திரும்பிப் பார்க்க வைத்த தீபாவளி திரைப்படங்கள்


திரும்பிப் பார்க்க வைத்த தீபாவளி திரைப்படங்கள்
x
தினத்தந்தி 24 Oct 2022 6:56 AM GMT (Updated: 24 Oct 2022 7:16 AM GMT)

தீபாவளி பண்டிகையில் புத்தாடையும், பட்டாசும், இனிப்பு பலகாரங்களும் எவ்வளவு சிறப்புக்குரியதோ, அதே போல தீபாவளியில் வெளியாகும் படங்களும் அவ்வளவு சிறப்புக்குரியது, தவிர்க்க முடியாதது. தீபாவளியில் பல படங்கள் வெளியாகும். ஆனால் அவற்றில் ஒன்றிரண்டுதான் நம்மை வியக்க வைக்கும், விரும்ப வைக்கும், இது ஒரு வித்தியாசமான படம் என்று பேச வைக்கும். அப்படி தீபாவளி அன்று வெளியாகி நம்மை கவர்ந்த, திரும்பிப் பார்க்க வைத்த சில பழைய படங்களைப் பற்றி பார்க்கலாம்.


ஹரிதாஸ் (1944)


மிழ்நாட்டின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரும், அவருக்கு ஜோடியாக வி.சி.வசந்தகோகிலமும் நடித்திருந்த படம் இது. தாசியின் மீது மோகம் கொண்டு தாய்-தந்தை, மனைவியை உதாசீனப்படுத்தி, செல்வங்களை இழந்து, கால்களை இழந்து துன்பப்படும் ஒருவன், மனம் திருந்தி கிருஷ்ண பக்தனாகும் கதை. 1944-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இந்த திரைப்படம், சென்னை பிராட்வே திரையரங்கில் 110 வாரங்கள் ஓடி, மூன்று தீபாவளியைக் கொண்டாடியது. இப்படத்தில் வரும் 'மன்மத லீலையை வென்றார் உண்டோ..' என்ற பாடல் காலத்தை வென்று நிற்கிறது.

இந்தக் கதையை என்.டி.ராமாராவ் நடிப்பில், 'பாண்டுரங்க மஹாத்யம்' என்ற பெயரில் தெலுங்கில் தயாரித்தார்கள். அதை 1957-ம் ஆண்டு தமிழில் 'அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்து திரையிட்டனர். அதுவும் இங்கே வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பராசக்தி (1952)


ஏவி.எம். நிறுவனம், நேஷனல் பிக்சர்ஸ் பெருமாளுடன் இணைந்து தயாரித்த படம் 'பராசக்தி.' ஆனாலும் தயாரிப்புக்கான முழு பொறுப்பையும் ஏவி.எம். நிறுவனம் ஏற்று செய்திருந்தது. சிவாஜிகணேசனை அறிமுகப்படுத்தி, கலைஞர் கருணாநிதியின் வீரியம் மிக்க வசனத்தில் வெளியான திரைப்படம் இது. படம் வெளியாகி 70 ஆண்டுகள் நிறைவடைந்திருந்தாலும், அதன் வசனம் இன்னும் பேசப்படும் ஒன்றாக இருக்கிறது. பி.பாலசுந்தரத்தின் 'பராசக்தி' கதையை, ஏ.எஸ்.ஏ.சாமி திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதாக இருந்தது. ஆனால் பின்னர் கலைஞர் மு.கருணாநிதி வசனத்தில், கிருஷ்ணன்- பஞ்சு இயக்கினார்கள். தீபாவளி அன்று வெளியான இந்த பராசக்தி திரைப்படம், புரட்சிகரமான வசனத்திற்காகவே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

ரத்தக்கண்ணீர் (1954)


நடிப்பில் தனியொரு பாணியை உருவாக்கி, நாடக உலகிலும், திரையுலகிலும் தன்னை நிலைப்படுத்திக்கொண்டவர், நடிகவேள் எம்.ஆர்.ராதா. நாடகத்தில் வெற்றிக்கொடி நாட்டிய அவரை, புகழின் உச்சிக்கு கொண்டுசென்ற நாடகம், 'ரத்தக்கண்ணீர்.' 1949-ம் ஆண்டு திருச்சியில் அரங்கேறிய இந்த நாடகத்தின் மகத்தான வெற்றியால், அதை படமாக்க பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டனர். ஆனால் அந்த வாய்ப்பு, பி.ஏ.பெருமாள் முதலியாருக்கு கிடைத்தது. நேஷனல் பிக்சர்ஸ் தயாரிப்பில் 1954-ம் ஆண்டு இந்த படம் திரையிடப்பட்டது. கதை, வசனம் திருவாரூர் கே.தங்கராசு. இயக்கம் கிருஷ்ணன்- பஞ்சு.

படத்தில் எம்.ஆர்.ராதாவின் நடிப்பு இன்றளவும் பேசப்படுகிறது. மேல்நாட்டின் மீது மோகம் கொண்ட ஒருவன், தாசி ஒருத்தியின் பின் சென்று, அவளால் சொத்துகளை இழந்து, தொழுநோயாளியாக மாறிப்போகிறான். கண் பார்வையும் பறிபோகிறது. தன் நண்பனிடம் தொழுநோய் பாதித்த தன் சிலையை ஊருக்கு மத்தியில் வைத்து, அதை அனைவரும் ஒரு பாடமாக பார்க்கும்படி வேண்டுகோள் வைத்து இறக்கிறான்.

