குழந்தைகள் நலனில் அக்கறை காட்டும் பெண்மணி


குழந்தைகள் நலனில் அக்கறை காட்டும் பெண்மணி
x

இளம் வயதிலேயே உடல் பருமனால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான பிரத்யேக உடற்பயிற்சி முறைகளையும் எளிமையாக வடிவமைத்திருக்கிறார், திவ்யா ஜெயகுமார்.

உடற்பயிற்சி மீதான ஆர்வமும், ஈடுபாடும் இன்று இளைஞர்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கிறது. ஆனால், உடல் ஆரோக்கியம் மீதான தூண்டுதலை குழந்தைகள் மத்தியில் உருவாக்கி வருகிறார், திவ்யா ஜெயகுமார். சென்னையில் பிசியோ தெரபி படித்து முடித்தவர், இப்போது கோவையில் வசித்து வருகிறார்.

பெண்கள் மற்றும் வயதானவர்களுக்காக எளிமையான உடற்பயிற்சிகளை வடிவமைத்து, கற்றுக் கொடுத்து வருபவர் சமீபகாலமாக உடல் பருமனான குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முயற்சிக்கிறார். இதற்காக இளம் வயதிலேயே உடல் பருமனால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான பிரத்யேக உடற்பயிற்சி முறைகளையும் எளிமையாக வடிவமைத்திருக்கிறார். அதன் மூலம் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், பள்ளி வகுப்புகளில் நிகழும் ஏற்ற தாழ்வுகளையும் களைகிறார். இதுபற்றி திவ்யா நம்முடன் பகிர்ந்து கொண்டவை...

* சாதாரண உடல் பருமன், குழந்தைகளை எப்படியெல்லாம் பாதிக்கும்?

இயல்பான குழந்தைகளை விட, இவர்கள் மிக எளிதாகவே சோர்ந்து விடுவார்கள். குறிப்பாக, அன்றாட வேலைகளை செய்வதே இவர்களுக்கு பெரிய சவாலாக இருக்கும். உடல் பருமன் காரணத்தால், நிறைய குழந்தைகள் கவன சிதைவிற்கு உள்ளாவதாக நிறைய ஆய்வுகள் விளக்குகின்றன. பலர் இளம் வயதிலேயே நீரிழிவு நோய் பாதிப்பிற்கும் உள்ளாகிறார்கள். அதனால்தான் 'கிட்ஸ் ஒபிசிட்டி மேனேஜ்மெண்ட்' பயிற்சிகளை முன்னெடுத்திருக்கிறேன்.

* அது என்ன 'கிட்ஸ் ஒபிசிட்டி மேனேஜ்மெண்ட்'?

'ஒபிசிட்டி' எனப்படும் உடல் பருமன் பிரச்சினைகள், இப்போது சிறு குழந்தைகள் வரை வந்துவிட்டது. ஒரு வகுப்பில், 50 குழந்தைகள் படிக்கிறார்கள் என்றால், அதில் 5 குழந்தைகள் உடல் பருமனாக இருப்பது சகஜமாகிவிட்டது. இவர்களால் மற்ற குழந்தைகளைப் போல வேகமாக நடக்க முடியாது. மாடிப் படிகளில் ஏறி, இறங்க முடியாது. உடற்கல்வி வகுப்புகளில், இயல்பான குழந்தைகளைப் போல துள்ளிக் குதித்து விளையாட முடியாது. இத்தகைய காரணங்களால், அவர்கள் இயல்பான குழந்தைகளிடமிருந்து வேறுபடுகிறார்கள். கூடவே பருமனான குழந்தைகள் அணியக்கூடிய பெரிய சைஸ் உடை நாகரிகமும், அவர்களை மற்ற குழந்தைகளிடம் இருந்து வேறு படுத்திக் காட்டும். இதனால் அவர்கள், தனிமை நிறைந்த தனி உலகிற்குள் சிக்கிக்கொள்கிறார்கள். இது அவர்களை உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கும். இதிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சிதான், இந்த 'கிட்ஸ் ஒபிசிட்டி மேனேஜ்மெண்ட்' பயிற்சி.

* சரி, இதற்கு நீங்கள் எப்படி தீர்வு காண்கிறீர்கள்?

நான் பிசியோதெரபிஸ்ட் என்பதால், குழந்தைகள் செய்யக்கூடிய எளிமையான உடல் அசைவு பயிற்சிகளை உருவாக்கி இருக்கிறேன். இது அவர்களை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இயங்க வைக்கிறது.

* சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு உடற்பயிற்சி அவசியமா?

இளம் வயதிலேயே நிறைய குழந்தைகளுக்கு கூன் விழுந்ததுபோல முதுகு வளைந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். அதை தவிர்க்கவும், குழந்தைகள் நேராக நடக்கவும், நிமிர்ந்து உட்கார பழகவும், தசைப்பிடிப்பு வராமல் ஓடவும்... இதுபோன்ற சிறுசிறு உடற்பயிற்சிகள், சிறுவயதில் இருந்தே அவசியம். இது உடலை மட்டுமல்ல, மனதையும் வலுவாக்கும். மூளை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி, நினைவாற்றலை மேம்படுத்தும். எல்லா குழந்தைகளுடனும் பழகும் மனப்பக்குவத்தை உருவாக்கும். கணிதத் திறனை வளர்க்கும். அவர்களை எப்போதும் உற்சாகமாக வைத்துக் கொள்ளும். விளையாட்டு துறைகளில் சாதிக்கும் குழந்தைகள் கூட இந்த பயிற்சிகள் வாயிலாக உடலை வளைத்து நெளித்து வலுப்படுத்துகிறார்கள். அவர் களது உடலை, விளையாட்டு பயிற்சி களுக்காக பழக்கப்படுத்துகிறார்கள். அதனால்தான் இத்தகைய பயிற்சிகளை, எல்லா குழந்தைகளுக்கும் சென்றடையும் வகையில் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் பிட் வித் திவ்யா வாயிலாக பகிர்ந்து வருகிறேன்.

