உறவில் இனிமை... உள்ளத்துக்கு குளுமை...


உறவில் இனிமை... உள்ளத்துக்கு குளுமை...
x
தினத்தந்தி 4 July 2021 12:12 AM GMT (Updated: 4 July 2021 12:12 AM GMT)

உற்றார் உறவினர்களை வெறுத்தபடி சிலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வீடு முதல் வீதி வரை அவர்களுக்கு உறவுகளை சீர்படுத்துவதில் சிக்கல்கள் எழுகிறது. திருமணமானவர்கள் என்றால் வீட்டில் மனைவியுடன் முகம்கொடுத்து பேசுவதில்லை.

ஒருவேளை பேசிவிட்டாலும் அதை சண்டையில் கொண்டுபோய் முடித்துவிடுவார்கள். குழந்தைகளுக்கும் அவர்களை பிடிப்பதில்லை. பிரச்சினைகளை ஒருபோதும் மனந்திறந்து பேசமாட்டார்கள். வேலை செய்யும் அலுவலகத்திலும் ‘ஈகோ’ வால் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டிருப்பார்கள். நெருக்கமான நண்பர்கள் போனில் அழைத்தாலும், பேசாமல் அலட்சியப்படுத்தி விடுவார்கள். நண்பர்களை நேரில் சந்திப்பதையும் தவிர்ப்பார்கள். இப்படிப்பட்ட உறவுச்சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பவர்கள், தங்கள் உறவுகளையும், நட்புகளையும் மேம்படுத்திக்கொள்ள ‘ஒரே ஒருவரால்தான்’ முடியும். அந்த ஒரே ஒருவர் யார் தெரியுமா? நீங்கள்தான்! உங்கள் உறவுச்சிக்கலை உங்களால் மட்டுமே சீர்படுத்த முடியும்.

எப்படி?
நீங்கள் அடிக்கடி ‘நான் ரொம்ப ‘பிஸி’ யாக இருக்கிறேன்’ என்ற வார்த்தையை நெருக்கமானவர்களிடம்கூட பயன்படுத்துகிறவராக இருப்பீர்கள். ‘மீண்டும் உன்னை அழைக்கிறேன்’, ‘உங்களுக்கு ‘மெசேஜ்’ அனுப்புகிறேன்’ என்று கூறினாலும் அதை செய்யமாட்டீர்கள். நீங்கள் செய்யும் முதல் தவறு இங்கிருந்துதான் தொடங்குகிறது. ரொம்ப முக்கியமான வேலையில் 
இருக்கும்போது மட்டுமே ‘நான் சிறிதுநேரம் பிஸியாக இருக்கிறேன்’ என்ற வார்த்தையை பயன்படுத்தவேண்டும். அதே நேரத்தில் நீங்கள் எவ்வளவு முக்கியமான வேலையில் இருந்தாலும், உங்களுக்கு நெருக்கமானவர்களுக்காக நீங்கள் இரண்டு நிமிடத்தை செலவழித்துதான் ஆகவேண்டும். அப்படி இருந்தால்தான் உங்களால் உறவுகளை சீர்படுத்த முடியும்.

நீங்கள் உங்கள் பெற்றோரிடம் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதை பார்த்தபடியே உங்கள் குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கும். நீங்கள் உங்கள் பெற்றோருக்கு கொடுக்கும் மதிப்பும், மரியாதையும்தான் உங்களுக்கு உங்கள் குழந்தைகளிடமிருந்தும் கிடைக்கும். அதனால் பெற்றோரிடம் பிரச்சினை ஏற்பட்டால் பொறுமையாக இருந்து நிதானமாக நேருக்குநேர் பேசுங்கள்.
உங்கள் மனைவியை அலட்சியப்படுத்துவது, தரக்குறைவாக விமர்சிப்பது போன்றவைகளை செய்துகொண்டே, உங்கள் மகனிடம் ‘பெண்களுக்கு சம உரிமை கொடுக்கவேண்டும். பெண்களை மதிக்கவேண்டும்’ என்று நீங்கள் உபதேசம் செய்து கொண்டிருந்தால் அது உங்களை முரண்பாடான மனிதராக வெளிக்காட்டிவிடும். நீங்கள் கொள்கையற்றவர் என்பது உங்கள் குழந்தைகளுக்கே தெரிந்துவிடும். அதனால் உறவுகளை சீர்படுத்த வேண்டுமானால் அதை வீட்டில் இருந்து தொடங்கவேண்டும். கணவர், மனைவிக்கும்-மனைவி, கணவருக்கும் சம உரிமை தரவேண்டும். குடும்பத்தினர், நண்பர்களுடனான சுற்றுப்பயணங்கள் இடங்களை சுற்றிப்பார்ப்பதற்கானவை மட்டுமல்ல, மனம்விட்டுப் பேசும் நெருக்கத்தையும் உருவாக்குபவை. 

குடும்பத்தினரோடு வெளி இடங்களுக்கு செல்லும்போது, உற்சாகமான நேரங்களில் குழந்தைகள் மனம்விட்டு பேசும். அதன் மூலம் அவர்களுடனான உறவில் இடைவெளி ஏற்பட்டிருந்தாலும் அதை சரிசெய்துவிடலாம்.
அலுவலகத்தில் உடன் வேலை பார்ப்பவர்களை பாராட்ட கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியாததை அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்கு தெரியாததை நீங்கள் கற்றுக்கொடுங்கள். உங்களுக்குள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டாலும், அதனை மனந்திறந்து பேசி அலுவலக உறவையும் சீர் செய்யுங்கள். உறவுகளை சீர்படுத்துவது மிக எளிது. ஆனாலும் அதை சீர்படுத்த நீங்கள் மனம் வைக்கவேண்டும்.

Next Story