80 வயது மூதாட்டியின் மாரத்தான் ஆர்வம்


80 வயது மூதாட்டியின் மாரத்தான் ஆர்வம்
x

மும்பை மாரத்தான் போட்டியில் புடவை அணிந்து பங்கேற்று அசத்தி இருக்கிறார் 80 வயது மூதாட்டி பாரதி.

பெண்கள் புடவை அணிந்தபடி மாரத்தான் போட்டிகளில் பங்கேற்கும் நிகழ்வுகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு டிரெண்டிங் ஆவதுண்டு. சமீபத்தில் 80 வயது மூதாட்டி புடவை அணிந்து மாரத்தான் ஓடும் வீடியோ வைரலாகி இருப்பதோடு, இளம் தலைமுறைக்கு உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வை விதைப்பதாகவும் அமைந்திருக்கிறது. அந்த மூதாட்டியின் பெயர் பாரதி.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த இவர் சமீபத்தில் நடந்த மும்பை மாரத்தான் போட்டியில் புடவை அணிந்து பங்கேற்று அசத்தி இருக்கிறார். 4.2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட அந்த மாரத்தான் போட்டியை 51 நிமிடங்களில் நிறைவு செய்திருக்கிறார். அவர் கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி உற்சாகமாக ஓடோடி வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பலருடைய கவனத்தையும் ஈர்த்துவிட்டது.

அவரது பேத்தி டிம்பிள் மேத்தா பெர்னாண்டஸ் இன்ஸ்டாகிராமில் அந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அதில் பாரதி பாட்டி, மாரத்தான் போட்டி பற்றியும், ஓட்டப்பயிற்சி செய்வதன் அவசியம் பற்றியும் கூறி இருக்கிறார்.

''நான் தினமும் மாரத்தான் ஓட்டப்பயிற்சி செய்கிறேன். அதனால்தான் என்னால் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்க முடிகிறது. ஏற்கனவே நான்கு போட்டிகளில் பங்கேற்றுவிட்டேன்'' என்பவர் கையில் தேசியக் கொடியை ஏந்தி செல்வதற்கான காரணத்தையும் கூறுகிறார்.

''நான் இந்தியனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். என் தேசிய அடையாளத்தைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தேசியக் கொடியை கையில் ஏந்தினேன். இளைஞர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஓட்டப்பயிற்சி செய்வது அவசியம்'' என்றும் அறிவுறுத்துகிறார்.

பாரதியின் மாரத்தான் ஆர்வம் ''இளம் தலைமுறைக்குஉத்வேகம்'' அளிப்பதாக அமைந்திருப்பதாக பலரும் பாராட்டி பதிவிட்டுள்ளனர்.


Next Story