மண்பாண்ட கலையை மீட்டெடுக்கும் பட்டதாரி


மண்பாண்ட கலையை மீட்டெடுக்கும் பட்டதாரி
x
தினத்தந்தி 13 Feb 2021 5:12 PM IST (Updated: 13 Feb 2021 5:12 PM IST)
t-max-icont-min-icon

அழிந்து வரும் பாரம்பரிய கலைகளில், மண்பாண்ட கலையும் ஒன்று. கிராமப்புறங்களில் கூட மண்பாண்ட பொருட்களை பார்க்க முடியாத சூழலில், மண்பாண்ட கலையையும், தொழிலையும் மீட்டெடுக்க ஒரு இளைஞர் பட்டாளமே உழைத்துக்கொண்டிருக்கிறது.

இந்த முயற்சியை முன்னெடுத்தவர், லோகேஷ். மண்பாண்ட கலையில் ஈடுபாடு கொண்டவர்களையும், அதையே தொழிலாக செய்பவர்களையும் ஒருங்கிணைத்து, அந்த கலையை மீட்டெடுக்க முயல்கிறார். பாரம்பரியமான மண்பாண்ட கலை ஏன் மீட்கப்படவேண்டும்?, எப்படி மீட்பது?, இதனால் என்ன பயன்?, யார் இதை செய்வது? போன்ற ஏராளமான கேள்விகளுக்கு லோகேஷ் 
விடைகொடுக்கிறார்.

‘‘மனிதனின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம் என்றால், அதைக்கொண்டு உருவான முதல் தொழில் மண்பாண்டம் என்று சொல்லலாம். ஆனால் காலவெள் ளத்தில் மண்பாண்டங்கள் கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டன. இன்று கிராமப்புறங்களில்கூட மண்பாண்டங்கள் வழக்கொழிந்துவிட்டது. கோவில் திருவிழா, பொங்கல் விழாக்களின்போது மட்டுமே பயன்படுத்தும் அரிய பொருளாக அவை உருமாறிவிட்டன. தொழில் பயிற்சிகளால் மட்டுமே மண்பாண்ட கலைக்கும், தொழிலுக்கும் புத்துயிர் அளிக்கமுடியும்’’ என்று பேசத்தொடங்கும் லோகேஷ், வேலூரை சேர்ந்தவர். எம்.ஏ. மீடியா ஆர்ட்ஸ் படித்திருக்கிறார். தன்னுடைய ஊரில் பிரபலமாக இருந்த மண்பாண்ட கலாசாரம் திடீரென காணாமல் போகவே, அதை மீட்டெடுத்து சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். இதற்காக மண்பாண்ட கலையையும் பயின்றிருக்கிறார்.

‘‘மண்பாண்ட கலையும், தொழிலும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இருக்காது என்றே தோன்றுகிறது. ஏனெனில் மண்பாண்ட கலையை புதிதாக கற்கவும், பயிற்றுவிக்கவும் முறையான கல்வியும் இல்லை. அதேபோல மண்பாண்டத் தொழில் மூலமாக போதுமான வருவாய் ஈட்ட முடியுமா? என்ற கேள்வியும், இளைஞர்கள் மனதில் இருக்கிறது. மனித நாகரிகத்தின் ஆதித்தொழிலாக இருந்த மண்பாண்டம் இன்று அந்திம காலத்தில் உள்ளது. மண்பாண்டங்களை கையால் தொடும் கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம் என்ற அச்சமும் இருக்கிறது’’ என்று வருத்தப்படுபவர், மண்பாண்ட கலைக்கு 
புத்துயிர் கொடுக்கும் வழிமுறைகளையும் கூறுகிறார்.

