செல்லப்பிராணிகளுக்கு பிடித்தமான இளைஞர்..!


செல்லப்பிராணிகளுக்கு பிடித்தமான இளைஞர்..!
x

தான் வளர்க்கும் செல்லப்பிராணிகளை, அருகில் இருக்கும் பள்ளிகளுக்கு கொண்டு சென்று, அங்கு பயிலும் மாணவ-மாணவிகளிடம் அறிமுகப்படுத்துகிறார் விக்னேஷ்.

நிறைய இளைஞர்கள் செல்லப்பிராணிகளை வளர்க்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு மத்தியில் கோவை பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் மாறுபட்டு தெரிகிறார். ஏனெனில் இவர் மேற்கொண்டு வரும் முயற்சிகள் ஒவ்வொன்றும் தனித்துவமாக உள்ளது.

சிறுவயதில் இருந்தே செல்லப்பிராணிகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டிவரும் விக்னேஷ், அவருடைய வீட்டில் ஏராளமான செல்லப்பிராணிகளை வளர்க்கிறார். அதோடு நின்றுவிடாமல், தான் வளர்க்கும் செல்லப்பிராணிகளை, அருகில் இருக்கும் பள்ளிகளுக்கு கொண்டு சென்று, அங்கு பயிலும் மாணவ-மாணவிகளிடம் அறிமுகப்படுத்துகிறார். கூடவே, அந்த உயிரினங்களின் வகைப்பாடு, அதன் சிறப்பு, அதன் உணவு முறைகள், வாழ்நாள் காலம், பராமரிப்பு முறைகள், அதன் சுற்றுச் சூழல் நன்மைகள்... இப்படி பல விஷயங்களை கற்றுக்கொடுக்கும், நடமாடும் உயிரியல் பூங்காவாக திகழ்கிறார். இவரிடம் சிறுநேர்காணல்...

* உங்களைப் பற்றி கூறுங்கள்?

கோவைதான் என்னுடைய பூர்வீகம். தந்தையின், தேங்காய் வியாபாரத்தில் தற்போது ஈடுபட்டிருக்கிறேன்.

* செல்லப்பிராணிகள் வளர்ப்பில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

எல்லோரையும் போலதான், எனக்கும் சிறுவயதிலேயே செல்லப்பிராணிகள் மீது ஈர்ப்பு உண்டானது. நாய், பூனை, லவ் பேர்ட்ஸ், கிளி... இப்படி நிறைய வளர்த்தேன். அந்த ஆசை, என்னோடு சேர்ந்து வளரவே, நான் வளர்க்கும் செல்லப்பிராணிகள் பட்டியலும் வளர்ந்தது. சொந்த சேமிப்பில், கொஞ்சம் கொஞ்சமாக உயிரினங்களை வாங்கி பராமரித்தேன்.

* இப்போது என்னென்ன செல்லப்பிராணிகளை வளர்க்கிறீர்கள்?

நாய், பூனை, இகுவானா, சுகர் கிளைடர்ஸ், மீன்... இவைகளுடன் எல்லா விதமான பறவைகளும் வளர்க்கிறேன். சன் கான்யூர், பைனாப்பிள் கான்யூர், லோரிகீட்ஸ், பாரகீட்ஸ்... இப்படியாக, நிறைய கான்யூர் வகை பறவைகள் இருக்கின்றன. இதோடு மனிதர்களோடு பேசி பழகும் காக்கெட்டோ, ஆப்பிரிக்கன் கிரே பாரட், மக்காவ் வகை பறவைகளும் என்னிடம் இருக்கிறது. இவை அனைத்தையும், கூண்டுகளில் அடைத்து வளர்க்காமல், சுதந்திரமாக வளர்க்கிறேன்.

* செல்லப்பிராணிகள் எக்ஸ்பெர்ட்டாக மாறியது எப்போது?

நான் வளர்த்த பறவைகளில், சிம்பா என்ற மக்காவ் பறவை எனக்கு, மிகவும் 'பேவரைட்'. அதை, கூண்டில் அடைக்காமல் என் நெருங்கிய நண்பனை போன்று சுதந்திரமாக வளர்த்தேன். சிம்பாவை என் தோளில் அமர்த்தியபடி பைக் பயணம் மேற்கொள்வது, கடைகளுக்கு ஷாப்பிங் செல்வது... இப்படியாக நிறைய சுவாரசியங்கள் நடந்தன. அதை எல்லாம் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரத் தொடங்கியதும், நானும் சிம்பாவும் பிரபலமாகத் தொடங்கினோம். நிறைய பேர் செல்லப்பிராணிகள் தொடர்பான தகவல்களையும், அதை பராமரிப்பது சம்பந்தமான சந்தேகங்களையும் என்னிடம் கேட்க ஆரம்பித்தனர். இப்படிதான், செல்லப்பிராணிகள் எக்ஸ்பெர்ட்டாக மாறினேன்.

