சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை


சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை
x

குமரி முதல் இமயம் வரை, ஒற்றை சொல் 130 கோடி மக்களையும் இணைக்கும் என்றால் அந்த வார்த்தை ‘இந்தியா.’ சுதந்திரம் நமது பிறப்புரிமை என்பதை குடிமக்கள் உணர்ந்திருந்தனர்.

'ஆடுவோமே பள்ளு பாடுவோமே' என்று இந்திய சுதந்திரத்தை கனவு கண்டு பாட்டுக்கொரு புலவன் பாடிய பாடல் வரிகள் திக்கெட்டும் பரவி 75 ஆண்டுகள் ஆகின்றன.

காலை எழுந்ததும் கடவுள் வணக்கம் போன்று எப்போது கேட்டாலும் வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என்று சொல்லித்திரிந்த கூட்டம் ஒன்று நம் நாட்டில் இருந்தது. வெறும் காலால் பூட்ஸ் கால்களை துரத்தியடித்த பெருமைக்கு உரியவர்கள் அவர்கள். அடிமையாக வாழ்ந்து மடிந்து போவதை விரும்பாத அவர்கள், தூக்குக்கயிறுகளை துச்சமாக எண்ணி முத்தமிட்டனர்.

சிறைக்கொட்டடிகளும், லத்திக் கம்பின் தாக்குதலும் அவர்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட வரம். எல்லாம் வருங்கால சந்ததியான நமக்காக...

மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ், சர்தார் வல்லபாய் படேல், பகத் சிங் என்று போராட்டத்தின் முன்வரிசையில் நின்ற பெருந்தலைவர்களின் வார்த்தைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று உயிர்த்தியாகம் செய்தவர்கள் ஏராளம்.

தீரன் சின்னமலை, மருதுசகோதரர்கள், வீரபாண்டிய கட்டப்பொம்மன், வீரமங்கை வேலுநாச்சியார், குயிலி என்று போராட்ட களத்தில் உயிர் நீத்த பெரும் வீரர்கள், அவர்களுடன் இணைந்து ஒப்புக்கு ஒப்பாக நின்று உயிர்கொடுத்த பல தலைவர்களை வரலாறு இன்று நினைவுகூருகிறது.

கத்தி இன்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று என்று பாடி, நமது சுதந்திர போராட்ட நிகழ்வு பெருமைப்படுத்தப்படுகிறது. ஆனால் கத்தி இன்றி ரத்தமின்றி கிடைத்ததல்ல இந்திய சுதந்திரம்.

இந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கம் சுமார் 200 ஆண்டுகள் நடந்ததாக சொல்லப்பட்டாலும், நம்மீதான அடிமைச்சுமை சரியாக 400 ஆண்டுகளுக்கு முன்பு, கி.பி.1600-ம் ஆண்டு தொடங்குகிறது.

அப்போது இங்கிலாந்தின் மகாராணி எலிசபெத் வழங்கிய உரிமை சாசனத்தின் அடிப்படையில் ஆங்கிலேய கிழக்கு இந்திய நிறுவனம் தொடங்கப்பட்டது. 15 ஆண்டுகள் இந்தியாவில் வியாபாரம் செய்வதற்கான அனுமதியை பெற்று லண்டன் மாநகரை சேர்ந்த வியாபாரிகள் சிலர் இந்தியாவுக்குள் நுழைந்தனர்.

இன்று பெரு நிறுவனங்களுக்கு நமது நாட்டின் பெருஞ்சொத்துகளை விற்பனை செய்வது போன்று, அன்று ஆங்கிலேயர்கள் வணிக ரீதியாகவே இந்தியாவுக்குள் நுழைந்தனர். அவர்கள் தங்கள் வியாபாரத்தை பெருக்கிய பகுதிகளில் தங்கள் லாபத்துக்காக அரசியலையும் கையில் எடுத்துக்கொண்டனர். ஆனால், இது பெரும்பாலும் வெளியே தெரியாத ஒரு அரசியல் மாற்றமாகவே இருந்தது.

