மீனவர்களுக்கு பழங்குடியினர் அங்கீகாரம் தேவை


மீனவர்களுக்கு பழங்குடியினர் அங்கீகாரம் தேவை
x
தினத்தந்தி 21 Nov 2019 6:08 AM GMT (Updated: 21 Nov 2019 6:08 AM GMT)

இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் வாழும் பாரம்பரிய மீனவர்களுக்கு இரண்டு முக்கிய கோரிக்கைகள் உள்ளது.

ன்று (நவம்பர் 21-ந்தேதி) உலக மீனவர்கள் தினம்

இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் வாழும் பாரம்பரிய மீனவர்களுக்கு இரண்டு முக்கிய கோரிக்கைகள் உள்ளது., நாட்டில் வாழும் அனைத்து பாரம்பரிய மீனவர்களையும் இந்திய பழங்குடியினராக மத்திய அரசு அங்கீகாரம் அளித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்பது முதலாவது கோரிக்கையாகும்.

வனங்களிலும், மலைகளிலும் வாழும் பழங்குடியின மக்களுக்கான, 2006-ம் ஆண்டில் மத்திய அரசால் சட்டமாக்கப்பட்ட “பழங்குடியினர் மற்றும் வனங்களில் வாழும் வன உரிமை சட்டம்” போன்று, நாடு முழுவதும் வாழும் அனைத்து பாரம்பரிய மீனவர்களுக்கென கடல் சார்ந்து கடற்கரையிலும், உள்நாட்டு நீர் நிலைகளை சார்ந்து அருகாமை பகுதிகளிலும் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மீனவ மக்களுக்கு அங்கீகாரமும், அப்பகுதிகளின் உரிமைகளை பாதுகாக்கவும் உரிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாழும் பாரம்பரிய மீனவர்களின் இரண்டாவது பிரதான கோரிக்கையாகும்.

இந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம், கேரளா, கர்நாடகா, கோவா, மராட்டியம், குஜராத், டையுடாமன், அந்த மான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய 13 மாநிலங்கள் கடற்கரையை கொண்ட மாநிலங்களாகும். இதில் அந்த மான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய இரண்டும் தனித்தனி தீவுகளின் கூட்டங்களாகவும், மற்ற 11 மாநிலங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிலப்பரப்பிலும் அமைந்துள்ளன. 9 யூனியன் பிரதேசங்கள் உள்ளன.

இவற்றுள் மொத்த 13 கடற்கரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச கடற்கரையின் நீளம் 7516.6 கிலோ மீட்டராகும். அதில் 2 தீவு யூனியன் பிரதேசங்களின் கடற்கரையின் நீளம் 2094 கிலோ மீட்டர் தொலைவும், ஒருங்கிணைந்த நிலப்பரப்பின் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச கடற்கரை நீளம் மொத்தம் 5422.6 கிலோ மீட்டராகவும் உள்ளது. மொத்தம் உள்ள 7516 கிலோ மீட்டர் கடற்கரையில் வாழ்ந்து கொண்டு பாரம்பரியமாக, தலைமுறை தலைமுறையாக தங்கள் முன்னோர்களின் மீன்பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு கடலில் மீன்பிடித்து வாழ்பவர்கள் பாரம்பரிய பழங்குடியின மீன்வர்களாவார்கள்.

அதே போல், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கங்கா, யமுனா, பிரம்மபுத்ரா, நர்மதா, சாம்பல், காவேரி, பியாஸ், தப்தி, கோதாவரி, கிருஷ்ணா, சரஸ்வதி, செனாப் ஆகிய 12 வற்றாத மிகப்பெரிய ஜீவ நதிகளும் 400 ஆறுகளும், லட்சக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் பாய்ந்தோடிக்கொண்டு இருக்கின்றன. மிகப்பெரிய ஏரிகள், சிறிய அளவிலான ஏரிகள், குளங்கள், குட்டைகள் ஏராளம் உள்ளன.

இத்தகைய ஜீவ நதிகள், ஆறுகள், அணைக்கட்டுகள், ஏரிகள், குளம் குட்டைகள், ஆகியவற்றுக்கு அருகாமையில் கரைகளில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து கொண்டு வாழ்வாதாரமாக மீன்பிடி தொழிலை பாரம்பரியமாக மேற்கொண்டு உள்நாட்டு மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கடல் மீனவர்கள் மற்றும் நீர் நிலைகளில் மீன்பிடிக்கும் உள்நாட்டு மீனவர்கள் அனைவரும் 95 சதவீதத்தினர் மீன்பிடி தொழிலை மட்டுமே அறிந்தவர்களாக அதை மட்டுமே நம்பி வாழ்பவர்களாக இருக்கின்றனர். முழு நேரம் முழுமையாக உழைத்தாலும் கடலில் சென்று ஓரிரு நாட்கள், சில நாட்கள், பல நாட்கள் தங்கியிருந்து மீன் பிடித்தாலும் பல நேரங்களில் வெறுங்கையுடனோ, போதிய வருவாய் இல்லாமலோ திரும்ப வேண்டியுள்ளது.

