தூக்கத்தை கெடுத்த கொரோனா


தூக்கத்தை கெடுத்த கொரோனா
x
தினத்தந்தி 4 Jun 2021 6:18 PM IST (Updated: 4 Jun 2021 6:18 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு காலத்தில் பெரும்பாலானோரின் தூக்க சுழற்சி முறை மாறுபட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

காலையில் எழுந்ததும் அவசரமாக கிளம்பி வேலைக்கு சென்று பழகி யவர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்க்க தொடங்கியதால் பெரும்பாலான வீடுகளில் காலைநேர பரபரப்பு அடங்கிப்போய்விட்டது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்க நேர்ந்ததால் காலையில் ஆசுவாசமாக எழும் பழக்கத்தை நிறைய பேர் பின்பற்றி இருக்கிறார்கள். வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களில் சுமார் 67 சதவீதம் பேர் தூங்கி எழும் நேரத்தை மாற்றி அமைத்திருக்கிறார்கள்.

ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பு இரவு 10 மணிக்கு முன்பாகவே பெரும்பாலானோர் தூங்கி இருக்கிறார்கள். ஆனால் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு இரவு 11 மணியை கடந்த பிறகுதான் தூங்க சென்றிருக்கிறார்கள் என்பதை ஆய்வு முடிவு சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பான ஆய்வை பெங்களூருவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் 1500 பேரை இந்த ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். அவர்களில் 46 சதவீதம் பேர் ஊரடங்குக்கு முன்பு இரவு 11 மணிக்கு முன்பு தூங்க சென்றுவிடுவதாக தெரிவித்திருக்கிறார்கள். இப்போது 39 சதவீதம் பேர் மட்டுமே இரவு 11 மணிக்கு முன்பு தூங்க செல்வதாக தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் 25 சதவீதம் பேர் சாதாரண நாட்களில் இரவு 12 மணிக்கு தூங்க செல்வதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால் ஊரடங்குக்கு பிறகு இரவு 12 மணிக்கு தூங்க செல்பவர்களின் எண்ணிக்கை 35 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. வழக்கமாக தூங்கி எழும் நேரத்தை விட ஓரிரு மணி நேரங்கள் காலதாமதமாக தூங்கி எழவும் செய்கிறார்கள். இரவில் தாமதமாக தூங்க சென்றுவிட்டு காலையில் தாமதமாக தூங்கி எழுந்தாலும் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்ற கவலையும் நிறைய பேரிடம் இருக்கிறது. தூக்கமின்மை பிரச்சினைக்கு ஆளாகி இரவில் வெகுநேரம் கண் விழித்திருப்பதாக கூறி இருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தங்கள் வாழ்க்கை சூழலையே புரட்டிப்போட்டு விட்டதாகவும் வேதனையுடன் கூறி இருக்கிறார்கள். பணி பாதுகாப்பு, நிதி பற்றாக்குறை, நண்பர்கள், உறவினர்களின் உடல்நலம் குறித்த கவலை போன்றவை இரவில் தூங்கமின்மைக்கான காரணமாக அமைந்திருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்த கவலை 49 சதவீதம் பேரை ஆட்கொண்டிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் தங்களுடைய தூக்க சுழற்சி இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்று 81 சதவீதம் பேர் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்கள்.
1 More update

Next Story