ஒரே படப்பிடிப்பு தளத்தில் நாகசைதன்யா- சமந்தா


ஒரே படப்பிடிப்பு தளத்தில் நாகசைதன்யா- சமந்தா
x
தினத்தந்தி 3 Jan 2022 9:10 PM IST (Updated: 3 Jan 2022 9:10 PM IST)
t-max-icont-min-icon

ஒரே படப்பிடிப்பு தளத்தில் நாகசைதன்யா- சமந்தா இருவரும் கலந்துகொண்டாலும், ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவில்லையாம்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நாகர்ஜூனா. இவரது மூத்த மகனும் நடிகருமான நாகசைதன்யாவும் முன்னணி நாயகனாக இருந்து வருகிறார். 2009-ம் ஆண்டு ‘ஜோஸ்’ என்ற படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் நாகசைதன்யா. இவர் தனது இரண்டாவது படமான ‘ஏ.. மாயம் சேசாவே’ என்ற திரைப்படத்தில், சமந்தாவுடன் ஜோடி சேர்ந்தார். 2010-ம் ஆண்டு வெளியான இந்தப் படம்தான் சமந்தாவுக்கு அறிமுக திரைப்படம் ஆகும். இந்தப் படத்தில் இருந்தே, நாகசைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் இடையே, காதல் இருந்து வந்ததாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனால் இதனை அவர்கள் இருவருமே பல ஆண்டுகளாக மறுத்தும், சில நேரங்களில் மவுனம் காத்தும் வந்தனர்.

ஒரு கட்டத்தில் தங்களுடைய காதலை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட இருவரும், இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மிகச் சிறந்த நட்சத்திர ஜோடியாக, அப்போது இவர்கள் இருவரும் பார்க்கப்பட்டனர். இந்த நிலையில் சமந்தா சினிமாவில் நடிப்பதும், அதில் கொஞ்சம் கவர்ச்சி காட்டுவதும் தொடர்பாக நாகசைதன்யா குடும்பத்தினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதாக சொல்லப்படுகிறது. இது நாகசைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகளையும், குடும்ப வாழ்க்கையில் விரிசலையும் ஏற்படுத்தியது. இருவரும் மண வாழ்க்கையில் இருந்து பிரியப்போவதை வெளிப்படையாக அறிவித்தனர்.

சில நாட்கள் மனவருத்தத்தில் இருந்த சமந்தா, ஒரு வழியாக படங்களின் நடிப்பதன் மூலம் தன்னுடைய சூழ்நிலையை மாற்றினார். அவருக்கு ஏராளமான படங்கள் புக் ஆகின. நாகசைதன்யாவும் சில படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு, அதற்கான பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, நாகசைதன்யாவும், சமந்தாவும் நடிக்கும் திரைப்படங்களின் படப்பிடிப்பு, ராமநாயுடு ஸ்டூடியோவில் தனித்தனி இடத்தில் நடைபெற்றது.

காலை முதல் மாலை வரை இருவரும் ஒரே இடத்தில் வேறு வேறு தளத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டாலும், ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவில்லையாம். மீண்டும் சந்தித்தால், அது மேலும் மனவேதனையை ஏற்படத்தக்கூடும் என்று கருதிய இருவரும், படப்பிடிப்பு முடிந்ததும், தங்களது காரில் ஏறி உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story