உண்மையான மீன்பிடி தொழிலில் ஈடுபடும் பாரம்பரிய மீனவர்கள் வாழ்வியலை, வாழ்வாதாரங்களை பற்றி ஏராளமாக சொல்ல முடியும். ஆனால் ஒட்டு மொத்தமாக சொல்ல வேண்டுமானால், வனங்களில், மலைகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கு ஒப்பான வாழ்க்கை வாழ்ந்து வரும் ஒடுக்கப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, அடக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே ஒதுக்கப்பட்டு கூடி வாழும் சமூகமான மீனவ சமுதாயம் இந்தியாவின் பழங்குடியின பூர்வீக குடிமக்கள் என்பதையாகும் யாரும் மறுக்க இயலாது.

அதனால் தான் மொரார்ஜி தேசாய் தலைமையிலான மத்திய அரசு அமைத்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், “இந்தியாவில் வாழும் மீனவர்களை போன்ற ஒரு சில குறிப்பிட்ட பிரிவு சமுதாய மக்களை தாழ்த்தப்பட்டோர்களாக, பழங்குடியினராக அங்கீகரிக்க அரசு ஆவன செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தனர். அத்தகைய பரிந்துரைகளை நிறைவேற்றக்கோரி கடந்த 30 ஆண்டுகளாக மீனவர்கள் நாடு முழுவதும் போராடி வருகின்றனர்.

தேசிய மீனவர் பேரவை உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில, மாவட்ட மீனவர் அமைப்புகள் மூலம் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

மீனவர்கள் வாழ்வியல் சார்ந்து பல்வேறு கோரிக்கைகள் ஆண்டாண்டு காலமாக முன் வைக்கப்பட்டு வந்தாலும் சமீப சில ஆண்டுகளாக 3 முக்கிய கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. தற்போது 3 கோரிக்கைகளில் ஒன்றான மத்திய அரசில் மீனவள அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது ஏப்ரல் 14-ந் தேதி மங்களூருவில் மீனவர்கள் மத்தியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர். நரேந்திரமோடி மீண்டும் ஆட்சி அமைந்தவுடன் மீன் வளத்துக்கென அமைச்சகம் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

மீண்டும் பிரதமர் பொறுப்பெற்ற மறு நாளே மத்திய அரசில் விவசாய அமைச்சகத்தோடு 70 ஆண்டுக்களாக ஒரு அங்கமாக, ஒரு துறையாக இருந்ததை பிரித்து “மீன்வளம் கால் நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம் ” என்ற பெயரில் அமைச்சகம் உருவாக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மூன்று பிரதான கோரிக்கைகளுள் ஒரு கோரிக்கை நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி அளித்தாலும் மீதம் இரண்டு பிரதான கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதை எதிர் பார்த்து மக்கள் தினம் தினம் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்தியாவில் வாழும் அனைத்து பாரம்பரிய மக்களையும், மொழி, இனம், மதம் பார்க்காமல் பழங்குடியினராக மத்திய அரசு அங்கீகரித்து அறிவிக்க வேண்டும். 2006-ம் ஆண்டில் சட்டமாக்கப்பட்ட “பழங்குடியினர் மற்றும் வனங்களில் வாழும் மக்களுக்கான அங்கீகாரம் மற்றும் வன உரிமை சட்டம்” போன்று மீனவர்கள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் உடனடியாக மத்திய அரசு கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும். இந்த இரண்டு பிரதான கோரிக்கைகள் மூலம் கல்வியில், வேலை வாய்ப்பில், பொருளாதாரத்தில், சமூக அந்தஸ்தில், அரசியல் அதிகாரங்களில் பயன்பெற முடியும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

உலகம் முழுவதும் இன்று உலக மீனவர்கள் தினம் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. மீன் வளம் பெருகினால், மீனவர்கள் வாழ்வு வளம் பெரும் என்ற நம்பிக்கையினால் உலக மீனவர்கள் தினம் கடைபிடிக்கப்படும் இந்நாளில் இந்திய பாரம்பரிய மீனவர்களின் நீண்ட கால கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றித் தர வேண்டும்.

எம்.இளங்கோ, தலைவர், தேசிய மீனவர் பேரவை

Next Story