மக்கள் சேவையில் மகத்துவம்.. 2 ரூபாய்க்கு மருத்துவம்..


டாக்டரின் பரிசோதனையின்போது
x
டாக்டரின் பரிசோதனையின்போது
தினத்தந்தி 24 Nov 2019 7:07 AM GMT (Updated: 24 Nov 2019 7:07 AM GMT)

42 வருடங்களுக்கு முன்பு ஒருநாள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இளைஞர்கள் சிலர் சேர்ந்து நடை பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர்கள்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த பகுதியில் சமூக சேவை செய்து வந்த அவர்கள், ‘சமூக சேவைக்கு கூடுதல் நேரத்தை ஒதுக்கி என்னென்ன செய்யலாம்?’ என்று விவாதித்துக்கொண்டே நடந்து போயிருக் கிறார்கள். ‘சமூக சேவையில் அக்கறை கொண்ட மேலும் பல இளைஞர்களை ஒருங்கிணைத்து முதலில் ஒரு சங்கத்தை உருவாக்குவோம். அதன் மூலம் கூடுதல் பணிகளை செய்வோம்!’ என்று முடிவெடுத்திருக்கிறார்கள். அந்த முடிவை எடுத்தபோது அவர்கள் ஸ்ரீனிவாச பெருமாள் வீற்றிருக்கும் திருப்பதி மலையின் உச்சியை அடைந்திருக் கிறார்கள். அதனால் திருப்பதி ஏழுமலையான் பெயரிலே ‘ஸ்ரீனிவாஸ் இளைஞர்கள் நற்பணி சங்கம்’ (சைமா) என்று உருவாக்கிவிட்டார்கள்.

1977-ம் ஆண்டு முதல் திருவல்லிக்கேணியில் சமூக சேவையில் ஈடுபட்டிருக்கும் ‘சைமா’, தமிழக அரசு மழைநீர் சேமிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முன்பே சென்னையில் அதனை நடைமுறைப் படுத்தி வெற்றிகண்டு முன்னுதாரணமாகி இருக்கிறது. இவர்களது சேவைக்கு அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து பாராட்டும் கிடைத்திருக்கிறது.

                  டாக்டரின் பரிசோதனையின்போது..

முதலில் கோவில் தெப்பக்குளத்தை சீர் செய்தல், சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்துதல், அத்தியாவசிய சேவைகளை அரசு மூலம் மக்களுக்கு நிறைவேற்றிக்கொடுத்தல் போன்ற பணிகளை செய்துகொண்டிருந்த ‘சைமா’ அமைப்பினர் பின்பு மக்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். 1989 முதல் 30 வருடங்களாக டாக்டர்கள் மூலம் ரூ.2-க்கு தரமான மருத்துவ ஆலோசனைகளும், மருந்துகளும் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் பலதரப்பில் இருந்தும் இந்த சங்கத்திற்கு பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன. இந்த மருத்துவமையம் திருவல்லிக்கேணி தேரடி தெருவில் நிரந்தரமாக இயங்கி வருகிறது.

42 வருடங்களுக்கு முன்பு இளைஞர்களாக இருந்து இந்த சங்கத்தை தொடங்கிய பலர் தற்போது 70 வயதை கடந்துவிட்டார்கள். முன்பு பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்தபடியே சமூகசேவை செய்துகொண்டிருந்த அவர்கள் பணி ஓய்வு பெற்றுவிட்டாலும் இப்போதும் ஓய்வின்றி சமூக பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். கல்விப் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். ஏராளமான இளைஞர்களையும் சங்கத்தில் இணைத்து சேவைப் பணியில் ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

சமூக சேவை மற்றும் 2 ரூபாய்க்கு மருத்துவ ஆலோசனையும்-மருந்துகளும் வழங்குவது பற்றி ‘சைமா’வின் தலைவர் டி.ஏ.சம்பத்குமார் கூறியதாவது:

“நாங்கள் இளைஞர்களாக இருந்த காலகட்டத்தில் முதன் முதலில் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் திருக்குளம் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்து சீரமைத்து வந்தோம். பின்பு வீதிகளில் துடைப்பங்களுடன் களம் இறங்கினோம். சுகாதார பிரச்சினைகளை தீர்த்துவைக்க அதிகாரிகளை எங்கள் பகுதிக்கு அழைத்து வந்து, மக்களை நேருக்கு நேர் சந்திக்க செய்தோம். ரத்ததானம் வழங்குதல், ஏழை மாணவர்களுக்கு உதவுதல், பேரிடர் காலங்களில் பொதுமக்களிடம் உதவி பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளை தொடர்ந்தோம்.

ஏழை மாணவிகளுக்கு இலவச கல்வி வகுப்பு நடைபெறும் காட்சி


திருவல்லிக்கேணியில், கோவில் பிரகாரங்களில் விழும் மழை நீர் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் குளத்திற்கு செல்லும்படி மழைநீர் வடிகால்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே அமைக்கப்பட்டுள்ளன. எப்போதும் குளத்தில் நீர் நிரம்பி இருக்க இந்த ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். 1987-ல் இந்த குளத்தை சீரமைக்க அன்றைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். அதில் எங்கள் பங்களிப்பும் பாராட்டத்தக்க விதத்தில் இருந்தது.

