இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மறுபக்கம்


இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மறுபக்கம்
x

இந்தியாவின் இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்ற சிறப்பை பெற்றவர், அன்சார் ஷேக். 21 வயதில் அதுவும் முதல் முயற்சியிலேயே யூ.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்று இந்த சாதனையை படைத்திருக்கிறார். தற்போது யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுத தயாராகுபவர்களுக்கு உத்வேகமாக விளங்குகிறார்.

அன்சார் ஷேக்கின் பூர்வீகம், மகாராஷ்டிரா மாநிலம் மராத்வாடா பகுதியில் அமைந்துள்ள ஷெல்காவ் கிராமம். இவரது தந்தை யோனுஸ் ஷேக் அகமது ஆட்டோ டிரைவர். மதுப்பழக்கம் கொண்டவர். அதனால் அவரது வருமானம் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வதாக அமைந்திருக்கவில்லை. குழந்தை பருவம் முதலே அன்சார் ஷேக் வறுமை சூழலை எதிர்கொண்டு வாழ பழகி இருக்கிறார்.

குடும்ப வன்முறை, குழந்தை திரு மணம் போன்ற எதிர்மறையான விஷயங்களை பார்த்து வளர்ந்ததாக வேதனை யுடன் சொல்கிறார். இவரது சகோதரி களுக்கு 15 வயதில் திருமணம் நடந்து இருக்கிறது. குடும்ப செலவுகளை சமாளிப்பதற்காக வேலைக்கு செல்லும் நோக்கத்தில் இவரது சகோதரர் 7-ம் வகுப்போடு படிப்பை நிறுத்தி இருக்கிறார். அவர்தான் அன்சார் படிப்பை தொடர்வதற்கு உதவி இருக்கிறார்.

உயர்கல்வியை படித்து முடித்ததும் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதுவதற்கும் வழிகாட்டி இருக்கிறார். 2016-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதியவர் 275-க்கு 199 மதிப்பெண்கள் பெற்று முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று அசத்தி இருக்கிறார். அதன் மூலம் நாட்டிலேயே இளம் வயதில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான முதல் நபர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரராகி விட்டார்.

''தேர்வு எழுதும் லட்சக்கணக்கானவர்களுடன் போட்டி போடுகிறோம் என்று நினைப்பது தவறானது. உங்களுக்கு ஒரே போட்டியாளர் நீங்கள்தான். உங்களைத்தான் நீங்கள் வெல்ல வேண்டும். அவநம்பிக்கையான எண்ணங்களை விட்டு விடுங்கள். உலக அளவில் மூன்றாவது கடினமான தேர்வு முறையாக யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யூ.பி.எஸ்.சி) கருதப்படுகிறது.

இந்த தேர்வை எதிர்கொள்வதற்கு நிலையான, உறுதியான, கடின உழைப்பு மற்றும் நம்பிக்கை அவசியமானது. மிகவும் மதிப்புமிக்க மற்றும் செல்வாக்குமிக்க வேலையை வழங்கும் இந்த தேர்வை எழுதுவதற்கு கடின முயற்சிகளை மேற்கொண்டுதான் ஆக வேண்டும். தேர்வு அட்டவணை உருவாக்கி திட்டமிட்டு படியுங்கள். வெற்றி உங்களை தேடி வரும்'' என்கிறார்.


Next Story