70 வயதுக்கு பிறகு குழந்தை பெற்றெடுத்த தம்பதி


70 வயதுக்கு பிறகு குழந்தை பெற்றெடுத்த தம்பதி
x

திருமணமாகி 54 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை பெற்றெடுத்திருக்கும் நிகழ்வு ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்தேறியுள்ளது. அங்குள்ள அல்வார் பகுதியை சேர்ந்த தம்பதியர் கோபிசந்த்-சந்திராவதி தேவி. இவர்களில் கோபிசந்துக்கு வயது 75. சந்திராவதி தேவியின் வயது 70.

கோபிசந்த் முன்னாள் ராணுவ வீரர். வங்கதேசப்போரின்போது காலில் குண்டு பாய்ந்து காயம் அடைந்தவர்.

திருமணமாகி ஆண்டுகள் உருண்டோடி முதுமை பருவத்தை எட்டிய நிலையில் குழந்தை இல்லாத ஏக்கம் தம்பதியர் மனதில் நீங்காமல் குடி கொண்டது. குழந்தை பெற்றுக்கொள்வதற்கு முடிவு செய்து ஐ.வி.எப் எனப்படும் நவீன சிகிச்சை முறையை நாடி இருக்கிறார்கள்.

ஐ.வி.எப் சிகிச்சை முறை, சோதனை குழாய் குழந்தை என்றும் அழைக்கப்படுகிறது. கருப்பையில் இருந்து முதிர்ந்த முட்டைகளை வெளியே எடுத்து விந்தணுக்களுடன் சோதனை குழாயில் கருவுற செய்து கருவை உருவாக்கி பின்னர் கருப்பையில் வைத்து குழந்தை பெற வைக்கும் சிகிச்சை முறை இதுவாகும்.

கோபிசந்த்-சந்திராவதி தேவி தம்பதியர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஐ.வி.எப் கருத்தரிப்பு மையத்தை அணுகி இருக்கிறார்கள். அங்கு சந்திராவதி தேவிக்கு ஐ.வி.எப் நுட்பத்தை பயன்படுத்தி கருத்தரிக்க வைக்கும் முயற்சி இரண்டு முறை தோல்வியில் முடிந்திருக்கிறது. மூன்றாவது முயற்சியில் கருத்தரித்துவிட்டார். அந்த மகிழ்ச்சியை அவரால் அனுபவிக்க முடியவில்லை.

குழந்தை பெற்றுக்கொள்வதற்கான வயதை கடந்து வயோதிகத்தை எட்டிவிட்டதால் பயம் குடிகொண்டது. கணவர் மற்றும் குடும்பத்தினரின் அன்பும், அரவணைப்பும் சந்திராவதி தேவிக்கு மன தைரியத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. மருத்துவ ரீதியான சிரமங்களுக்கு மத்தியில் குழந்தையை பெற்றெடுத்துவிட்டார். மூன்றை கிலோ எடையுடன் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் கூறி உள்ளார்கள்.

இதுகுறித்து சந்திராவதிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் பங்கஜ் குப்தா கூறுகையில், ''இவ்வளவு வயதுக்கு பிறகு குழந்தை பிறப்பது அரிதான நிகழ்வு. ராஜஸ்தானில் 75 வயது ஆணும், 70 வயது பெண்ணும் குழந்தை பெற்றெடுப்பது இதுவே முதல் முறையாகும்'' என்கிறார்.

இந்த தம்பதியர் குழந்தை பெற்றெடுத்திருக்கும் விஷயத்தில் அதிர்ஷ்டமும் கைகூடி இருக்கிறது. செயற்கை கருத்தரிப்பு தொடர்பான சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் நடைமுறைக்கு வந்துள்ள அந்த சட்டப்படி எந்தவொரு ஐ.வி.எப் மையமும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கருத்தரிப்பு தொடர்பான சிகிச்சை அளிக்கக்கூடாது. ஆனால் இந்த சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே சந்திராவதி தேவி கருவுற்றிருந்ததால் வயது அதிகரித்திருந்தாலும் குழந்தை பெற்றெடுக்கும் அதிர்ஷ்டம் கைகூடி இருக்கிறது.


Next Story