பாலிவுட்டில் நுழையும் அனுபமா பரமேஸ்வரன்


பாலிவுட்டில் நுழையும் அனுபமா பரமேஸ்வரன்
x

தென்னிந்திய சினிமாவில் இருந்து பாலிவுட்டுக்குள் நுழையும் நாயகிகளின் பட்டியலில் அனுபமா பரமேஸ்வரனும் இடம்பிடித்துள்ளார்.

நிவின்பாலி நடிப்பில், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், 'பிரேமம்'. மலையாள மொழியில் வெளியிடப்பட்டாலும், இந்தப் படம் தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது.

இந்தப் படத்தின் மூலமாக சினிமா உலகிற்கு அறிமுகமானவர், அனுபமா பரமேஸ்வரன். தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர், தமிழில் தனுஷ் ஜோடியாக 'கொடி' படத்தில் அறிமுகமானார். இருப்பினும் இவருக்கு பெரிய வரவேற்பு இல்லாமல் இருந்து வந்தது. மலையாளத்திலும், தெலுங்கிலும் அவர் சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் பெரிய அளவில் வெற்றிப் படங்கள் அமையவில்லை.

இந்த நிலையில் தெலுங்கு மொழியில் கடந்த வாரம் வெளியான 'கார்த்திகேயா -2' என்ற படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். அட்வென்சர் திரில்லர் படமாக உருவாகியிருந்த இந்தப்படம் ரூ.30 கோடியில் எடுக்கப்பட்டிருந்தது. படம் வெளியான ஒரே வாரத்தில் இந்தப் படம் ரூ.60 கோடி வசூல் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது.

ரசிகர்கள் பலரின் வரவேற்பையும் இந்தப் படம் பெற்றிருக்கிறது. இதனால் அனுபமா பரமேஸ்வரன் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார். அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை வழங்கும் வகையில் தற்போது பாலிவுட்டில் இருந்தும் அழைப்பு வந்திருக்கிறதாம்.

ஆம்... தெலுங்கில் 'கார்த்திகேயா-2' படம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, அதில் நடித்திருந்த அனுபமா பரமேஸ்வரனை, பாலிவுட் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்று, தங்களின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க வைக்கும் முயற்சியை எடுத்து வருகிறதாம்.

இதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் இருந்து பாலிவுட்டுக்குள் நுழையும் நாயகிகளின் பட்டியலில் அனுபமா பரமேஸ்வரனும் இடம்பிடித்துள்ளார்.


Next Story