‘‘செருப்பு தயாரிப்பதை தனியார் நிறுவனங்கள் கையில் எடுத்துக்கொண்டதால் அந்தத் தொழில் பாதுகாக்கப்பட்டுள்ளது. மர வேலைப்பாடுகள் இன்டீரியர் டிசைனாக வளர்ந்துவிட்டது. மண்பாண்டத் தொழிலும் சமூக தொழிலில் இருந்து மாறுபட்டு, ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியாக மாற்றப்பட்டால், மண்பாண்ட பயன்பாட்டையும், கலையையும் ஊக்கப்படுத்த முடியும். அதேபோல ஒவ்வொரு ஊர்களிலும், பிரிந்து வாழும் மண்பாண்ட கலைஞர்களை ஒரே அமைப்பாக ஒன்றிணைப்பதினால், மண்பாண்ட கலையை மீட்கமுடியும். அரசின் சலுகைகளையும் பெறமுடியும்’’ என்று பொறுப்பாக பேசுபவர், தன்னை போன்று மண்பாட கலையில் ஆர்வமிருக்கும் இளைஞர் பட்டாளத்தை ஒருங்கிணைத்து, வழிநடத்துகிறார். அதேசமயம் அரசின் சலுகைகளை மண்பாண்ட கலைஞர்களுக்கு பெற்றுத்தரும் முயற்சியிலும் இறங்கி உள்ளார். குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் மண்பாண்டத் தொழில்களுக்கான சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதுபற்றி பகிர்ந்து கொள்கிறார்.

‘‘மண்பாண்டத் தொழில்களுக்கு பெரிய நிலப்பரப்பு தேவைப்படுகிறது. குறிப்பாக மண்பாண்டம் செய்ய களிமண், சவுடு மணல் சேகரித்துவைத்தல், களிமண்ணை சலித்தல், மண்ணை மிதித்து பதப்படுத்துதல், மண்பாண்டங்களை வெயிலில் காயவைத்தல், கடைசியாக சூளையிடுதல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒரு நபருக்கு குறைந்தது 10 சென்ட் நிலமாவது தேவைப்படும். ஒவ்வொரு தனி நபரும் 10 சென்ட் நிலம் வைத்துக்கொண்டு தொழில் தொடங்கும் நிலையில் இல்லை என்பதால், அரசின் உதவிகளை நாடி இருக்கிறோம். அதன்படி மண்பாண்டத் தொழில்களுக்கான பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்டால் ஒவ்வொரு தனிநபர்களும் தனி இடம் தேடி அலைவதைவிட பொருளாதார மண்டலத்தில் இருக்கும் பொது இடத்தை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம். இங்கு வருபவர்கள் மண்பாண்டத் தொழிலைக் கற்பது, மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவது, சந்தைப்படுத்துவது உள்ளிட்ட அனைத்து வகையிலும் புலமை பெற்றவர்களாக இருப்பார்கள். அதோடு நகர்புற மக்கள் விரும்பும் நவ-நாகரிக மண்பாண்ட பொருள் தயாரிப்பு தொழில்களையும் பழகிக்கொள்ளலாம். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு கற்றுத்தந்தாலே போதுமானது, அவரே மற்ற உறுப்பினர்களுக்கு தொழிலைக் கற்றுத்தருவதுடன், தொழிலை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கடத்திச் செல்லமுடியும்’’ என்றவர், அதற்கான வேலைகளிலும் முழுமுனைப்போடு இறங்கி உள்ளார்.‘‘பல ஊர்களுக்கு சென்று மண்பாண்டம் செய்பவர்களை ஒன்றிணைத்து ஒரு பிரத்யேக அமைப்பை உருவாக்கியுள்ளோம். 

வேலூர் மாவட்ட ஆட்சியர் மூலமாக அரசு உதவிகளை நாடினோம். எங்களது கோரிக்கை ஏற்கப்பட்டு பொருளாதார மண்டலம் உருவாக்கத்திற்கு தேவையான நிலம் வழங்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதில் நாங்கள் திட்டமிட்டப்படியே மண்பாண்டத் தொழிலுக்கான இலவச பயிற்சி பள்ளி, பிரம்மாண்ட களிமண் பானை, மண்பாண்ட சமையலுக்கான மாதிரி கூடம், மின்சூளை இயந்திரம், மண் பிசையும் இயந்திரம், மின் மோட்டார் சக்கரங்களை அமைத்து மண்பாண்டத் தொழில் ஆதாரங்களை காப்பதுடன், மண்பாண்ட கலையையும் மீட்டெடுக்க இருக்கிறோம். மண்பாண்ட கலைக்கான தலைநகரமாகவும் இது அமைய இருக்கிறது’’ என்று முடிக்கும் லோகேஷ், இளைஞர் பட்டாளத்தின் துணையோடு மண்பாண்ட விற்பனைக்கான பிரத்யேக ஆப்ஸ் உருவாக்கத்தையும் முன்னெடுத்திருக்கிறார்.
1 More update

Next Story