4-7-8 சுவாச பயிற்சி ஏன் அவசியம்?


4-7-8 சுவாச பயிற்சி ஏன் அவசியம்?
x

சுவாச பயிற்சிகளை தவறாமல் பின்தொடர்வது ஆரோக்கிய வாழ்வுக்கு வித்திடும். அவற்றுள் பிராணாயாமம் முதன்மையானது.

உயிர் மூச்சாய் அமைந்திருக்கும் சுவாசத்தில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் ஒட்டுமொத்த உள் உறுப்புகளின் செயல்பாடுகளும் முடங்கிப் போய்விடும். சுவாசம் சீராக, தொய்வின்றி தொடர வேண்டும். ஒரு சில சுவாச பயிற்சிகளை தவறாமல் பின்தொடர்வது ஆரோக்கிய வாழ்வுக்கு வித்திடும். அவற்றுள் பிராணாயாமம் முதன்மையானது.

இது பழங்காலம் முதலே புழக்கத்தில் இருக்கும் யோகா பயிற்சியை அடிப்படையாகக் கொண்டது. அதன் ஒரு அங்கமாக 4-7-8 என்ற சுவாச பயிற்சி அமைந்திருக்கிறது. இந்த பயிற்சி எளிமையானது. எந்த நேரத்திலும், எங்கும் செய்யலாம். உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வு அளிக்கக்கூடியது.

4-7-8 சுவாச பயிற்சி என்றால் என்ன?

நாக்கின் நுனி பகுதியை மேற்பகுதி பற்களின் உள் பகுதியில் மடித்து வைத்தபடி வாய்க்குள் காற்று எதும் இல்லாதவாறு வெளியேற்ற வேண்டும். பின்பு மூக்கு வழியாக 4 வினாடிகள் மூச்சை நன்றாக உள் இழுத்து சுவாசிக்க வேண்டும். 7 விநாடிகள் உள் இழுத்த மூச்சுக்காற்றை அடக்கி வைத்திருக்க வேண்டும். பின்னர் 8 வினாடிகள் வரை மெதுவாக மூச்சுக்காற்றை உடலை தளர்த்தியபடியே வெளியேற்ற வேண்டும்.

இந்த பயிற்சியை செய்வதற்கு சிரமப்பட வேண்டியதில்லை என்பதால் யார் வேண்டுமானலும், எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பயிற்சியை அடிக்கடி செய்வதன் மூலம் உள் உறுப்புகள் மற்றும் திசுக்களுக்கு தேவையான ஆக்சிஜன் தடையின்றி கிடைக்கும். உடலின் சம நிலையை மீட்டெடுக்கவும் இந்த பயிற்சி உதவும்.

கவனிக்கும் திறனை மேம்படுத்தும்

உடல் சோர்வை குறைப்பதற்கும் இந்த சுவாச பயிற்சி உதவும். ஒற்றைத்தலைவலி போன்ற அறிகுறிகளை களையவும் துணை புரியும். கவனிக்கும் திறனை மேம்படுத்துவதற்கும் உதவும்.

மனதை அமைதிப்படுத்தும்

இந்த பயிற்சியை செய்யும்போது அமைதியான சூழலை மனம் உணரும். தேவையற்ற எண்ணங்களில் இருந்து விலக்கி வைக்கும். சுவாசத்தின் மீது மட்டுமே கவனத்தை பதிக்க வைக்கும். அதனால் இது மனதை அமைதிப்படுத்த உதவும் பயிற்சியாக கருதப்படுகிறது.

மன அழுத்தம், பதற்றத்தை குறைக்கும்

மன அழுத்தத்தை குறைக்கும் ஆற்றல் இந்த பயிற்சிக்கு உண்டு. பதற்றத்தையும் குறைக்க உதவும். இந்த சுவாச பயிற்சியை மேற்கொள்ளும்போது உடலில் உள்ள பாராசிம்பேடிக் நரம்பு மண்டலத்தின் செயல்பாடு தூண்டப்படும். மனம் இலகுவாகும்.

தூக்கத்தை வரவழைக்கும்

தூக்கமின்மை, இரவில் திடீரென கண் விழிப்பது, பின்பு தூங்க முடியாமல் சிரமப்படுவது, அந்த சமயத்தில் தேவையற்ற சிந்தனைகள் மனதில் எழுவது போன்ற தூக்கம் தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்படுப்பவர்கள் இந்த சுவாச பயிற்சியை முயற்சிக்கலாம்.ஏனெனில் இந்த பயிற்சி உடலையும், மனதையும் தளர்வடைய செய்யும். சுவாசத்தில் மட்டுமே முழு கவனமும் பதிவதால் கவனச்சிதறலுக்கு இடமிருக்காது. ரத்த அழுத்தம், இதயத் துடிப்பை குறைய வைத்து, ஆழ்ந்த தூக்கத்தை ஊக்குவிக்கும்.

ஆரோக்கியம் காக்கும்

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இந்த சுவாச பயிற்சியை தினமும் இரண்டு முறை மேற்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கும். வேலைப்பளு அதிகரிக்கும்போது, தேர்வின் போது, தூங்குவதற்கு முன்பு, காலையில் தூங்கி எழுந்த பிறகு இந்த பயிற்சியை மேற்கொள்வது சிறப்பானது. முதல் முறையாக 4-7-8 சுவாச பயிற்சி செய்யும்போது சிலருக்கு லேசான தலைவலி அல்லது மூச்சுத் திணறல் ஏற்படலாம். அதே நிலை தொடர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெற்று வேறு சுவாச பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.


Next Story