ஆனால், இவர்களின் அந்தரங்க அரசியலுக்கு ஆங்காங்கே இந்திய சிறு மன்னர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நெற்கட்டான்செவல் பகுதியை ஆண்டு வந்த பூலித்தேவன் கி.பி.1751-ம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிரான முதல் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஆனால், போராட்டத்தை அடக்கி ஆளும் திறமை பெற்ற ஆங்கிலேயர்கள் அவரையும், அவருடன் இருந்த பிற போராட்டக்குழுவையும் இல்லாது செய்து போராட்ட தடயத்தை மறைத்தனர்.

கி.பி.1757-ல் தளபதி ராபர்ட் கிளைவ் ஆங்கிலேய வீரர்களுடன் இந்தியாவுக்கு வந்தார். பிளாசி என்ற இடத்தில் சிராஜ் உத்தவுலா என்ற மன்னரை வீழ்த்தினார்.

அப்போதில் இருந்து வெளிப்படையாக ஆங்கிலேயர்கள் தங்கள் அரசாட்சியை இந்தியாவில் நிறுவும் வேலையை தொடங்கினார்கள்.

அந்த காலகட்டத்தில் மொகலாய பேரரசர்களின் வழியில் வந்த மன்னர்கள் திவானி என்ற வரிவசூல் சிறப்பு உரிமை பெற்று இருந்தனர்.

கி.பி.1765-ம் ஆண்டில் ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனம் அந்த உரிமையை பறித்து தனதாக்கிக்கொண்டது. வரிவசூல் அவர்களின் கைகளுக்கு சென்ற பின்னர்தான் இந்திய அரசியல் பெரும் மாற்றத்தை கண்டது.

அப்போது நமது நாட்டில் சில மன்னர்கள் விழித்துக்கொண்டனர்.

ஐதர் அலி, திப்பு சுல்தான், அவர்களை தொடர்ந்து தீரன் சின்னமலை என்று பலரும் ஆங்கிலேயர்களை விரட்டியடிக்க முயன்றபோதெல்லாம், சாதுர்யமாக துரோகிகளை கையில் கொண்டு ஆங்கிலேயர்கள் வெற்றியை பெற்றனர்.

இதனால் ஆங்கிலேயர்களை எதிர்க்கும் துணிவு சற்று சுருங்கிப்போனது.

பொருளாதாரம் அவர்களின் கையில் கிடைத்தபோது, அதை பாதுகாக்கவும், நம்மிடம் இருந்து சுரண்டவும் அவர்களுக்கு கிடைத்த வழிகளை எல்லாம் பின்பற்றினார்கள். உலகளாவிய பெரும் நிறுவனங்கள் இந்தியாவுக்குள் நுழைந்தன. வியாபார போட்டியில் சுரண்டப்பட்டது நம் நாடு.

இந்திய வரலாற்றின் பக்கங்களில் வரி கொடுத்தே வாழ்க்கை இழப்பவர்கள் இந்திய மக்கள் என்பது நீண்ட நெடுங்காலமாக பதிவு செய்யப்பட்டு வந்து இருக்கிறது.

அப்படி எல்லோரும் துன்புறும் வகையில் ஆங்கிலேயர்கள் போட்டது உப்புக்கு வரி. காந்தியடிகள் தலைமையில் உப்பு சத்தியாக்கிரக அழைப்பு வந்தபோது நாடு முழுவதும் வீரர்கள் திரண்டனர். 1930-ம் ஆண்டு ஏப்ரல் 6 அன்று தண்டியில் பாதயாத்திரை சென்ற காந்தியடிகள் உப்பை எடுத்து, சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்கி வைத்தார். காந்தியின் போராட்டத்தை நாடு முழுவதும் அவரது வழியில் அவரது தொண்டர்கள் நிகழ்த்தினார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் சாதாரண குடிமக்கள். காந்தியடிகள் அழைக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக வீட்டையும், குடும்பத்தையும் விட்டு போராட்ட களத்தில் குதித்தவர்கள். ஏனெனில் சுதந்திரம் நமது பிறப்புரிமை என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர்.


Next Story