* இத்தகைய முயற்சிகளுக்கு பெற்றோர் உறுதுணையாக இருக்கிறார்களா?

இந்த விஷயத்தில் குழந்தைகளுக்கு பெற்றோர்தான், முன்மாதிரியாக இருக்க வேண்டும். குறிப்பாக அம்மாக்களின் வழிகாட்டுதல்களும், உடற்பயிற்சி முன்னெடுப்புகளும் அவசியம். ஏனெனில் பெற்றோர்களை பார்த்துதான், குழந்தைகள் பேச, சிரிக்க, விளையாட பழகுகிறார்கள். அந்தவகையில், குழந்தைகளுக்கு பெற்றோர்கள்தான் உடற்பயிற்சிகளையும் கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும்.

* அப்படியென்றால், பெற்றோர்களுக்கும் உடற்பயிற்சிகளை வடிவமைத்திருக்கிறீர்களா?

ஆம்...! குடும்ப பெண்கள் குறிப்பாக அம்மாக்களுக்காக புதுமையான எளிமையான உடற்பயிற்சிகளை வடிவமைத்திருக்கிறேன். இது குடும்பத் தலைவிகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அவர்களை குழந்தைகளுக்கான ரோல் மாடலாக்கி இளம் வயதினரின் உடல் நலனிலும் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும்.

* உங்களுடைய தனித்துவம் என்ன?

எந்தவிதமான உடற்பயிற்சி உபகரணங்களும் இன்றி, வீட்டில் இருக்கும் பொருட் களையே உடற்பயிற்சி கருவிகளாக மாற்றுவதுதான் என்னுடைய ஸ்டைல். என்னை பொருத்தமட்டில், மனித உடல்தான் மிகப்பெரிய உடற்பயிற்சி கூடம். உடல் பாகங்கள்தான் உடற்பயிற்சி கருவிகள். அதை எப்படி அசைக்க வேண்டும், கையாள வேண்டும், உடலை எப்படி ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும்.. என்பது போன்ற தகவல்களைத்தான், ஒரு பிசியோதெரபிஸ்டாக நான் கற்றுக்கொடுக்கிறேன்.

நம்முடைய உடல் இயக்கம், ஒருசில நோய்களுக்கு சிறந்த தீர்வாகிறது. குறிப்பாக ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண் களுக்கு, எளிமையான உடற்பயிற்சிகளே சிறந்த மருந்து. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, நம் முன்னோர்களின் பழக்க வழக்கங்களை எளிமையான உடற்பயிற்சிகளாக மாற்றி, நவீன கால நோய்களுக்கு தீர்வு காண முடியுமா..? என முயன்று வருகிறேன்.

முறம், பருப்பு மத்து, தயிர் கடையும் மத்து போன்றவற்றை பயன்படுத்தும் விதத்தில் நிறைய உடல் அசைவு பயிற்சிகளை வடிவமைத்திருக்கிறேன். இது குடும்ப தலைவிகளுக்கு நல்ல உடற்பயிற்சியாகவும் மாறும். அதேபோல, நாம் சிறுவயதில் விளையாடி மகிழ்ந்த ஊஞ்சல் துணியில், யோகாசனங்களை இணைத்து தொட்டில் யோகா என்பதையும் முயன்று வருகிறோம். இது ஏரோபிக்ஸ் மாதிரியில் உடலை நன்கு வளைத்து நெளிப்பதால், பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது.

* என்ன காரணத்தால், குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் உடல் பருமன் பாதிப்புகள் உண்டாகின்றன?

உணவு முறை, வாழ்க்கை முறை மாற்றங்கள் பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. அதேசமயம் கொரோனாவிற்கு முன்புவரை, இந்த பாதிப்புகள் குறைவாகத்தான் இருந்தன. ஆனால் கொரோனா பொதுமுடக்க காலங்களில், செல்போன் உலகிற்குள் சிக்கிக்கொண்டவர்களால் இன்றுவரை அதிலிருந்து வெளிவர இயலவில்லை. மக்களின் இயல்பான வெளியுலக செயல்பாடுகள் குறைந்துவிட்டன. அவர்கள், ஒரே இடத்தில் படிக்கவும், வேலை செய்யவும், வீட்டிற்குள்ளேயே விளையாடவும் கற்றுக்கொண்டதால், உடல் பருமன் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள்.

* நீங்கள் கற்பித்து கொடுப்பது மற்ற உடற்பயிற்சி போலவே இருக்குமா?

நிச்சயமாக இல்லை. வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே, உடலையும், உடல் பாகங்களையும் அசைக்கும் வகையிலான எளிய பயிற்சிகளாக இருக்கும். உட்கார்ந்து நிமிர்வது, நாற்காலி மீது ஏறி இறங்குவது, படிகளில் ஏறுவது... இப்படி அன்றாட வாழ்க்கையின் இயல்பான வேலைகளைத்தான், இதற்கு தீர்வாக மாற்றி இருக்கிறேன்.

1 More update

Next Story