இந்திய கண்டுபிடிப்பாளரை பாராட்டிய இங்கிலாந்து பிரதமர்


இந்திய கண்டுபிடிப்பாளரை பாராட்டிய இங்கிலாந்து பிரதமர்
x

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் பாயிண்ட்ஸ் ஆப் லைட் விருதை வென்றுள்ளார், லண்டனில் வாழும் சீக்கியரான நவ்ஜோத் ஷாவ்னி.

உலகம் முழுவதும் உள்ள குறைந்த வருவாய் பிரிவினர் பயனடையும் வகையில், குறைந்த விலையிலான சலவை இயந்திரத்தை கண்டுபிடித்து, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் பாயிண்ட்ஸ் ஆப் லைட் விருதை வென்றுள்ளார், லண்டனில் வாழும் சீக்கியரான நவ்ஜோத் ஷாவ்னி. இவர், கடந்த 2 வருடங்களாகவே இந்த புதுமை சலவை இயந்திர தயாரிப்பில் மும்முரம் காட்டியிருந்தார். அவர் தயாரித்த துணி துவைக்கும் இயந்திரத்துக்கு மின்சாரம் தேவையில்லை. கையாலே இயக்கும் வகையில் உருவாக்கியிருந்தார். கேன் வடிவில் இருக்கும் அமைப்பில், துணிகளை உள்ளிட்டு கைகளால் சுழற்ற வேண்டும். அப்படி குறிப்பிட்ட காலத்திற்கு சுழற்றும்போது சுத்தமான ஆடைகளை பெறமுடியும்.

கடந்த ஆண்டு, ஆப்பிரிக்கா கண்டத்தின் பல ஏழ்மை நாடுகளுக்கு இந்த துணி துவைக்கும் இயந்திரத்தை இலவசமாக வழங்கி இருந்தார். இவரது சேவைக்குதான், இங்கிலாந்து பிரதமரின் பாராட்டுகளும், சிறப்பு விருதும் வழங்கப்பட்டிருக்கிறது.

மின்சாரம் தேவையில்லாத இயந்திரம்

நவ்ஜோத் ஷாவ்னியின் கண்டுபிடிப்பானது, கடந்த வருடமே செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. இது குறித்த திட்ட அறிக்கையை உலக அரங்கில், 4 ஆண்டுகளுக்கு முன்பே நவ்ஜோத் சமர்ப்பித்தார். அதற்கான அங்கீகாரம் இப்போது கிடைத்திருக்கிறது.

தனக்கு விருது கிடைத்தது குறித்து அவர் கூறும்போது, ''உலகெங்கிலும் மின்சார சலவை இயந்திரம் இல்லாத ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவ, பொறியாளரான நீங்கள் உங்கள் தொழில்முறை திறனைப் பயன்படுத்தியுள்ளீர்கள். உங்களின் புதுமையான இந்த இயந்திரம் மூலம் பலரது நேரம் மிச்சமாகிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கிய பல பெண்களுக்கு உங்கள் கண்டுபிடிப்பு அதிகாரம் அளிக்கிறது. உங்கள் இயந்திரங்கள் தற்போது மனிதாபிமான உதவி மையங்களில் வசிக்கும் உக்ரேனிய குடும்பங்களுக்கு உதவுகின்றன என்பதை நான் அறிவேன். உங்கள் இரக்கம் மற்றும் மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவை எங்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது'' என்று பிரதமர் சுனக் குறிப்பிட்டு இருப்பதை சுட்டிக் காட்டினார்.

மேலும் அவர் கூறுகையில், "வேக்யூம் க்ளீனர் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றியபோது, பின்தங்கிய சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த எனது திறமைகளை பயன்படுத்த விரும்பினேன். நான் உருவாக்கியுள்ள துணி துவைக்கும் இயந்திரம் 50 சதவிகிதம் வரை தண்ணீரை சேமிக்கிறது. எனது இயந்திரத்துக்கு 'திவ்யா' என்று பெயர் வைத்துள்ளேன். உலகளவில் அகதிகள் முகாம்கள், பள்ளிகள் மற்றும் அனாதை இல்லங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு இதுவரை 300 சலவை இயந்திரங்களை இலவசமாக விநியோகித்துள்ளேன்.

பாயிண்ட்ஸ் ஆப் லைட் விருதை வெல்வதும், பிரதமரால் அங்கீகரிக்கப்படுவதும் எனக்கு கிடைத்த பாக்கியம். பெண்கள் மற்றும் குழந்தைகளின் சுமையை குறைப்பதே இந்த இயந்திரத்தைக் கண்டுபிடித்ததற்கு காரணம்.

சுத்தமான ஆடைகளை துவைப்பவர்களுக்கு உதவியாக இருப்பதை நினைத்தும், அதற்குரிய அங்கீகாரம் கிடைப்பதை நினைத்தும் பெருமைப்படுகிறேன்" என்றார்.


Next Story