அன்னம்மா சேச்சி சமையல், 'சூப்பர்..!'


அன்னம்மா சேச்சி சமையல், சூப்பர்..!
x

அன்னம்மா சேச்சி, இன்று 87 வயதிலும் தெம்போடு, தனது சுவைமிகுந்த கிராமத்துச் சமையல் கலையை வலைத்தளம் மூலம் பல லட்சம் பேருக்கு கற்றுக் கொடுத்து வருகிறார்.

மிளகு போட்டு வறுத்த கோழி, மாங்காய் போட்ட மத்திக்குழம்பு, புதர் மண்ணில் வேகவைத்த கோழி, கிழங்கு பிரியாணி, விதவிதமாக வறுத்த பன்றிக் கறி, புதுமையாகப் பொரித்த மாட்டுக்கறி.. இப்படி தனது திறமையையும் சமையல் பொருட்களையும் அளவான மசாலாவோடு அள்ளிக் கொட்டி, தனது திறமையைக் காட்டி வருகிறார் இந்தச் சேச்சி.

அன்னம்மா

அன்று, ஒரு வேளை கஞ்சிக்கே தடுமாறிய அன்னம்மா சேச்சி, இன்று 87 வயதிலும் தெம்போடு, தனது சுவைமிகுந்த கிராமத்துச் சமையல் கலையை வலைத்தளம் மூலம் பல லட்சம் பேருக்கு கற்றுக் கொடுத்து வருகிறார்.

கமகமக்கும் தனது சமையல் வாசனையால், யூ-டியூபில் இன்றுவரை எட்டரை லட்சம் சந்தாதாரர் களைக் கவர்ந்திழுத்திருக்கிறார், இந்தச் சேச்சி.

பட்டினியிலும் வறுமையிலும்தான் தொடங்கியது அன்னம்மாவின் குழந்தைப் பருவம். மொத்தம் பத்து பிள்ளைகளை பெற்ற பெற்றோருடன், அவர்களுக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்த அன்னம்மா, கேரளாவின் கோட்டயத்திலிருந்து பஞ்சம் பிழைக்க வயநாடு வந்து சேர்ந்தது தனது ஒன்பதாவது வயதில்.

பெண் குழந்தைகள் கல்வி கற்கவோ பள்ளிக் கூடம் போகவோ கூடாது, வீட்டு வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும் என அப்பா கண்டிப்பாகச் சொல்லிவிட்டதால் அந்த வயதிலும் வீட்டுவேலைகள் செய்யப் பழகியிருந்தார் அவர்.

விதவிதமாக சமைக்க எதுவும் இருக்காது என்றாலும் உள்ளதை வைத்து ருசியாகச் செய்வதற்கு கற்றுக் கொடுத்திருந்தார் அவரின் அம்மா. அந்த கைப்பக்குவத்தைதான் இன்று இணையதளம் மூலமாக உலகறியச் செய்கிறார் அன்னம்மா.

கணவர் ஸ்டீபன், இவரை மணமுடித்தது பத்தொன்பதாவது வயதில். மிகுந்த சிரமங்களுக் கிடையிலும் தங்களுக்குப் பிறந்த ஆறு குழந்தைகளையும் வளர்த்து வந்தனர்.

கூலி வேலைக்குச் சென்று கிடைத்ததைக் கொண்டு மாலையில் வந்து கஞ்சி சோறு வைத்துப் பரிமாறினால், கடைசி தட்டில் எதுவும் மிஞ்சாது. பட்டினியும் பரிவட்டமுமாகப் படுத்துத் தூங்கிவிடுவார். எதையும் எதிர்கொள்ளும் மனநிலை அப்படித்தான் உருவானது, அன்னம்மாவுக்கு.

இருந்த கொஞ்ச இடத்தையும் விற்று பெண் பிள்ளைகளைக் கட்டிக் கொடுத்தார். அதனால் வாடகை வீட்டிற்குக் குடிபெயர வேண்டியதாயிற்று. அந்த நேரத்தில் ஓர் அகதிகள் காப்பகம் ஒன்றில் சமையல் வேலை கிடைத்தது. அங்கிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோருக்குச் சமைத்துப் போட்ட அவரது ருசியான சமையலை எல்லோரும் பாராட்டினர்.

