செவ்வாய்க்கிழமை பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 237 புள்ளிகள் உயர்வு நிப்டி 76 புள்ளிகள் முன்னேற்றம்


செவ்வாய்க்கிழமை பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 237 புள்ளிகள் உயர்வு நிப்டி 76 புள்ளிகள் முன்னேற்றம்
x
தினத்தந்தி 12 Feb 2020 9:08 AM GMT (Updated: 12 Feb 2020 9:08 AM GMT)

செவ்வாய்க்கிழமை பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 237 புள்ளிகள் உயர்ந்தது.

மும்பை

செவ்வாய்க்கிழமை பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 237 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 76 புள்ளிகள் முன்னேறியது.

தேர்தல் முடிவுகள்

நேற்று டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை உறுதி செய்யும் விதமாக ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று அங்கு மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இது மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசுக்கு பின்னடைவாக இருந்தாலும் பங்குச்சந்தைகளில் அதனால் பாதிப்பு ஏற்படவில்லை. பலரும் அதிக அளவில் பங்குகளை வாங்கிய நிலையில் சந்தைகள் ஏற்றம் கண்டன.

அந்த நிலையில், மும்பை பங்குச்சந்தையில் பயன்பாட்டுத் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 1.68 சதவீதம் உயர்ந்தது. அடுத்து மின்சாரத் துறை குறியீட்டு எண் 1.50 சதவீதம் முன்னேறியது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனப் பங்குகளில் 7 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. 23 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தது.

இந்தப் பட்டியலில் என்.டி.பி.சி., மாருதி சுசுகி, பாரத ஸ்டேட் வங்கி, பவர் கிரிட், பஜாஜ் ஆட்டோ, அல்ட்ராடெக் சிமெண்ட், இண்டஸ் இந்த் உள்ளிட்ட 23 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. அதே சமயம் நெஸ்லே இந்தியா, பார்தி ஏர்டெல், மகிந்திரா அண்டு மகிந்திரா, டி.சி.எஸ். உள்பட 7 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 236.52 புள்ளிகள் ஏற்றம் கண்டு 41,216.14 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 41,444.34 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 41,179.14 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 1097 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1408 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 194 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.2,468 கோடியாக உயர்ந்தது. கடந்த திங்கள்கிழமை அன்று அது ரூ.2,292 கோடியாக இருந்தது.

நிப்டி

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 76.40 புள்ளிகள் முன்னேறி 12,107.90 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 12,172.30 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 12,099 புள்ளிகளுக்கும் சென்றது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story