கோதுமை புல் வளர்ப்பும்.. உடல் எடை இழப்பும்..


கோதுமை புல் வளர்ப்பும்.. உடல் எடை இழப்பும்..
x

கோதுமை புல்லில் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. நோய்களை எதிர்த்து போராடும் ஆற்றலும், உடல் எடையைக் குறைக்கும் தன்மையும் கோதுமை புல்லுக்கு உண்டு. மேலும் செரிமானம் சீராக நடைபெறவும் உதவும்.

கோதுமை புல்லை வீட்டிலேயே எளிதாக வளர்க்க முடியும். பயறு வகைகளை முளைக்க வைப்பதுபோல கோதுமை புல்லை வளர்த்தெடுத்து விடலாம். இதற்கு அதிக பராமரிப்போ, அதிக சூரிய ஒளியோ, உரங்களோ தேவைப்படாது. இரண்டு அங்குலம் மண் நிரப்பும் அளவுக்கு தட்டை வடிவிலான பாத்திரம் இருந்தால் போதும்.

100 கிராம் கோதுமைப் புல்லில் 13 கிலோ அளவுள்ள காய்கறிகளில் இருந்து கிடைக்கும் வைட்டமின்கள், தாதுக்கள், என்சைம்கள் உள்ளன. கோதுமை புல் சாறு வயிற்றை சுத்தப்படுத்தும். சிறந்த செரிமானத்திற்கும் உதவும். கோதுமை புல்லை அரைக்கும்போதோ, பொடியாக தயார் செய்யும்போதோ சூடாகிவிடக்கூடாது. சிறிது சிறிதாக அரைத்தெடுக்க வேண்டும். கோதுமை புல் சூடாகி விட்டால் அதிலிருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகளும், ஊட்டச்சத்துக்களும் பாதிப்புக்குள்ளாகும்.

வீட்டில் கோதுமை புல் வளர்ப்பது எப்படி?

* 3-4 அங்குலம் ஆழம் கொண்ட நீள் செவ்வக வடிவ டிரே எடுத்துக்கொள்ளவும். அதன் அடிப்பகுதியில் தண்ணீர் வெளியேறுவதற்கு ஏற்ப சிறிய அளவில் வடிகால் துளைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

* ஒரு கைப்பிடி அளவு கோதுமை எடுத்து அதனை நன்றாக கழுவி, இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளவும்.

* டிரேயின் அடிப்பகுதியில் கோகோபிட் மற்றும் மண் கலந்த கலவையை நிரப்ப வேண்டும். அதில் ஊற வைத்த கோதுமையை விதைத்து மண் கலவையை மூடி விடவும். பின்பு மேற்பரப்பில் தண்ணீர் தெளிக்கவும்.

* தினமும் ஒரு வேளை தண்ணீர் தெளித்து வரவும்.

* இந்த டிரேயை வீட்டின் எந்த மூலையிலும் வைக்கலாம். அதிக சூரிய ஒளி தேவைப்படாது. இரண்டு வாரங்களுக்குள் புல் நன்றாக வளர்ந்துவிடும். அதனை அறுவடை செய்து பயன்படுத்தலாம். கோதுமை புல்லை ஜூஸாக தயாரித்து பருகுவது சிறந்தது.

கோதுமை புல் தரும் நன்மைகள்:

ஊட்டச்சத்துக்கள்:

கோதுமை புல்லில் கால்சியம், இரும்பு, மெக்னீசியம், வைட்டமின்கள் ஏ, சி, ஈ, கே மற்றும் பி காம்ப்ளக்ஸ், புரதங்கள், என்சைம்கள், 17 அமினோ அமிலங்கள் மற்றும் குளோரோபில், பைட்டோநியூட்ரியண்ட்கள் உள்ளன. இவை அனைத்தும் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை.

நச்சுகள் நீக்கம்:

கோதுமை புல்லில் உள்ள 'டீடாக்ஸ்' எனப்படும் நச்சுப் பண்புகள் குடலை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டவை. வாயு, செரிமானம் தொடர்பான பிரச்சினைகளை போக்க வல்லவை.

நோய் எதிர்ப்பு சக்தி:

கோதுமை புல்லில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நச்சுகளை அகற்றவும், ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கவும் உதவும்.

வளர்சிதை மாற்றம்:

வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் எடை அதிகரிப்புக்கு காரணமாக அமையும். கோதுமைப் புல் உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை சமநிலைப்படுத்தும். உடல் எடை இழப்புக்கு வித்திடும். ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் கோதுமை புல்சாறு அருந்துவது போதுமானது. கர்ப்பிணி பெண்கள், நாள்பட்ட நோய்களுக்கு மருந்து உட்கொள்பவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்ற பின்னரே கோதுமை புல் ஜூஸ் பருகுவது நல்லது.


Next Story