5 ஜி டெக்னாலஜி: வரமா? சாபமா?


5 ஜி டெக்னாலஜி: வரமா? சாபமா?
x

தகவல் தொடர்பு துறையில் புதிய வரவாக அமைந்துள்ளது 5 ஜி தொழில்நுட்பம். நவீனமான இந்த புதிய தொழில்நுட்பம் ஏற்படுத்தப்போகும் சாதக, பாதகங்கள் குறித்து இந்தக்கட்டுரையில் பார்த்து வருகிறோம். கடந்த வாரம் 5 ஜி டெக்னாலஜி குறித்த தகவல்களை பார்த்தோம். இந்த வாரம் 5ஜி கடந்து வந்த பாதை மற்றும் அது ஏற்படுத்தப்போகும் தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்து காண்போம்.

5ஜி பற்றி அறிந்து கொள்ளும்போது அது கடந்து வந்த பாதைகளையும் அலசுவது பயனுள்ளதாய் இருக்கும்.

1980-களில் அறிமுகமான 1 ஜி, முதல் தலைமுறை அலைவரிசை என அழைக்கப்படுகிறது. இது அனலாக் தொழில்நுட்பத்தில் (Analog) உருவானது. ஜி.எஸ்.எம். (Global System for Mobile communication-GSM) அமைப்பில் இது கட்டமைக்கப்பட்டது.

இரண்டாவது தலைமுறை 2 ஜி 1990-களின் தொடக்கத்தில் உருவானது. இதில் அனலாக்கிற்குப் பதிலாக டிஜிட்டல் அறிமுகப்படுத்தப்பட்டது. இணையத்தின் பயன்பாடும் தொடங்கியது. சி.டி.எம்.ஏ. (Code Division Multiple Access- CDMA) நுட்பம் இதில் பயன்பட்டது. இதன் அதிகபட்ச வேகம் 64 கே.பி.பி.எஸ். (kbps). டிஜிட்டல் என்கிரிப்ஷன் எனப்படும் உரையாடல்களை பாதுகாப்பாக அனுப்பும் நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டது. அலைக்கற்றையின் திறன் அதிகரித்தது, இதனால் பயனர்கள் அதிகம் இணைய முடிந்தது. இந்தியாவில் பல இடங்களில் இன்னும் 2ஜி பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது தலைமுறையான 3 ஜி, 2 ஆயிரமாவது ஆண்டு களின் தொடக்கத்தில் அறிமுகமானது. ஐ.எம்.டி. (International Mobile Telecommunications-2000 - IMT) என்ற அமைப்பில் இது கட்டமைக்கப்பட்டது. இங்கே தான் மொபைல் டேட்டா பயன்பாடு மேம்படத் தொடங்கியது. ஒலியும், டிஜிட்டலும் ஒரே தளத்தில் இயங்கக் கூடிய வகையில் இந்த தொழில்நுட்பம் மேம்பட்டது. அதி வேக தரவுப் பகிர்வான HSPA (high speed packet access) தொழில்நுட்பம் இதில் பயன்பட்டது. இதன் அதிகபட்ச வேகம் 2 Mbps ஆக இருந்தது. 2001-ம் ஆண்டு ஜப்பானில் வெள்ளோட்டம் விடப்பட்டு, தென்கொரியா, ஐரோப்பா, அமெரிக்கா என பரவி 2008-ம் ஆண்டு கடைசியில் அது இந்தியாவில் நுழைந்தது. இதன் செலவு அதிகம் என்பதால் பின் தங்கிய நாடுகள் பலவும் இன்னும் 3ஜி சேவைக்குள் நுழையவில்லை. இரண்டாம் தலைமுறைக்குப் பின் மூன்றாம் தலைமுறை என நாம் பொதுவாகச் சொன்னாலும், இரண்டாம் தலைமுறையிலேயே படிப்படியாக 2 ஜி GPRS, 2ஜி EDGE எனும் நிலைகளைக் கடந்து 3 ஜி போன்றவற்றை அடைந்தது என்பதே சரியானதாகும்.

நான்காம் தலைமுறை சேவை 4 ஜி என அழைக்கப்படுகிறது. இதற்கான வரையறையை பன்னாட்டு தொலை தொடர்பு ஒன்றியம் (Inter national Telecommunication Union-Radio communica tions sector - ITU-R) அமைத்திருக்கிறது. அதிகபட்சமாக 1 gb வேகத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது. இதில் பெருமளவு வேறுபாடு உண்டு. சராசரியாய் 20 முதல் 100 Mbps வேகம் வரை எளிதில் கிடைக்கிறது.

ஹோலோகிராம், கிளவுட் கம்ப்யூட்டிங், இணையவழி தடையற்ற ஒலிப் பரிமாற்றம், ஹை டெஃப்னிஷன் மொபைல் டி.வி, 3டி டி.வி, வீடியோ கான்பரன்சிங் போன்ற அனைத்துமே 4ஜி சேவையின் மூலம் மேம்பட்டன. முதன் முதலாக 2006-ம் ஆண்டு தென் கொரியாவில் இதன் வெள்ளோட்டம் வைமேக்ஸ் சேவை மூலம் விடப்பட்டது, அதன் பின் நார்வே, ஸ்வீடன் என தொடர்ந்தது. இந்தியாவில் 4 ஜி சேவையானது, 2011-ம் ஆண்டு அறிமுகமானது. வலுவாக இருந்த அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் மூலம் அது அறிமுகம் செய்யப்பட்டது. நாட்டில் முதல் வைமேக்ஸ் பிராட்பேண்ட் சேவை என அது அழைக்கப்பட்டது.

