ஆங்கிலேயரின் சிம்மசொப்பனம் தீரன் சின்னமலை - இன்று 218-வது நினைவு தினம்


ஆங்கிலேயரின் சிம்மசொப்பனம் தீரன் சின்னமலை - இன்று 218-வது நினைவு தினம்
x

ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை அன்னியரிடம் இருந்து மீட்க இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட முழக்கத்தை தொடங்கி வைத்த பெருமை வீரபாண்டிய கட்ட பொம்மனையே சேரும். அந்த வரிசையில் வந்தவர்களில் கொங்குநாட்டு சிங்கம், தீரன் சின்னமலைக்கும் முக்கிய பங்கு உண்டு.

கொங்கு நாட்டில் கொங்கு வேளாளர் மரபில் பயிர குலத்தில் பழையகோட்டை சர்க்கரை மன்றாடியார் வழியில் தோன்றியவர் சின்னமலை. கொங்குநாட்டில் காங்கயநாடு இருந்தது. இந்த நாடு காங்கயம், முத்தூர், வெள்ளகோவில், காடையூர் உள்ளிட்ட 14 பகுதிகளை கொண்டது. தற்போதைய நொய்யல் நதிக்கரையில் காங்கயம் அருகே ஆனூரில் இருந்த பழையகோட்டை பட்டக்காரர் மரபினர் அரண்மனை கட்டி குடியேறினார்கள். ரத்தினம் சர்க்கரையின் அண்ணன் நல்ல சேனாபதி பட்டக்காரராக பட்டம் சூட்டினார்.ரத்தினம் சர்க்கரை-பெரியாத்தா தம்பதி ஆனூருக்கு மேற்கே உள்ள மேலப்பாளையம் என்ற ஊரில் குடியேறினர்.

இவர்களுக்கு குழந்தைசாமி, தீர்த்தகிரி, பெரியதம்பி, கிலேதார், குட்டிச்சாமி ஆகிய 5 மகன்கள், பருவதம் என்ற மகள் இருந்தனர். தீர்த்தகிரி 1756-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ந் தேதி பிறந்தார். தீர்த்தகிரி தான் தீரனாக புகழ்பெற்ற சின்னமலை ஆவார். சின்னமலை இளமையிலேயே வீரம் செறிந்தவராக இருந்தார். பெரியதம்பி, கிலேதார் ஆகியோர் சின்னமலையோடு இருந்தனர். சின்னமலையின் இளமைக்காலத்தில் அரண்மனை பணியாளர் மரபில் வந்த இளைஞர் கறுப்ப சேர்வையும், வேலப்பனும் நிழல் போல் இருந்து வந்தனர்.