கூடவே அன்னம்மாவின் மகனுக்கு ஈராக்கில், சமையல் வேலை கிடைக்க வாழ்க்கை பசி, பட்டினியில் இருந்து மீண்டது. அதன் பிறகு அன்னம்மாவின் வறுமையும் சிரமங்களும் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அன்னம்மா சேச்சியின் சமையல் திறனை அறிந்த நடவயலைச் சேர்ந்த சச்சின் மற்றும் அவரின் மனைவி பிஞ்சு ஆகியோர், `அன்னம்மா சேட்டத்தி' என்ற பெயரில் ஒரு யூ-டியூப் சேனலை தொடங்கினர்.

காலர் இல்லாத சட்டையும், வேட்டியும் அணிந்தபடி சராசரி கிராமத்துக் கேரள பெண்கள் எப்படி சமையல் செய்வார்களோ அதே விதத்தில் செய்யும் சமையலை அவர்கள் வீடியோவாக்கி, யூ-டியூப்பில் பதிவு செய்ய அதை ஆயிரக்கணக்கானோர் ரசிக்கத் தொடங்கினர்.

மிளகு போட்டு வறுத்த கோழி, மாங்காய் போட்ட மத்திக்குழம்பு, புதர் மண்ணில் வேகவைத்த கோழி, கிழங்கு பிரியாணி, விதவிதமாக வறுத்த பன்றிக் கறி, புதுமையாகப் பொரித்த மாட்டுக்கறி.. இப்படி தனது திறமையையும் சமையல் பொருட்களையும் அளவான மசாலாவோடு அள்ளிக் கொட்டி, தனது திறமையைக் காட்டி வருகிறார் இந்தச் சேச்சி.

தொடர்ந்து அன்னம்மாச் சேச்சி போடும் ஒவ்வொரு சமையல் வீடியோக்களையும் பார்த்துச் சமைத்து ருசிக்கும் சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் எட்டரை லட்சத்தைக் கடந்திருக்கிறது.

தனது யூ-டியூப் சேனலின் முதலாம் ஆண்டை கொண்டாட நினைத்த அன்னம்மா சேச்சி, அதற்காகத் தேர்ந்தெடுத்தது ஸ்டார் ஓட்டல் அல்ல.. வாகன விபத்திற்குள்ளாகிப் படுத்த படுக்கையாகிக் கிடக்கும் கொளகப் பாறையைச் சேர்ந்த பிரசாந்தின் வீட்டில் 'சொந்தவீடும் இல்லை.. உதவவும் யாரும் இல்லை' என பிரசாந்தின் கஷ்டங்களைச் சமீபத்தில் அவரிடம் சொல்லி வேதனைப்பட்டிருந்தார் ஒருவர். அதை மனதில் வாங்கிக் கொண்ட அன்னம்மா, பிரசாந்தை நேரில் சந்தித்து, 'நீ கவலைப்படாதே. நீ தனிமரமல்ல. எனக்கு உலகம் முழுக்க எட்டு லட்சம் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் முடிந்த அளவு உனக்கு உதவுவார்கள்' என ஆறுதல் படுத்தியதோடு, ஆண்டு விழா சிறப்பு வீடியோவை அவரது வீட்டில் வைத்து ஒளிப்பதிவு செய்து பதிவேற்றமும் செய்தார்.

இது குறித்துப் பேசிய அன்னம்மா சேச்சி, "எனக்குப் பணம் சம்பாதிக்க வேண்டும். சொத்து சேர்க்கவேண்டும் அப்படியெல்லாம் எண்ணமில்லை.

அன்று அன்று கிடைப்பதை வைத்து வாழ்க்கையை ஓட்டணும். நாலு பேருக்கு நல்லது செய்ய முடிந்தால் அதை பண்ணவேண்டும்.

என் குழந்தைகள் எல்லாம் ஓரளவு நன்றாக இருக்கிறார்கள். நானும் பேரன், பேத்திகளோடு சந்தோஷமாக இருக்கிறேன். அதுவே போதும். வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் அகதிகள் காப்பகத்தில் பதினோரு வருஷம் சமையல் செய்த அனுபவம் மூலம் இன்றைக்கு யூ-டியூப் மூலமாக நிறைய பேருக்கு அறிமுகமாகியிருக்கிறேன். அதுவே பெரிய மகிழ்ச்சி" என பூரிக்கிறார்.

1 More update

Next Story