30 மணிக்கு வகுப்பு தொடங்கிவிடுகிறது. குளிர் காலங்களில் சூரிய உதயத்திற்கு முன்பாக 6 மணிக்கே வகுப்பு ஆரம்பமாகிவிடுகிறது. குளிரையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் ஆர்வமாக வந்து பாடம் படிக்கிறார்கள். சுஜித்திடம் சந்தேகங்களை கேட்டு தெளிவுபெறுகிறார்கள். அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் கட்டணமாக ஒரு ரூபாய்தான் வசூலித்து வந்திருக்கிறார். முன்னாள் மாணவர்கள் கட்டணத்தை உயர்த்துமாறு கட்டாயப்படுத்தியதன் காரணமாக தற்போது 2 ரூபாய் வசூலிக்கிறார்.

‘‘கட்டணம் என்பது ஆசிரியருக்கு மரியாதை செலுத்துவதற்கான அடையாளமாகவே விளங்குகிறது. இந்த மாணவர்கள் குறைந்த வருமானம் கொண்ட ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் பெரும்பாலானோர் முதல் தலைமுறை கல்வி பயிலும் மாணவர்கள். நல்ல தரமான பள்ளியில் சேர்ந்து படிப்பதற்காக அவர்களால் தினமும் பல மணி நேரம் பயணம் செய்ய முடியாது. இப்போதே அதிக தூரம் சென்றுதான் படிக்கிறார்கள். அவர்கள் நன்றாக படிப்பதற்காக என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்’’ என்கிறார்.

சுஜித் 2004-ம் ஆண்டு முதல் டியூசன் எடுத்து வருகிறார். அவரிடம் படிப்பவர்களில் 80 சதவீதம் பேர் மாணவிகள். பள்ளி தேர்வுகளில் இவரிடம் படிக்கும் மாணவிகள் நல்ல மதிப்பெண்கள் பெறுகிறார்கள்.
1 More update

Next Story