ஒருநாள் சின்னமலை அரச்சலூர் மலைக்கு சென்று வேட்டையாடி விட்டு மேலப்பாளையம் நோக்கி செல்லும்போது சில குதிரை வீரர்களை சின்னமலை நிறுத்தினார். அவர்களிடம் விசாரித்தபோது, மைசூரு மாமன்னர் ஐதர்அலியின் பணியாட்கள் என்றும், தென் கொங்குநாட்டு வரிப்பணத்தை வசூலித்து சங்ககிரி கோட்டைக்கு கொண்டு செல்கிறோம் என்றனர். இதைகேட்ட சின்னமலை வெகுண்டெழுந்து, பணமூட்டையை பறித்தார். வடக்கே சென்னிமலை, தெற்கே சிவன்மலை இரண்டு மலைகளிலும் முருகன் அருள்பாலிக்கிறார். அவர் அருளால் நாங்கள் நாட்டு மக்களுக்காக உழைக்க தயாராக உள்ளோம். சிவன்மலைக்கும், சென்னிமலைக்கும் இடையே ஒரு சின்னமலை வந்து வரிப்பணத்தை வாங்கிக்கொண்டதாக சொல் என்று வீரர்களை அனுப்பி வைத்தார். அன்று முதல் சின்னமலையின் புகழ் கொங்கு நாடு முழுவதும் பரவியது. வரிப்பணம் வந்து சேராததால் சங்ககிரி திவான் மீரா சாகிப் சின்னமலையை கைது செய்ய 100 குதிரைப்படை வீரர்களை அனுப்பி வைத்தான். ஆனால் சின்னமலையோ மேலப்பாளையம் சிலம்ப கூடத்தார் துணையோடு குதிரைப்படையை விரட்டினார். அதன்பிறகு சின்னமலையின் புகழ் திப்பு சுல்தானின் சீரங்கப்பட்டணம் அரண்மனையில் எதிரொலித்தது. சின்னமலையின் வீரத்தை அறிந்த திப்பு சுல்தான், ஆங்கிலேயரை விரட்ட சின்னமலையின் உதவியை நாடினார். கொங்கு இளைஞர்கள் 1,000 பேருடன் சின்னமலை சீரங்கப்பட்டணம் சென்று திப்பு சுல்தானை சந்தித்தார். சின்னமலை, பெரியதம்பி, கிலேதார், கறுப்ப சேர்வை, வேலப்பன் ஆகியோர் இடம்பெற்றனர். திப்பு சுல்தானின் விருப்பப்படி, படைத்தலைவர்களில் ஒருவராக சின்னமலை செயல்பட்டு ஆங்கிலேய படைக்கு பெரும் சேதம் விளைவித்தார். மழவல்லிப்போரில் சின்னமலை படையிடம் ஆங்கிலேய படை கடுமையாக சண்டையிட்டது. 1799-ம் ஆண்டு மே மாதம் 4-ந் தேதி இறுதிப்போரில் திப்புசுல்தான் ஆங்கிலேயரால் கொல்லப்பட்டார். இது சின்னமலைக்கு பேரிழப்பாக அமைந்தது. தனது வீரர்களுடன் சின்னமலை கொங்குநாட்டுக்கு திரும்பினார். இதில் வேலப்பன் ஆங்கிலேய படையிடம் கைதியாக சிக்கிக்கொண்டார்.

ஓடாநிலைக்கு திரும்பிய சின்னமலை, அங்கு கோட்டை கட்டி பாதுகாப்பை பலப்படுத்தினார். சின்னமலையின் போர்ப்படையில் அனைத்து சமூகத்தினரும் இடம்பெற்றனர்.

காவிரி கரையின் பாதுகாப்பை கறுப்ப சேர்வை தலைமையிலான வீரர்கள்கவனித்தார்கள். ஆங்கிலேயர்களால் காவிரிக்கரையை கடக்க முடியாமல் போனது. இதனால் சின்னமலையிடம் சமாதான தூது அனுப்பியும் சின்னமலை ஆங்கிலேயரின் ஆசைக்கு மயங்கவில்லை. 1801-ம் ஆண்டு ஆங்கிலேய கர்னல் மேக்ஸ்வெல் தலைமையில் வந்த படையை சின்னமலை படை ஓட, ஓட விரட்டியது. இந்த போரை காவிரிக்கரைப்போர் என்று அழைத்தனர். 1802-ம் ஆண்டு 10 ஆயிரம் பேர் கொண்ட பெரியபடை சங்ககிரியில் இருந்து புறப்பட்டு ஓடாநிலை நோக்கி வந்தது. சின்னமலையின் தடிக்காரர் படையினர் தாக்குதலில் ஆங்கிலேய படை சிதறி ஓடியது. அந்த படைக்கு தலைமை தாங்கிய ஆங்கிலேய கர்னல் மேக்ஸ்வெல் தலையை சின்னமலை வெட்டி சாய்த்தார். அந்த தலைக்கு சந்தன பொட்டு வைத்து மாலை அணிவித்து கொங்குநாட்டின் பல ஊர்களுக்கு காட்சிப்பொருளாக காட்டப்பட்டது. இந்த போர் ஓடாநிலைப்போராகும்.

