தன் ஜோடியை புதைத்த இடம் வரை சென்று அங்கேயே காத்திருந்த மயில்.! உருக்கமான காட்சி


தன் ஜோடியை புதைத்த இடம் வரை சென்று அங்கேயே காத்திருந்த மயில்.! உருக்கமான காட்சி
x
தினத்தந்தி 6 Jan 2022 10:06 AM GMT (Updated: 6 Jan 2022 10:06 AM GMT)

17 லட்சம் பேர் பார்த்து வருத்தப்பட்ட வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

ஜெய்ப்பூர்,

நெருங்கி பழகி வந்தவர்களை இழப்பது என்பது துரதிர்ஷ்டவசமானது. மனிதர்களாகிய நாம் நமக்கு நெருங்கியவர்களை இழக்கும் போது மிகுந்த வேதனை அடைவோம் . ஆனால் அதுவே விலங்குகளுக்கோ அல்லது பறவைகளுக்கோ நடந்தால் அவை எப்படி அந்த இழப்பை தாங்கிக் கொள்ளும் என்பதற்கு ஒரு விடை கிடைத்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு மயில்கள் பல ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளன. இந்நிலையில், அதில் 1 மயில் திடீரென உயிரிழந்தது. இறந்த அந்த மயிலை புதைப்பதற்காக அப்பகுதி மக்கள் தூக்கி கொண்டு சென்றனர். இதனை கவனித்து கொண்டிருந்த இன்னொரு மயில் அவர்களை பின் தொடர்ந்து சென்றது. தன் ஜோடியை இழந்த மயில் அங்கிருந்து திரும்ப வர மனமில்லாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது.  

இதனை வீடியோவாக பதிவு செய்தவர்கள் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ இப்போது அதிக மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது. 

இந்திய வன சேவை(ஐ.எப்.எஸ்) அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் குச்சேரா பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.இதுவரை 17 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

மயில் இனங்களை பொறுத்தவரையில் ஒவ்வொரு ஆண்டும் தங்களுடைய ஜோடியை மாற்றிக் கொண்டே இருக்கும். பெரும்பாலும் இனப்பெருக்கத்தீர்காக சேர்ந்து வாழும் தன்மை கொண்டது. எனினும் இந்த அளவிற்கு ஒரு இழப்பின் தாக்கம் பறவைகளை பாதிக்கும் என்பது கண் முன்னே தெரிய வந்துள்ளது. 

மனிதராக இருந்தாலும் சரி பிற உயிரினங்களாக இருந்தாலும் சரி தங்களுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தவரை இழக்கும் போது தாங்கிக் கொள்ள முடியாது என்பது இந்த சம்பவம் ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.

Next Story