உலகின் மிக விலையுயர்ந்த பொருள்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வுக் குழுவால் உருவாக்கப்பட்ட எண்டோஹெட்ரல் புல்லரீன்ஸ் பொருளின் ஒரு கிராமின் விலை 723 கோடி ரூபாய்!
உலகின் மிக விலையுயர்ந்த பொருள் எது என நினைக்கிறீர்கள்? தங்கம், வைரம், பிளாட்டினம்... இதையெல்லாம் தோற்கடிக்கும் ஒரு பொருள் விலை போயிருக்கிறது. அதன் பெயர் எண்டோஹெட்ரல் புல்லரீன்ஸ் (Endohedral Fullerenes). ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வுக் குழுவால் உருவாக்கப்பட்ட இந்தப் பொருள், ஒரு கிராம் 100 மில்லியன் யூரோக்க'ளுக்கு விற்கப்பட்டிருக்கிறது. அதாவது, ஒரு கிராமின் விலை 723 கோடி ரூபாய்!
அணுத்துகள் ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்படும் ஒருவகை மூலக்கூறுதான் இந்த எண்டோஹெட்ரல் புல்லரீன்ஸ். 60 கார்பன் அணுக்கள் ஒன்றிணைந்து ஒரு பந்து போலாகி, அதற்குள் ஒரு நைட்ரஜன் அணுவை சிறை பிடித்திருக்கும் அபூர்வ அமைப்பு இது. ஆக்ஸ்போர்டு ஆய்வுக்குழுவில் உள்ள நுண்பொருள் விஞ்ஞானியான டாக்டர் கிரியாகோஸ், 2002-ம் ஆண்டில் இருந்து முயன்று இதை உருவாக்கியிருக்கிறார்.
''உலகில் பலதரப்பட்ட கடிகாரங்கள் இருந்தாலும் அணுக்களால் உயிரூட்டப்படும் அணுக்கடிகாரம்தான் துல்லியமானது. இப்போதைக்கு ஒரு அணுக்கடிகாரம் என்பது ஒரு அறையையே அடைத்துக்கொள்ளும் அளவுக்குப் பெரியது. இந்தப் பொருளைப் பயன்படுத்தி அதை மிகச் சிறியதாய் உருவாக்க முடியும். உங்கள் மொபைல் போனுக்கு உள்ளேயே ஒரு அணுக்கடிகாரம் இருக்கும் என்றால் நினைத்துப் பாருங்களேன்!'' என்கிறார் அவர்.
அதே போல 'செயற்கைக்கோளுடன் தொடர்புகொள்ளும் தொழில்நுட்பத்திலும் இந்தப் பொருள் பெரும் புரட்சி செய்யக் கூடியது' என்கிறார்கள்.
''இன்றிருக்கும் நிலைப்படி ஜி.பி.எஸ் வசதி கொண்ட செல்போனை செயற்கைக்கோள் மூலமாக பூமியில் எங்கிருந்தாலும் கண்டு பிடிக்கலாம். ஆனால், அது நான்கைந்து அடி தூரம் முன்னே பின்னேதான் இருக்கும். ஆனால், இந்தப் பொருளைப் பயன்படுத்தினால் ஜி.பி.எஸ் துல்லியத்தை 1 மி.மீ அளவுக்கு அதிகரிக்கலாம். சொல்லப் போனால் டிரைவர் இல்லாத கார்களை அதிவேகத்தில் ஜி.பி.எஸ் மூலமாகவே இயக்கலாம்!'' என்கிறார் ஆக்ஸ்போர்டு தொழில்நுட்பக் குழுவின் இயக்குநர் லுசியஸ் கேரி.