இதைத்தொடர்ந்து வெகுண்டெழுந்த ஆங்கிலேயர்கள் கர்னல் ஹாரிஸ் தலைமையில் குதிரைப்படையை ஓடாநிலைக்கு அனுப்பினார்கள். காவிரியை கடந்து வந்த குதிரைப்படையை எதிர்கொள்ள, சின்னமலை தனது குதிரை மீது ஏறி மின்னல் வேகத்தில் பாய்ந்தார். அறச்சலூர் நத்தமேடு அருகே வந்தபோது, தனி ஆளாக குதிரையில் சென்ற சின்னமலை தனது கையில் வைத்திருந்த வெடிகுண்டை ஹாரிசின் குதிரை மார்பு மீது எறிந்தார். அது பலத்த சத்தத்துடன் வெடித்து காயத்தை ஏற்படுத்தியது. ஹாரிஸ் குதிரையோடு ஓட, பின்னால் குதிரைப்படையினர் சிதறி ஓடினார்கள். சின்னமலையை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் நினைத்தனர்.

நல்லமங்களபாளையத்தை சேர்ந்த பொல்லான், தீரன் சின்னமலையின் நம்பிக்கைக்குரியவர். ஆங்கிலேய படையில் இருந்தபடி வேலப்பன் பல ரகசியங்களை பொல்லான் மூலம் சின்னமலைக்கு அனுப்பி வைத்தார். சின்னமலை தினமும் புதிய செருப்பை அணியும் பழக்கம் கொண்டவர். ஒருநாள் காலையில் செருப்பில் மறைத்து வைத்திருந்த கடிதத்தை சின்னமலை படித்தார். அது வேலப்பன் எழுதிய கடிதம். 36 பெரிய பீரங்கிகளுடன் ஆங்கிலேய படை ஓடாநிலைக்கு வர தயாராகி உள்ளது. அதனால் சகோதரர்களுடன் கோட்டையில் இருந்து வெளியேறி தலைமறைவாக இருந்து அதன்பிறகு போருக்கு தயாராகுங்கள் என்று எழுதியிருந்தார்.

இதனால் கோட்டையை காலி செய்து விட்டு பழனி மலைத்தொடரில் உள்ள கருமலைக்கு சின்னமலை தனது சகோதரர்களுடன் புறப்பட்டு சென்று தங்கினார். இந்தநிலையில் ஆங்கிலேய படை பெரிய பீரங்கிகளுடன் ஓடாநிலை கோட்டைக்கு வந்தது. அங்கு சின்னமலை இல்லை. கோட்டைக்குள் பார்த்தபோது, வேலப்பன் எழுதிய கடிதம் கிடைத்தது. இதைப்பார்த்த ஆங்கிலேய தளபதி, வேலப்பனை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக்கொன்றான். பின்னர் கோட்டையை மண் மேடாக்கினர்.

வேலப்பன் கொல்லப்பட்டதை அறிந்த சின்னமலை மிகவும் வருந்தினார். கடிதத்தை மறதியாக விட்டதால் உயிர் நண்பனின் உயிர் பறிபோனதே என்று கலங்கினார். சின்னமலை கருமலைக்கு சென்றபோது, நல்லப்பன் என்கிற சமையல்காரரையும் உடன் அழைத்துச்சென்றார். மலையின் அடிவாரத்தில் நல்லப்பன் சமையல் செய்து வைத்ததும் பகல் நேரத்தில் சின்னமலை சகோதரர்கள் வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் மலைமேல் சென்று விடுவார்கள். நாட்கள் செல்ல, செல்ல நல்லப்பனுக்கு பணத்தாசை காண்பித்து ஆங்கிலேயர்கள் கைவசப்படுத்தினார்கள்.

வீட்டுக்கு அருகே சுரங்கம் தோண்டி வீட்டுக்குள் வருவது போன்ற பாதை தயாரானது. நல்லப்பன், சின்னமலை சகோதாரர் சாப்பிட வந்ததும் துப்பாக்கியை கீழே வைத்து சாப்பிட வற்புறுத்தினார். அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்த நேரத்தில் நல்லப்பன், சுரங்கப்பாதையை அடைத்து வைத்திருந்த பெட்டியை நகர்த்த உள்ளே இருந்து ஆங்கிலேய படைகள் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அனைத்தும் நடந்து விட்டது. அதை அறிந்த சின்னமலை ஓங்கி அறைந்ததில் நல்லப்பன் சுருண்டு விழுந்து இறந்தார். சின்னமலை, பெரியதம்பி, கிலேதார் ஆகிய 3 பேரையும் ஆங்கிலேயர்கள் சுற்றி வளைத்து கைது செய்து கைவிலங்கு போட்டு சங்ககிரி கோட்டைக்கு கொண்டு சென்றனர். இதை கேள்விப்பட்ட கொங்கு நாடே சோகத்தில் மூழ்கியது.

