மண்ணிலும் வீடு கட்டலாம்...!

பூமியில் கிடைக்கும் இயற்கை வளங்களையே கட்டுமானத்துக்குப் பயன்படுத்துகிறார் கட்டிடக் கலைஞர் சரண்யா.
பெங்களூருவைச் சேர்ந்த 41 வயதான கட்டிடக் கலைஞர் சரண்யா, மண் சார்ந்த கட்டிடங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார். அவர் பெரும்பாலும் பூமியில் கிடைக்கும் இயற்கை வளங்களையே கட்டுமானத்துக்குப் பயன்படுத்துகிறார். குறைந்தபட்ச அழகியல் மற்றும் வசதிகள் மற்றும் இயற்கைச் சூழலுடன் வீடுகளைக் கட்டுவதன் மூலம் சமகால உணர்வைத் தருகிறார்.
இது குறித்து சரண்யா கூறும்போது, ''இந்தக் கட்டுமானத்துக்கு மண்ணில் கிடைக்கும் வளங்களை 25 விழுக்காடு பயன்படுத்துகிறேன். 75 விழுக்காடு கட்டுமான பணிகள் நிலையான கட்டுமான நுட்பங்களைக் கொண்டது. தினமும் எனக்கு வரும் அழைப்புகளில் பெரும்பாலோர் மண்சார்ந்த வீடுகள் குறித்தே சந்தேகம் கேட்கிறார்கள். அதாவது மண்ணில் வீடு கட்டுவதால், மழைக்காலங்களில் கரைந்து விடாதா..? என்று கேட்கிறார்கள். உண்மையில், 100 சதவிகிதமும் மண்ணை அடிப்பையாகக் கொண்டு வீடு கட்டப்படுவதில்லை. வீட்டின் நிலைத்தன்மைக்கான எல்லா வேலைப்பாடுகளும், இயல்பான கட்டுமான பாணியிலேயே நடக்கும். ஆனால், 30 சதவிகிதப் பணிகளுக்கு மண்ணைப் பயன்படுத்துகிறோம்'' என்றவர், ஐதராபாத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு கட்டிடக்கலை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகத்திலும், புதுச்சேரி ஆரோவில்லில் உள்ள எர்த் இன்ஸ்டிடியூட்டிலும் மண் சார்ந்த கட்டமைப்பு உருவாக்கத் தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டிருக்கிறார். கற்றுக்கொண்டதை, பல இடங்களில் முயன்றும் பார்த்திருக்கிறார்.
''தனிப்பட்ட வீடுகள் தவிர, சில பள்ளிகள் மற்றும் டியூஷன் சென்டர்களையும் மண்சார்ந்த வளங்களைப் பயன்படுத்திக் கட்டியுள்ளேன். இந்தப் பயணம் 2003-ம் ஆண்டு தொடங்கியது. சுய உதவிக்குழுவினருக்கான கட்டிடத்தைக் கட்டமைக்குமாறு குடும்ப நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டுக் கொண்டார். அந்த இடம் தெலுங்கானா மாநிலம் ஜாஹிராபாத்தில் இருந்தது. நான் ஆர்வத்துடன் ஆராய்ச்சியை மேற்கொண்டேன். கட்டுமானத்துக்கு உள்ளூரிலேயே கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்தினேன். அப்படிதான், முதன்முறையாக மண் கட்டிடத்தைக் கட்டினேன். அது இன்றும் நிலைத்து நிற்கிறது'' என்றவர், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய பகுதிகளில், தனியார் மற்றும் அரசுக்குச் சொந்தமான பல கட்டுமானங்களை, மண் வளங்களைக் கொண்டு கட்டமைத்திருக்கிறார்.
''வழக்கமான கட்டுமானங்களை ஒப்பிடும் போது இதற்கு உழைப்பும், கைவினைத் திறனும் அதிகமாகத் தேவைப்படும். மண் வீடுகளைக் கட்டமைக்க, நிச்சயம் பொறியாளர்களின் நேரடி மேற்பார்வையும் அவசியம்.
தகுந்த வழிகாட்டுதல்கள் இன்றி கட்டமைக்கப்படும் மண் வீடுகளில், சில குறைபாடுகளும் ஏற்படுவது உண்டு. அவற்றுக்கு அதிக பராமரிப்பு தேவைப்படும். அதோடு, கரையான் சிகிச்சை மற்றும் சீரான இடைவெளியில் மறுசீரமைப்பு தேவைப்படும். 100 விழுக்காடு மண்சார்ந்த கட்டுமானத்துக்குச் செல்லாமல் இருப்பதன் மூலம் இந்தக் குறைபாடுகளை சமாளிக்கலாம். மேலும் தகுந்த நிபுணர்களின் ஆலோசனையும், வழிகாட்டுதலும் அவசியம்'' என்றார்.
வழக்கமான கட்டுமானங்களை ஒப்பிடும் போது இதற்கு உழைப்பும், கைவினைத் திறனும் அதிகமாக தேவைப்படும். மண் வீடுகளை கட்டமைக்க, பொறியாளர்களின் நேரடி மேற்பார்வையும் அவசியம்.






