அசரவைக்கும், மினியேச்சர் அரசுப்பேருந்துகள்..! -அசத்தும் கலைஞர்

நிஜமான பேருந்தை புகைப்படம் எடுத்தது போல இருக்கும் இவை அனைத்தும் அட்டையில் உருவான மினியேச்சர் பேருந்துகள். நிஜ பேருந்துகளைப் போலவே, அட்டையில் தத்ரூபமாக உருவாக்கி அசத்தி இருப்பவர், சார்லி.
விழுப்புரம் வழுதரெட்டி ஸ்ரீராம் நகரில் வசித்து வரும் சார்லியின் வீட்டில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் (டி.என்.எஸ்.டி.சி.) பஸ்களின் மினியேச்சர் மாடல்கள் நிறைய காட்சியளிக்கின்றன.
உண்மையான பஸ்சில் இருப்பது போன்றே இருக்கைகள், எல்.இ.டி. விளக்குகள், எல்.இ.டி. டிஸ்பிளே போர்டுகள், கதவுகள், ஸ்டீயரிங், ஓடோமீட்டர் மற்றும் கியர்பாக்ஸ் ஆகியவை இதிலும் உள்ளன. அவரிடம் பேசினோம்...
''எனக்கு சிறு வயதில் இருந்தே பஸ்கள் மீது ஒரு தனி ஆர்வம் இருந்தது. குறிப்பாக பழைய அரசு பஸ்களின் மீது அதீத ஈர்ப்பு இருந்தது. அந்தசமயத்தில் அரசு பஸ் போலவே இருக்கும் பொம்மைகளை வாங்க ஆர்வமாக இருந்தேன். ஆனால் கிடைக்கவில்லை. அதனால் நாமே ஒரு பஸ்சை உருவாக்கினால் என்ன? என்று எனக்கு தோன்றியது.
நான் 4-ம் வகுப்பு படிக்கும்போது டூத்பேஸ்ட் அட்டையை வைத்து முதன்முதலாக பஸ் மாதிரியை உருவாக்கினேன். பிறகு லேமினேஷன் ஷீட்டை பயன்படுத்தி இருக்கைகளுடன் கூடிய பேருந்தை உருவாக்கினேன். காலம் செல்லச்செல்ல பொம்மைபோல் இல்லாமல் நிஜ பஸ் போன்றே இருக்க வேண்டும் என்று நுணுக்கமாக சில பொருட்களை சேர்த்தேன். என்னுடைய 11 வயதிலேயே பஸ் மீதான காதல் மேலும் அதிகரித்தது. பஸ்சின் வடிவத்திற்காக அட்டையை (கார்டு போர்டு) பயன்படுத்தினேன்.
பக்கவாட்டு மற்றும் முன்புற, பின்புற கண்ணாடியை ஒளி ஊடுருவக்கூடிய ஓ.எச்.பி. ஷீட் கொண்டு செய்தேன். பஸ்சினுள் எல்.இ.டி. பல்பு, கலர் எல்.இ.டி., ஹெட்லைட், ஸ்டீயரிங் வீல், டாஷ்போர்டு ஆகியவற்றை பிரத்யேகமாக வடிவமைத்து சேர்த்தேன்'' என்றவர், மருத்துவ பிரதிநிதியாக வேலைபார்க்கிறார். வேலை நேரம் போக கிடைக்கும் ஓய்வு நேரங்களில் மட்டுமே இந்த கலை படைப்புகளை உருவாக்குகிறார்.