அதி வேகம், தடையற்ற பயன்பாடு

இப்போது அறிமுகமாகி இருக்கும் 5 ஜி, ஐந்தாம் தலைமுறை மொபைல் கம்யூனிகேஷன். அதிக வேகம், தடையற்ற பயன்பாடு, அதிக இணைப்புகளுக்கான சாத்தியம் போன்றவையே இதன் மிக முக்கியமான பயன்களாக இருக்கின்றன. அதிகபட்சமாக 20 gbps வேகத்தில் செயல்படும் என நம்பப்படுகிறது.

தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை அடிப்படையில் ரேடியோ ஒலி அலைகள் மூலமான கம்பியில்லாத் தகவல் தொடர்பு எனும் அடிப்படை சித்தாந்தத்தையே இதுவும் கொண்டிருக்கும். அதிக தரமான ஒலி அலைகளை யும், அகலமான இணைப்புப் பாதைகளையும் கொண்டிருக்கும். இதன் மூலமாக வேகமான பரிமாற்றமும், குறைந்த டேட்டா டிராபிக்கும் இருக்கும். மில்லி மீட்டர் வேவ்ஸ் என அழைக்கப்படும் ஒலி அலைகள் இதில் பயன்படுத்தப்படும்.

தொலை தூர தகவல் பரிமாற்றத்துக்குத் தேவையான சிக்னல் பூஸ்டர்களைப் பொறுத்தவரை பழைய முறையான ஆண்டெனா சிஸ்டமே இதிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நவீன டிரான்ஸ்மீட்டர்களின் மூலமாக இந்த தகவல் பரிமாற்ற தரம் மேம்படுத்தப்படும்.

இன்றைக்கு இணைய வேகம் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்கிறது. இதில் ஒரு சிக்கல் உண்டு. மிக முக்கியமான பணிகளுக்கான இணைய வேகம், பல முக்கியமற்ற பணிகளால் உறிஞ்சப்படலாம். 5ஜி தொழில்நுட்பத்திலுள்ள ஸ்லைஸிங் டெக்னாலஜி மூலமாக மருத்துவம் போன்ற முக்கியமான பணிகளுக்கு தடையற்ற உயர் தரத்திலான இணைய சேவையை வழங்க முடியும்.

ஒரு தகவலை அனுப்பிவிட்டு அதன் பதிலைப் பெறுகின்ற நேரத்தில் ஏற்படுகின்ற தாமதத்தை 'லேட்டன்ஸி' என தொழில் நுட்ப உலகில் அழைப்பார்கள். அத்தகைய தாமதத்தை வெகுவாகக் குறைக்கும் என்பது 5ஜி தருகின்ற மிக முக்கியமான வசீகர அம்சமாகும். 2025-ம் ஆண்டு இறுதிக்குள் உலக அளவில் 25 விழுக்காடு பயனாளர்கள் 5ஜி நெட்வொர்க்கில் இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோ சர்வீசஸ் எனப்படும் தொழில்நுட்பமானது ஒரு பெரிய மென்பொருளை சிறிது சிறிதாக உடைத்து, சின்னச்சின்ன பாகங்களாய் செய்து, தரமாய் இணைப்பதைக் குறிக்கிறது. அதே போன்ற தொழில்நுட்பம் 5ஜியில் பயன்படும். இதில் சேவை வழங்கு ஏரியாவை சிறு செல்களாகப் பிரித்து, செல்களுக்கு இடையேயான தரமான தகவல் பரிமாற்றத்தை உருவாக்குகிறார்கள். நோட்ஸ் அண்ட் ஆண்டினாஸ் எனப்படும் இரட்டைக் கைகுலுக்கல் முறையினால் வேகமும் சாத்தியமாகிறது, தொழில்நுட்ப சவால்களைச் சரிசெய்வதும் சாத்தியமாகிறது.

பன்னாட்டு தொலை தொடர்பு ஒன்றியம் (International Telecommunication Union-Radio communications sector - ITU-R) இதற்கான வரையறைகள் செய்த போது மூன்று விஷயங்களைக் குறிப்பிட்டார்கள். ஒன்று eMBB - விரிவாக்கப்படும் மொபைல் பிராட்பேண்ட் (Enhanced Mobile Broadband) இது தான் நமக்கு அதிக வேக இணைய சேவையைத் தருகிறது. இரண்டாவது URLLC எனப்படும் தாமதமில்லாத இணைய தொடர்பு (Ultra Reliable Low Latency Communications), மூன்றாவது mMTC - எனப்படும் ஏராளமான கருவிகளுக்கிடையேயான தகவல் தொடர்பு (Massive Machine Type Communications).

இதன் மூலம் ஐயாயிரம் கோடி கருவிகளை இணைப்பது சாத்தியம் என்கிறது தொழில்நுட்பம். உதாரணமாக சென்னையை முழுவதுமாக இணைக்க விரும்பினால், சென்னையிலுள்ள அத்தனை வாகனங்கள், சாலைகள், சிக்னல்கள், கடைகள், சி.சி.டி.வி கேமராக்கள், பாலங்கள் என அனைத்தையும் இணைக்க முடியும்.

எல்லா விசைக்கும் சமமான எதிர்விசை இருப்பது போல, 5ஜி யின் பரப்பும், வீச்சும் அதிகமாய் இருப்பதால் இதன் மூலம் நிகழ்கின்ற சைபர் குற்றங்களும் அதிகமாகவும், வீரியமாகவும் இருக்கும் எனும் கவலையும் தொழில்நுட்ப உலகில் நிலவுகிறது.

சேவியர், சென்னை.


Next Story