அதை தொடர்ந்து சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்தும் பணியில் நாங்கள் ஈடுபட்டோம். அன்றைய முதல்- அமைச்சர் ஜெயலலிதா மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கொண்டு வரும் முன்பே நாங்கள் திருவல்லிக்கேணி பகுதியில் வீடுவீடாக மழைநீர் சேகரிப்பு பிரசாரம் செய்து, பெரும்பாலான வீடுகளில் அந்த கட்டமைப்பை நவீனமுறையில் ஏற்படுத்தி, தெருக்களில் வழியும் நீரை குளத்தில் கொண்டு சேர்த்தோம். இதன் மூலம் குளம் நிரம்பியதோடு, சுற்றுவட்டாரப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்தது.

அப்போது சென்னை மாநகராட்சி அதிகாரிகள் எங்களை சந்தித்து பாராட்டியதோடு, பல்வேறு பகுதிகளில் வடிகால் அமைப்பது குறித்து எங்களிடம் ஆலோசனை கேட்டார்கள். நாங்கள் எங்கள் அனுபவங்களை சொன்னோம். அதோடு சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ‘நம்மால் முடியும்’ என்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறும்படம் ஒன்றையும் தயாரித்தோம். அதனை அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். அவரது ஆணைப்படி தமிழகம் முழுவதும் அது திரை யிடப்பட்டது. பின்பு ஒருமுறை அவர் நேரடியாக வந்து மழைநீர் வடிகால் முறையில் ஸ்ரீபார்த்தசாரதி கோவில் குளம் நிரம்பி வழிவதையும் பார்த்து மகிழ்ந்தார்” என்றார்.

இந்த இளைஞர் மன்றத்தினர் வருடந்தோறும் 1500 ஏழை மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கி வருகிறார்கள். மேலும் ‘குரோத்’ என்ற அமைப்பை நிறுவி படிப்பில் பின்தங்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு சிறந்த ஆசிரியர்கள் மூலம் இலவசமாக கல்வி கற்பிப்பதோடு அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்கள். அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும், மேற்படிப்புக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறார்கள். இவர்களிடம் கல்வி உதவிபெற்ற பலர் படித்து முன்னேறி இப்போது உயர் பதவிகள் வகித்துவருகிறார்கள்.

மருத்துவ சேவைகள் வழங்கி வருவது பற்றி துணை தலைவர்கள் கஸ்தூரிரங்கன், சஞ்சீவி ரகுநாதன் ஆகியோர் கூறியதாவது:

“முதலில் நாங்கள் மருத்துவ முகாம்களை மட்டுமே நடத்தி வந்தோம். டாக்டர் ஸ்ரீதர் என்பவரும், அவரது நண்பர்களும் பெசன்ட்நகர் பகுதியில் ரூ.2 மட்டும் பெற்றுக்கொண்டு ஏழைகளுக்கு மருத்துவ ஆலோசனைகளும் மருந்துகளும் வழங்கி வந்தார்கள். அதற்கு ‘ஸ்ரீகாஞ்சி காமகோடி சங்கர மெடிக்கல் டிரஸ்ட்’ உறுதுணையாக இருந்தது. அவர்களது இரண்டாவது மருத்துவ மையத்தை திருவல்லிக்கேணியில் எங்கள் சங்கத்தில் ஏற்படுத்தினார்கள். முதலில் அந்த மருத்துவ மையம் 250 சதுர அடி கொண்ட சிறிய கட்டிடத்தில் இயங்கியது. பின்பு விரிவாக்கம் செய்தோம். குறைந்த கட்டணத்தில் ரத்த பரிசோதனை செய்வதற்கான அமைப்பையும் ஏற்படுத்தினோம். புதன் கிழமை தோறும் ரூ.10 மட்டும் பெற்றுக்கொண்டு சிறப்பு மருத்துவர்கள் மூலம் ஆலோசனை வழங்குகிறோம். 15 ஆண்டுகளாக பம்மல் சங்கரா கண் மருத்துவமனை மூலம் இலவச கண்புரை நீக்கும் மருத்துவ முகாம்களும் நடத்துகிறோம்.

தற்போது 2500 சதுர அடி பரப்பளவு கொண்ட மையத்தில் எங்கள் மருத்துவ சேவை தொடர்கிறது. குறைந்த கட்டணத்தில் கண்பரிசோதனை, பிசியோதெரபி, பல் சிகிச்சை போன்றவைகளையும் வழங்குகிறோம். ரூ.2-க்கு மருத்துவ ஆலோசனையும், மருந்துகளும் கொடுத்து வருகிறோம். இந்த மருத்துவ சேவைகளுக்கு டாக்டர் ஸ்ரீதர் உறு துணையாக இருக்கிறார். இந்த சேவை தினமும் ஏராளமான மக்களுக்கு கிடைத்துக்கொண்டிருக்கிறது. எங்கள் ‘சைமா’ அமைப்பிற்கு பிரபல நிறு வனங்கள் பணஉதவியும், வைப்பு நிதியும் வழங்குகின்றன. இதன் மூலமே இத்தகைய சேவைகளை தொடர முடிகிறது. கட்டுக்கோப்பான எங்கள் செயல்பாட்டையும், சேவை முறைகளையும் அறிந்து, பலர் எங்களிடம் ஆலோசனை பெற்று புதிய சேவை அமைப்புகளை தொடங்கி வருகிறார்கள். இத்தகைய சேவை மூலம் எங்களுக்கு ஆத்ம திருப்தி கிடைக்கிறது. தொண்டுள்ளம் கொண்ட ஏராளமானவர்கள் எங்களுடன் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஏழை எளிய மக்களுக்கு எல்லாவிதத்திலும் உதவவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்..” என்றார்கள்.

இவர்களது சேவை.. மக்களுக்கு என்றென்றும் தேவை..!

Next Story