ஆடி மாதம் 1-ந் தேதி 3 பேரும் சங்ககிரி கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். இதை கேள்விப்பட்ட கறுப்ப சேர்வையும் சங்ககிரி கோட்டைக்கு சென்று சரண் அடைந்தார். 4 பேரும் சிறையில் இருந்தனர். சின்னமலையிடம் ஆங்கிலேயர்கள் நயவஞ்சகமாக பேசி அடிபணிய வைக்க நினைத்தனர். சின்னமலையை மன்னித்து விடுதலை செய்வதாகவும், கோவை கோனாக இருந்து தனியரசு செலுத்திக்கொள்ளலாம். சிறு அளவு வரியை எங்களுக்கு செலுத்தினால் போதும் என்று ஆங்கிலேய தளபதி மார்ஷல் பேசினான். ஆனால் எரிமலை போல் சினம் கொண்ட சின்னமலை, 'அடிமை வாழ்வு வாழ எனது மனம் இடம் கொடுக்கவில்லை. உங்களுக்கு அடிமையாக வாழ்வதை விட இன்னுயிரை விடுவது மேலானது. ஆயிரமாயிரம் சின்னமலைகள் தோன்றுவார்கள். எங்கள் நாட்டின் அடிமைக்கட்டுகள் அவிழ்க்கப்படும்' என்று பேசினார்.

ஆங்கிலேயர்கள் பலமுறை பேசியும், சின்னமலை தனது முடிவில் தீர்க்கமாக இருந்தார். 1805-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ந் தேதி ஆடி பதினெட்டு பண்டிகை நாள். கொங்குநாட்டு வரலாற்றில் அது கொடியநாளாக அமைந்தது. சங்ககிரி மக்களுக்கும் மறக்க முடியாதநாளாக போனது. சங்ககிரி கோட்டைக்கு செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.

மலை உச்சியில் பெரிய ஆலமரத்தின் வடக்கே நான்கு தூக்குமரங்கள் தயாராக இருந்தன. சின்னமலை, பெரியதம்பி, கிலேதார், கறுப்ப சேர்வை ஆகியோர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். 4 பேரும் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டனர். வரலாற்றில் தமிழ் மண்ணில் பிறந்தவன் என்னை தூக்கிலிட்டான் என்ற நிலை இருக்கக்கூடாது என்று கூறி, சைகை காட்ட தூக்கிடும் ஆட்கள் விலகி நின்றனர். தூக்கு மேடையில் நின்ற சின்னமலை, 'எங்கள் மண்ணை ஆள எங்களுக்கு தெரியும். சங்ககிரி மலையில் என் உயிரிலிருந்து தீரம், கொங்கு நாடெங்கும் விதைக்கப்படுகிறது. இனி ஒவ்வொரு குழந்தையும் தீரத்துடன் போர் செய்யும்' என்று வீர முழக்கமிட்டார்.

பின்னர் ஆனூர் அம்மனை வணங்கி தூக்கு கயிற்றை சின்னமலை முத்தமிட்டார். பின்னர் சின்னமலை, பெரியதம்பி, கிலேதார், கறுப்ப சேர்வை ஆகிய 4 பேரும் தங்கள் கழுத்தில் தாங்களாகவே தூக்கு கயிற்றை மாட்டி வீரமரணம் அடைந்தனர்.

சின்னமலையின் வீரப்பெயர் நிலைத்து நிற்கும் வகையில் அரசு பல செயல்பாடுகளை செய்து பெருமைப்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியில் தீரன் சின்னமலை குதிரை மீது அமர்ந்திருக்கும் வகையில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே ஓடாநிலையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மறைந்தாலும் சின்னமலையின் புகழ் சுடரொளியாய் என்றும் ஒளிவீசிக்கொண்டே இருக்கும். அந்த சுடரொளிக்கு வீரவணக்கம்.


Next Story