வானவில் : பியூஜிபிலிம் ‘இன்ஸ்டாக்ஸ் மினி 11’


வானவில் : பியூஜிபிலிம் ‘இன்ஸ்டாக்ஸ் மினி 11’
x
தினத்தந்தி 11 March 2020 1:15 PM GMT (Updated: 11 March 2020 1:15 PM GMT)

புகைப்படம் சார்ந்த மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் பிரபலமாகத் திகழும் ஜப்பானைச் சேர்ந்த பியூஜிபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தற்போது ‘இன்ஸ்டாக்ஸ் மினி 11’ என்ற பெயரில் புதிய ரக கேமராவை அறிமுகம் செய்துள்ளது.

புகைப்படக் கலையை கற்றுக் கொள்ள விரும்புவோர் மற்றும் பொழுது போக்கிற்காக புகைப்படம் எடுக்க விரும்புவோருக்காக எளிதில் கையாளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாக்ஸ் சீரிஸ் கேமராக்களில் இது புதிய சேர்க்கையாகும். இதில் உடனுக்குடன் புகைப்படங்களை பிரிண்ட் எடுத்து பார்த்து மகிழும் வசதி இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.

பியூஜிபிலிம் நிறுவனத்தின் பிரபல மாடல்களில் இன்ஸ்டாக்ஸ் 1998-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதிலிருந்து இந்த சீரிஸில் பல்வேறு மாடல்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் 100 நாடுகளில் இந்த பிராண்ட் மிகவும் பிரபலமாக மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்ற மாடலாகத் திகழ்கிறது. ஐரோப்பா, அமெரிக்கா, சீனா, தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இது பிரபலமானதாகும். இளம் தலைமுறையினரிடையே இது மிகவும் பிரபலமான பிராண்டாகத் திகழ்கிறது. புதிய மினி 11 மாடலில் ஆட்டோமேடிக் எக்ஸ்போஷர் எனும் புதிய செயல்பாடு உள்ளது.

இது போதிய வெளிச்சத்தை உணர்ந்து அது கிடைக்கும்போது மட்டுமே ஷட்டர் பொத்தானை பிரஸ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருக்கும் சூழலுக்கு ஏற்ற வகையில் பிளாஷ் வெளிச்சம் செயல்படும். இதனால் புகைப்படம் எடுக்கும் பிரதான பொருள், காட்சிகள் போதிய வெளிச்சத்தோடு பின்புலத்தில் உள்ள காட்சிகளும் தெளிவாகத் தெரியும் வகையில் பதிவாகும். இதனால் கொளுத்தும் வெயிலிலும் படம் பிடிக்கலாம். வெளிச்சம் குறைவான அறையிலும் படம் பிடிக்கலாம். காட்சிகள் தெளிவாக பதிவாகும்.

மேலும் எடுத்த காட்சிகளை வெறுமனே எல்.இ.டி. திரையில் பார்த்து மகிழ்வதை விட உடனடியாக பிரிண்ட் போட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. கேமராவின் மேல் பகுதியும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எடை குறைவாகவும், மெல்லியதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. 5 கண்கவர் வண்ணங்களில் ( நீலம், இளம் சிவப்பு, கிரே, வெள்ளை, பர்ப்பிள்) இது வெளிவந்துள்ளது.

Next Story