உலக கோப்பை கிரிக்கெட்: வெளிநாட்டு அணிகளுக்கு விளையாடும் இந்திய வம்சாவளி வீரர்கள்


உலக கோப்பை கிரிக்கெட்: வெளிநாட்டு அணிகளுக்கு விளையாடும் இந்திய வம்சாவளி வீரர்கள்
x

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 16 அணிகள் இடம் பெற்றிருந்தன. முதல் சுற்றில் 4 அணிகள் வெளியேறிய நிலையில் சூப்பர் 12 சுற்றில் 12 அணிகள் விளையாடி வருகின்றன. இந்த அணிகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் பிற வெளிநாட்டு அணிகளில் இடம் பிடித்து இந்திய அணிக்கு எதிராக விளையாடி வருகிறார்கள். அவர்களில் சிலரை பற்றி பார்ப்போம்.

இஷ் சோதி:

சுழற்பந்து வீச்சாளரான இவரது முழு பெயர் இந்தர்பீர் சிங் சோதி. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா, இவரது பூர்வீகம். சிறு வயதிலேயே இவரது குடும்பம் நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்து விட்டது. கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வம் காரணமாக சுழற்பந்து வீச்சாளராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டு விட்டார். 30 வயதாகும் இவர் இதுவரை நியூசிலாந்து அணிக்காக 17 டெஸ்ட், 37 ஒருநாள் போட்டி, 81 டி20 ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தார். தற்போது 20 ஓவர் உலக கோப்பை போட்டியிலும் நியூசிலாந்தின் 11 பேர் கொண்ட லெவன் அணியில் இடம் பெற்று எதிர் அணியினரை தனது சுழல் பந்து மாயாஜாலத்தால் மிரட்டிக்கொண்டிருக்கிறார்.

விக்ரம்ஜீத் சிங்:

19 வயதாகும் இளம் வீரரான இவரும் பஞ்சாப்பை சேர்ந்தவர்தான். அங்குள்ள சீமா குருத், இவரது பூர்வீகம். ஆனால் இவர் நெதர்லாந்து அணிக்காக விளையாடி வருகிறார். இடது கை ஆட்டக்காரரான இவர் அந்த அணியின் தொடக்க வீரராக களம் இறங்குவது சிறப்பம்சம். தற்போது நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இளம் வீரர்களில் இவரும் ஒருவர். இதுவரை 12 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும், 8, 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.

சிமி சிங்:

இவரது பூர்வீகமும் பஞ்சாப்தான். அங்குள்ள பத்லானாவில் பிறந்தவர். ஆனால் அயர்லாந்து அணியில் அங்கம் வகிக்கிறார். 2017-ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனார். 35 வயதாகும் இவர் இதுவரை 35 ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, 53 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 2018-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று போட்டியில் இவரது பந்து வீச்சு எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அமீரக அணியில் ஆதிக்கம்

அமீரக அணியில் இடம் பிடித்திருக்கும் ஷுண்டங்கப்பொயில் ரிஸ்வான், சிராக் சூரி, விருத்தியா அரவிந்த், கார்த்தி மெய்யப்பன் ஆகியோரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள்தான். ரிஸ்வானின் பூர்வீகம், கேரளா. இவர் 2011-ம் ஆண்டில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புதிதாக சேர்க்கப்பட்டிருந்த கொச்சி டஸ்கர் அணியில் இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 10 டி 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். சிராக் சூரி, டெல்லியை பூர்வீகமாக கொண்டவர். இவர் 2017-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சேர்க்கப்பட்ட குஜராத் லயன்ஸ் அணியில் அங்கம் வகித்தார். விருத்தியா அரவிந்த்தின் பூர்வீகம் சென்னை. அமீரக அணியின் விக்கெட் கீப்பராக இருக்கிறார். 20 வயதாகும் இவர் 2019-ம் ஆண்டு முதல் அமீரக அணியில் விளையாடி வருகிறார். இதுவரை 26 ஒருநாள் போட்டிகள், 25 டி 20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். கார்த்தி மெய்யப்பனின் பூர்வீகமும் சென்னைதான். 2019-ம் ஆண்டு முதல் அமீரக அணியில் இடம் பிடித்து ஆடி வருகிறார். இதுவரை 8 ஒரு நாள் போட்டி, 14 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.


Next Story