மஞ்சள் காட்டில் கல்லூரி மைனாக்கள்


மஞ்சள் காட்டில் கல்லூரி மைனாக்கள்
x

மங்கலம் என்றால், உடனடி நினைவுக்கு வருவது மஞ்சள். தமிழ்நாட்டின் கலாசாரத்திலும், ஆன்மிகத்திலும், புது வீடு, திருமணம் போன்ற அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் மஞ்சள் முக்கியத்துவம் பெறுவதைக் காணமுடியும். பெண்களின் ஒப்பனையிலும் மஞ்சளுக்கு தனி இடம் உண்டு.

மஞ்சளை அலங்கார, ஆன்மிக பொருள் என்று ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில் அது ஆரோக்கியம் சார்ந்ததும் கூட. மஞ்சள் ஒரு கிருமி நாசினியாகவும், மருந்துப் பொருளாகவும் இருப்பதை அறிவியல் உறுதிப்படுத்துகிறது. அதை முன்காலத்திலேயே உணர்ந்து, கலாசாரத்திலும், பண்பாட்டிலும் இணைத்து வைத்த தமிழர்களை நினைத்து நாம் பெருமைகொள்ள வேண்டும்.

பொதுவாக மஞ்சள் அனைத்து இடங்களிலும் பயிரிடப்படுவது இல்லை. கொங்கு மண்ணில் குறிப்பாக ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் மஞ்சள் பயிரிடுவதற்கு ஏற்ற பருவச் சூழலை கொண்டிருக்கின்றன. இந்திய அளவில் மராட்டியம், ஒடிசா மாநிலங்களில் மஞ்சள் அதிகம் விளைகிறது. ஆனால் அவற்றுக்கு இல்லாத ஒரு பெருமை, ஈரோட்டு மஞ்சளுக்கு உண்டு. அதாவது ஈரோடு மஞ்சள் 'புவிசார் குறியீடு' பெற்று தனித்தன்மையுடன் விளங்குகிறது.

ஈரோடு மஞ்சளில் 'குர்குமின்' என்கிற மூலக்கூறு பொருள் அதிகமாக உள்ளது. பச்சை மஞ்சளை உடைத்துப் பார்த்தால், ஈரோடு மஞ்சள் மட்டுமே லேசான ஆரஞ்சு நிறம் கலந்த மஞ்சள் நிறமாகவும், அதிக அடர்த்தியாகவும் காணப்படும். எனவே சர்வதேச சந்தைகளில் ஈரோடு மஞ்சளுக்கு தனி மதிப்பு உள்ளது.

இதையெல்லாம் அறிந்த கல்லூரி மாணவ- மாணவிகள் சிலர், தங்கள் கல்லூரி பேராசிரியரோடு ஈரோட்டில் உள்ள ஒரு மஞ்சள் வயலைப் பார்வையிடச் சென்றனர். அங்கிருந்த விவசாயியிடம் மஞ்சள் பயிரிடுவது பற்றி ஆர்வமாக கேட்டறிந்தனர்.

"ஒரு ஹெக்டேரில் சாகுபடி செய்ய, 2 ஆயிரம் கிலோ விதை மஞ்சள் தேவை. பயிரிடும் நிலத்தை இரண்டு முறை உழவு ஓட்டி 'பார்' பிரிக்க வேண்டும். பார்களின் ஓரத்தில் சுமார் அரை அடி இடைவெளி விட்டு, சுமார் கால் அங்குலம் ஆழத்தில் விதை மஞ்சளை நடவு செய்ய வேண்டும். நடவு முடிந்த 3-வது நாளில் உயிர் நீர் தெளிக்க வேண்டும். பின்னர் மண்ணின் தன்மைக்கு ஏற்ப, வாரம் ஒரு முறை தண்ணீர் தெளித்து வரவேண்டும்.

நன்கு அனுபவம் வாய்ந்த விவசாயிகள் அல்லது வேளாண் அதிகாரிகளின் அறிவுரையின் பேரில் உரம் போட்டு வருவது நல்லது. 10 மாதங்கள் வரை செடி நன்றாக வளரும். இடையில் நோய் தாக்குதல் இன்றி கவனித்து வரவேண்டும். அறுவடை காலம் தொடங்கியதும், மஞ்சள் செடியின் இலைகள் தானாக வாடத்தொடங்கும். ஒரு ஹெக்டேரில் பச்சை மஞ்சளாக 25 முதல் 30 டன்கள் வரை விளைச்சல் கிடைக்கும். அதை வேக வைத்து, பதப்படுத்தும்போது 5 முதல் 6 டன்களாக குறையும். மஞ்சளை பெரிய பேரல்களில் வைத்து வேக வைப்பார்கள். 40 அல்லது 45 நிமிடங்களில் மஞ்சள் வெந்து விடும். அப்போது மஞ்சள் வாசம் காற்றில் கலந்து எங்கும் வீசும். அந்த வாசமே விவசாயிகளின் கஷ்டத்தை போக்கிவிடும்" என்றார், அந்த விவசாயி.

மஞ்சளின் மகத்துவத்தை உணர்ந்துகொண்ட மாணவிகள் அனைவரும் உற்சாகமாக, மஞ்சள் வயலுக்குள் வலம் வரத் தொடங்கினர்.


Next Story