''ஒரு முழு மாடல் பஸ்சை செய்து முடிக்க ஒரு வாரமாகும். ஆனால் எனக்கு கிடைக்கும் நேரம் குறைவு என்பதால் 2 மாதங்கள் வரை ஆகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தின்போது வாட்ஸ்-அப், முகநூல் மூலம் பேருந்து வடிவங்களை பார்த்து மினியேச்சர்களை உருவாக்கினேன். அரசு போக்குவரத்துக்கழகங்களால் இயக்கப்படும் சமீபத்திய தாழ்தளம் பேருந்து, டீலக்ஸ் பேருந்து, ஏ.சி. பேருந்து மற்றும் சி.என்.ஜி. பேருந்து வடிவங்களை இந்த மினியேச்சர் பஸ்கள் பிரதிபலிக்கிறது. மேலும் பஸ்களில் அக்ரிலிக் பெயிண்ட் பயன்படுத்தியும், வண்ண ஸ்டிக்கர்களை ஒட்டியும் அழகுபடுத்துகிறேன்.
மினியேச்சர்களை உருவாக்க உள்நாட்டில் கிடைக்கும் அட்டைப்பலகை மற்றும் பொருட்களை பயன்படுத்துகிறேன். அவை அசல் மாதிரியை ஒத்திருக்கும். அனைத்து சிறிய பஸ் மாடல்களும் ஒரே அளவீடுகளுடன் இருக்கும் வகையில் தயார் செய்து வருகிறேன்.
இது 52 செ.மீ. நீளம், 10.5 செ.மீ. அகலம் மற்றும் 11 செ.மீ. உயரமாகும். இருப்பினும், பஸ்களின் மற்ற மாடல்களுக்கு வரும்போது அவை மாறுபடும். மல்டி-ஆக்சில் மற்றும் ஹைப்ரிட் மாடல்களில் பஸ் 5 செ.மீ. நீளம் கொண்டது. இதற்காக பயன்படுத்தப்படும் தீம்கள், ஸ்கேல்கள் மற்றும் மெட்டீரியல்கள் மற்ற மினியேச்சர் பஸ்களில் இருந்து வேறுபடலாம். அரசு பஸ் மட்டுமில்லாமல் தனியார் வால்வோ பஸ், பல்லவன் பஸ், எலக்ட்ரிக் பஸ், லோ புளோர் பஸ், பென்ஸ் லாரி என இதுவரை 13 வாகனங்களை செய்துள்ளேன்'' என்றார்.
''தற்போது அட்டையில் செய்து வருகிறேன். மேலும் அட்டைக்கு மாற்றாக போம்போர்டு எனப்படும் பொருளை கொண்டு தயாரிக்க உள்ளேன். இது ரப்பர் போன்று இல்லாமல் கடினமாகவும், தரமாகவும் இருக்கும், தண்ணீரில் நனைந்தால்கூட வீணாகாது. அவற்றை பயன்படுத்தி பஸ் மாடல்களை உருவாக்க உள்ளேன்.
நான் செய்யும் பஸ் மாடல்களை விற்பனை செய்யவில்லை. ஒரு பொழுதுபோக்கிற்காக மட்டுமே செய்து வருகிறேன். ஆனால் என்னிடம் நிறைய பேர் குழந்தைகள் விளையாடுவதற்காகவும், வீட்டில் அழகுக்காக வைக்கவும் விற்பனைக்கு கேட் கிறார்கள். இதனால் எதிர்காலத்தில் விற்பனைக்கு கொண்டு வரலாம் என முடிவு செய்திருக்கிறேன்.
மினியேச்சர் கிராப்டர்ஸ் என்ற கேரளாவை அடிப்படையாக கொண்ட முகநூல் பக்கத்தில் நான் சேர்ந்தேன். அதில் நிறைய பேர் இதுபோன்ற மாடல்களில் பஸ்சை செய்கிறார்கள். அந்த முகநூல் பக்கம் என்னுடைய ஆர்வத்திற்கு மிகவும் உதவியது. ஏதாவது பஸ் செய்வதில் சந்தேகம் வந்தால் அவர்களிடம் குறுந்தகவல் மூலம் கேட்பேன். அதுபோல் அவர்களும் என்னிடத்தில் அவர்களுக்கு என்ன சந்தேகமோ கேட்பார்கள்'' என்றார்.






