ஊர் மக்களுக்கு 6 வேளை உணவளிக்கும் ஒற்றை குடும்பம் - பொங்கலை வித்தியாசமாக கொண்டாடும் கிராமம்


ஊர் மக்களுக்கு 6 வேளை உணவளிக்கும் ஒற்றை குடும்பம் - பொங்கலை வித்தியாசமாக கொண்டாடும் கிராமம்
x

தஞ்சாவூரில் உள்ள வேங்குராயன்குடிகாடு கிராமம் சற்று வித்தியாசமாக பொங்கலை வரவேற்கிறது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் கொண்டாடி மகிழும் ஒப்பற்ற திருநாள். தமிழ்நாட்டின் மற்றப் பகுதிகளைப் போலத்தான் தஞ்சாவூர் பகுதியிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது என்றாலும், தஞ்சாவூரில் உள்ள வேங்குராயன்குடிகாடு கிராமம் சற்று வித்தியாசமாக பொங்கலை வரவேற்கிறது.

பாரம்பரியமாக இந்த கிராமத்தில் நடத்தப்பட்டு வரும் இந்த விழாவைப் பற்றி இங்கே பார்ப்போம்..

தஞ்சையில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வேங்குராயன்குடிகாடு கிராமம். இந்த கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு பொங்கல் பண்டிகை அன்று எல்லோருடைய வீட்டு வாசலிலும் மண்பானையில் தான் பொங்கலிடுவார்கள்.

மண்பானையில் பித்தளை, சில்வர் கரண்டிகளை பயன்படுத்தினால் பானை உடைந்துவிட வாய்ப்பு அதிகம். எனவே இந்த ஊரில் உள்ள விஸ்வகர்மா சமூகத்தைச் சேர்ந்தவர்கள், கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் மரக்குச்சி மற்றும் தேங்காய் சிரட்டையில் செய்யப்பட்ட 2 அகப்பைகளை வழங்குகிறார்கள்.

மேலும் இந்த கிராமத்தில் உள்ள வில்லாயி அம்மன் கோவில் பூசாரி, பொங்கல் பண்டிகை அன்று ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் வந்து மணி அடித்து சங்கு ஊதிச்செல்வார். அதன் பின்னர்தான் கிராம மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பொங்கல் வைப்பார்கள்.

மறுநாளான மாட்டுப்பொங்கல் அன்று ஊர் பொதுமக்கள் அங்குள்ள காசாங்குளத்திற்கு மாடுகளை அவிழ்த்துக்கொண்டு வருவார்கள். முதலில் பொங்கல் விழாவை நடத்தும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் மாட்டை குளத்தில் இறக்கி குளிப்பாட்டுவார்கள். பின்னர் மற்ற மாடுகளை குளிப்பாட்டி அதற்கு அலங்காரம் செய்து வீட்டிற்கு அழைத்து வருவர். பின்னர் உப்பில்லாமல் பொங்கல் வைத்து படையலிட்டு மாடுகளுக்கு ஊட்டி விடுவார்கள். பொங்கல் வைத்த அடுப்பில் இருந்து நெருப்பு எடுத்து, நெல், மிளகாய் போட்டு மாடுகளை நிற்க வைத்து, அவற்றிற்கு திருஷ்டி கழிப்பார்கள்.

அன்றைய தினம், முதல் மாடு அவிழ்க்கும் வீட்டில் காலை டிபன், மதியம் அசைவ உணவு, இரவு டிபன் வழங்கப்படும். இதேபோல் மறுநாள் காலை, மாலை டிபனும், மதியம் சைவ உணவும் வழங்கப்படும். அந்த இரண்டு நாட்களும், கிராம மக்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட வீட்டிற்குச் சென்றுதான் சாப்பிட வேண்டும். இதற்காக அந்த வீட்டின் முன்பு பந்தல் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்.

3-ம் நாள் விழாவின் போது, மதிய வேளையில் வில்லாயி அம்மன் கோவிலில் இருந்து, கிராம மக்கள் அனைவரும் முதல் மாடு அவிழ்க்கும் வீட்டிற்கு பறை இசை முழங்க ஊர்வலமாகச் செல்வார்கள். முதல் மாடு அவிழ்க்கும் வீட்டில் உள்ளவர்கள், ஊர் மக்கள் அனைவருக்கும் சந்தனம் கொடுத்து வரவேற்று மரியாதை செய்வார்கள். கோவில் பூசாரி மற்றும் ஊருக்காக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வேட்டி- சட்டை கொடுத்து மரியாதை செய்வார்கள்.

பின்னர் முதல் மாடு அவிழ்த்த வீட்டின் முன்பு சிதறு தேங்காய் உடைத்த பின்னர், வாசலில் போடப்பட்ட உலக்கையை தாண்ட வைத்து, முதல் மாட்டை அவிழ்த்து வில்லாயி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் செல்வார்கள். தொடர்ந்து கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டின் மாடுகளும் அழைத்துச் செல்லப்படும். ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் மாடுகளும், கிராமமக்களும் ஊர்க் கோவிலை அடைந்ததும், அங்கு அம்மனுக்கு பூஜை செய்யப்பட்டு, மாடுகளுக்கு தீபாராதனை காட்டப்படும். முதல் மாட்டை அவிழ்த்த வீட்டுப் பெண், பித்தளை குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து, மாடுகள் மீது தெளித்து கற்பூரம் காட்டுவார். அதன் பின்னர் மாடுகளை விரட்டி விடுவார்கள். அது தன் எஜமானர்கள் இல்லாமலேயே, தங்களின் வீடுகளுக்குச் சென்றுவிடும்.

இந்த நிகழ்வின் போது சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து பலர் வருகை தந்து, ஆடு, மாடு, கோழி போன்றவற்றை நேர்த்திக்கடனாக செலுத்துவார்கள். அவை மறுநாள் கிராமப் பெரியவர்கள் முன்னிலையில் ஏலமிடப்படும். தொடர்ந்து வரவு, செலவு கணக்கு பார்க்கப்படும். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து, அடுத்த வருடம் யார் வீட்டில் முதல் மாடு அவிழ்க்கப்பட இருக்கிறதோ, அந்த வீட்டைச் சேர்ந்தவரை அழைத்து, தேங்காய், பழம் கொடுத்து, அடுத்த வருஷத்துக்கு தயாராகச் சொல்லி விடுவார்கள்.

ஒரு குடும்பம் செலவு செய்து ஊருக்கே சாப்பாடு போட்டு பொங்கல் விழாவை நடத்துவது அனைவரையும் வியப்படையச் செய்கிறது.

1 More update

Next Story