* பள்ளிக்குழந்தைகளுக்கு, உயிரியல் பாடம் நடத்த தொடங்கியது எப்போது?

என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், செல்லப்பிராணிகள் பற்றிய நிறைய வீடியோக்களை பதிவேற்றி இருக்கிறேன். அதில் செல்லப்பிராணி உயிரினங்கள் தொடர்பான பல தகவல்கள் அடங்கி யிருக்கும். இதைப்பார்த்து, அதனால் ஈர்க்கப்பட்ட திருப்பூர் பள்ளி ஒன்று, குழந்தைகள் தினத்தன்று செல்லப்பிராணிகளுடன் கலந்து கொண்டு, குழந்தைகளை உற்சாகப்படுத்த முடியுமா..? என்று கேட்டனர். நானும் அவர்களது அழைப்பை ஏற்றுக்கொண்டு, அந்த பள்ளிக்கு என்னுடைய செல்லப்பிராணி விலங்குகளுடன் சென்றேன்.

அங்கிருந்த குழந்தைகளுக்கு, எனக்கு தெரிந்த உயிரியல் தகவல்களை செல்லப்பிராணிகள் வாயிலாக விளக்கி கூறினேன். அதுவரை பாடப்புத்தகத்திலும், உயிரியல் பூங்காவிலும் பார்த்து ரசித்த உயிரினங்களை குழந்தைகள் அன்று, கண்கூடாக மிக அருகில் பார்த்து ரசித்தனர். சில குழந்தைகள், பறவைகளுடன் பேசி மகிழ்ந்தனர். அது ஒரு அற்புதமான நினைவுகளாக, எல்லோர் மனதிலும் பதிவானது.

* செல்லப்பிராணிகளை, குறிப்பாக விலை உயர்ந்த பறவைகளை கூண்டில் பாதுகாப்பாக வளர்க்காமல், நீங்கள் சுதந்திரமாக வளர்ப்பது எப்படி?

எனக்கு பறவைகளை, பழக்கப்படுத்துவது ரொம்பவே பிடிக்கும். அதாவது இப்படி பழக்கப்படுத்தப்பட்ட பறவைகளை 'டேம்ட்' (Tamed) பறவைகள் என்பார்கள். பறவைகளை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பழக்கப்படுத்த முடியும். நம் கைகளில் வந்து அமரச் சொல்லி கை மூலம் சைகை செய்வது, நம் கைகளில் உணவு கொடுப்பது, கூண்டுகளில் அடைக்காமல், வீட்டில் சுதந்திரமாக உலாவ விடுவது, மனிதர்களோடு நெருங்கிப் பழகச் செய்வது, பேச்சு பயிற்சி கொடுப்பது... இப்படியாக நிறைய பயிற்சிகள் உண்டு. இதுதான், அந்த பறவைக்கும், நமக்குமான பந்தம். அதை உருவாக்கி விட்டால், அவைகளை அடைத்து வைக்க வேண்டிய அவசியமில்லை. நாம் அவைகளை தேடுவதுபோல, அவைகளும் நம்மைத் தேட ஆரம்பித்துவிடும்.

அந்த பந்தம்தான், பறவைகளை சுதந்திரமாக வளர்க்க உறுதுணையாக இருக்கிறது. கூண்டுகளில் அடைத்து வளர்க்கப்படும் பறவைகளை விட, இப்படி பழக்கப்படுத்தப்பட்ட 'டேம்ட்' வகை பறவைகளுக்குதான், மார்க்கெட்டில் மவுசும் அதிகம்.

* நீங்கள் இதுவரை எத்தனை பறவைகளை, பழக்கப்படுத்தி இருப்பீர்கள்?