தொழுநோயால் பாதிக்கப்பட்டு துன்பப்படும் நிலையிலும் மோகன் என்ற கதாபாத்திரம், நாட்டுநடப்புகளைப் பற்றி செய்யும் நய்யாண்டி படத்தின் தனிச்சிறப்பு. அது இன்றைய ரசிகர்களாலும் ரசிக்கப்படும் காட்சிகளாகும்.

மன்னாதி மன்னன் (1960)


சங்க இலக்கியத்தில் கண்ட ஆதிமந்தி- ஆட்டனத்தியின் காதல் கதையின் சாயலில் உருவாக்கப்பட்ட படம் இது. சேரநாட்டு வீரன் மணிவண்ணன் ஆடல் கலையிலும் வல்லவன். அவனும் ஆடலரசி சித்ராதேவியும் காதலர்கள். சோழநாட்டு இளவரசி கற்பகவல்லிக்கு மணிவண்ணன் மீது காதல். காதலனின் நலனுக்காக சித்ராதேவி செய்யும் தியாகமே படத்தின் கதை.

மிகப்பெரிய வெற்றிபெற்ற இந்தப் படத்தை, நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில், எம்.நடேசன் இயக்கியிருந்தார். மணிவண்ணனாக எம்.ஜி.ஆரும், சித்ராவாக பத்மினியும், கற்பகவல்லியாக அஞ்சலிதேவியும் நடித்திருந்தனர். கண்ணதாசன் எழுதிய வசனம் படத்திற்கு பலம் சேர்த்தது.

தண்ணீர் தண்ணீர் (1981)


வாழ்வின் அடிப்படை ஆதாரங்களில் ஒன்றான தண்ணீரின் அவசியத்தை ஆணித்தரமாக பதிவு செய்த படம் இது. அத்திப்பட்டு, வறட்சியான ஒரு கிராமம். அங்கிருந்து 10 கல் தூரத்தில் தேனாற்றில் இருந்து கொட்டும் அருவி, அதற்கு மேல் பாய வழியின்றி தேங்கி நிற்கும் இடமே அத்திப்பட்டு கிராமத்தின் நீராதாரம். அந்த ஊருக்கு புதியதாக வரும் வெள்ளைச்சாமி, தண்ணீர் வண்டியில் தேனாற்றில் இருந்து நீர் கொண்டு வந்து ஊர் மக்களின் துயர் போக்குகிறான்.

ஆனால் அவன் ஒரு தலைமறைவு குற்றவாளி. தேனாற்றில் இருந்து கால்வாய் வெட்ட, வெள்ளைச்சாமியும் ஊர்மக்களும் முன்வருகிறார்கள். இந்த நிலையில் செவ்வந்தியின் கணவன், அந்த ஊருக்கு வருகிறான். அவன் ஒரு போலீஸ். வெள்ளைச்சாமியைப் பற்றி அறிந்த அவன், போலீஸ் படையுடன் வந்து அவனை கைது செய்ய நினைக்கும்போது, ஊர்மக்கள் தடுக்கிறார்கள்.

அப்போது போலீஸ் தாக்குதலில் வெள்ளைச்சாமி இறக்கிறான். ஊருக்கு கால்வாய் வெட்ட அனுமதியில்லை என்று அதிகாரிகளும் தடுக்கின்றனர். தண்ணீருக்காக போராடியே கண்ணீர் வற்றிப்போன மக்களைப் பற்றி படம் பேசுகிறது. செவ்வந்தியாக சரிதா நடித்திருந்தார். கே.பாலசந்தர் இயக்கிய இந்தப் படம், 100 நாட்கள் ஓடி பிலிம்பேர் விருது மற்றும் தேசிய விருதுகளை வென்றது.

கிழக்குச் சீமையிலே (1993)


இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில், விஜயகுமாரும், ராதிகாவும் அண்ணன்-தங்கையாகவே வாழ்ந்திருந்தனா். படம் முழுவதும் கிராமிய மணம் வீசியது. திருமணமான ஒரு பெண், தன்னுடைய அண்ணனுக்கும், கணவருக்கும் இடையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் தவிப்பை ராதிகா மிக அருமையாக வெளிப்படுத்தியிருந்தார்.

தங்கைக்காக அனைத்தையும் விட்டுக்கொடுக்கும் பாசம், தங்கை கணவனிடம் தன்மானத்தை இழக்க விரும்பாத வீரம் என்று விஜயகுமார், கிராமிய ஆண் மகனை கண் முன் நிறுத்தியிருந்தார். தவறுதலாக புரிந்துகொள்ளப்படும் விஷயம், முன்கோபம் கொண்ட ஒருவனால் மிகப்பெரிய பிரச்சினையாகி, குடும்பம் இரண்டு பட்டு நிற்கிறது. அந்த முன்கோபி கதாபாத்திரத்தில் நெப்போலியன் கெத்து காட்டியிருந்தார்.

தமிழ் சினிமா தொடங்கிய காலம் தொட்டு, அண்ணன்- தங்கை பாசத்திற்கு, 'பாசமலர்' திரைப்படத்திற்குப் பின் 'கிழக்குசீமையிலே' மட்டும்தான் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறது.


Next Story