நிறைய பழக்கப்படுத்தி இருக்கிறேன். நான் வளர்ப்பதற்காக மட்டுமல்ல, அடுத்தவர்கள் வளர்ப்பதற்காகவும் நிறைய பறவைகளை பழக்கப்படுத்தி கொடுத்திருக்கிறேன். தனிமையில் வாடும் முதியவர்கள், பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு செல்லும் குடும்பங்களில் வளரும் குழந்தைகள்... இவர்களுக்கு பேச்சு துணையாக இருப்பதே, இந்த பறவைகள்தான். இவற்றை நீங்கள் நன்றாக பழக்கப்படுத்திவிட்டால் போதும், அவை உங்களோடு பேசிக்கொண்டே இருக்கும். உங்கள் நலனில் அக்கறை செலுத்திக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்காக, நான் நிறைய பறவைகளை வளர்த்து, பழக்கப்படுத்தி கொடுத்திருக்கிறேன்.

* இப்போது முன்பைவிட, விலை உயர்ந்த பறவைகளை நிறைய மக்கள் விரும்பி வாங்குகிறார்களே, ஏன்?

முன்பிருந்தே இந்த பழக்கம் இருக்கிறது. ஆனால் கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு, நிறைய மக்கள் செல்லப்பிராணிகள் வளர்ப்பில், குறிப்பாக பேசும் திறன்கொண்ட பறவைகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டுகிறார்கள். மன அழுத்தம்தான் இதற்கான பதில்.

பெரும்பாலானவர்கள், அவர்களின் இயல்பான அலுவலக வாழ்க்கையில் இருந்து வெளி வர, மன அழுத்தத்தில் இருந்து விடுபட செல்லப்பிராணிகளை வளர்க்க ஆரம்பித்துவிட்டனர். இப்போது நிறைய அலுவலகங்களிலும், பொது போக்குவரத்துகளிலும், ஏன்...? ஓட்டல் விடுதிகளிலும் செல்லப்பிராணிகள் அனுமதிக்கப்படுவதால் அதன் மோகம் அதிகரித்துவிட்டது. எங்கு சென்றாலும் தங்களோடு தூக்கிக் கொண்டு செல்கிறார்கள்.

* பறவைகள் வாங்க நினைப்பவர்கள் என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?

கூண்டில் வளர்க்கப் போகிறீர்களா இல்லை சுதந்திரமாக வளர்க்கப் போகிறீர்களா..? என்பதை முதலிலே முடிவு செய்துவிடுங்கள். கூண்டில் வளர்க்க ஆசைப்பட்டால் லவ் பேர்ட்ஸ், ஆப்பிரிக்கன் லவ் பேர்ட்ஸ், பின்ஷ்சஸ் போன்ற பறவைகளை தேர்ந்தெடுக்கலாம். காக்கெட்டோ, மக்காவ், ஆப்பிரிக்கன் கிரே பாராட், கான்யூர் வகை பறவைகளை சுதந்திரமாகவே வளர்க்க முடியும். இதில் முதல் மூன்றும், நன்றாக பேசும். பறவைகளை வாங்கும்போது, அவை சுறுசுறுப்பாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் எக்ஸாட்டிக் வகைபறவைகளை வளர்க்கும்போது, அரசு இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

அதிக விலை கொடுத்து பறவை வாங்கும்போது, ஆண்-பெண் இனத்தை என்பதை உறுதிப்படுத்தும் டி.என்.ஏ. தேர்வு அவசியம். அதையும் கவனித்து கொள்ளுங்கள். ஏனெனில் ஒருசில பறவை இனங்களை, டி.என்.ஏ. பரிசோதனையின் வாயிலாகவே அதன் பாலினத்தை அறியமுடியும் என்பதால், ஜோடியாக வாங்குபவர்கள் கவனமாக வாங்குங்கள்.

* உங்களுடைய ஆசை என்ன?

எந்த செல்லப்பிராணியையும், அடைத்து வைத்து வளர்க்கக்கூடாது. அதையும், நம் குடும்பத்தில் ஒருவராக நினைத்து, அதற்கு என தனி சுதந்திரம் கொடுத்து ரொம்ப இயல்பாக வளர்க்க வேண்டும். அதேசமயம், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு, உயிரியல் சம்பந்தமான கல்வியறிவை, என்னுடைய செல்லப் பிராணிகள் மூலமாக கற்றுக்கொடுக்க ஆசைப்படுகிறேன். நடமாடும் உயிரியல் பூங்காவை போல செயல்பட்டு பல பள்ளி குழந்தைகளை உற்சாகமூட்ட ஆர்வமாக இருக்கிறேன். இதற்கான வாய்ப்புகளும், அவ்வப்போது கிடைக்கின்றன. இனியும் கிடைக்கும் என நம்புகிறேன்.

1 More update

Next Story