205 கிலோ வெங்காயத்தின் விலை 8 ரூபாயா?


205 கிலோ வெங்காயத்தின் விலை 8 ரூபாயா?
x

கர்நாடக மாநிலத்தின் கடக் பகுதியை சேர்ந்த விவசாயிகள் துயரங்களை வெளிப்படுத்தும் விற்பனை ரசீது ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.

விவசாயிகள் பல்வேறு துயரங்களுக்கு மத்தியில் விளை பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள். வேலையாட்கள் பற்றாக்குறை, அவர்களுக்கு கூலி கொடுக்கமுடியாத நிலை, உரம் விலை உயர்வு, விளைந்த பொருட்களை அறுவடை செய்வதற்குள் விலை சரிவு என பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் தாங்கள் விளைவித்த பொருட்களை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்கிறார்கள். அங்கும் உரிய விலை கிடைக்காத நிலையில் நஷ்டத்தையும், வேதனையையும் எதிர்கொள்கிறார்கள். அப்படி விவசாயிகள் துயங்களை வெளிப்படுத்தும் விற்பனை ரசீது ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.

கர்நாடக மாநிலத்தின் கடக் பகுதியை சேர்ந்த விவசாயி தான் விளைவித்த வெங்காயத்தை பெங்களூருக்கு விற்பனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்.

205 கிலோ எடையுள்ள அந்த வெங்காயம் சுமார் 415 கிலோ மீட்டர் தூர பயணத்திற்கு பிறகு பெங்களூரு சந்தையை அடைந்திருக்கிறது. அங்கு வெங்காயத்தை விற்பனை செய்த ரசீதில், வெங்காயத்தின் மொத்த விலை ரூ.410 என்றும், போர்ட்டர் சர்வீஸ் மற்றும் சரக்கு கட்டணம் ரூ.401.64 என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது வெங்காயத்தின் விலையான 410 ரூபாயில் இருந்து சுமை கூலி, சரக்கு கட்டணம் இரண்டையும் கழித்த பிறகு 8.36 ரூபாய் மட்டுமே விவசாயியின் கைக்கு கிடைத்திருக்கிறது.

''50 கிலோ வெங்காயத்திற்கு 100 ரூபாய் விலை நிர்ணயம் என்பது அபத்தமானது. குர்கானில் ஒரு கிலோ வெங்காயமே 50 முதல் 55 ரூபாய்க்கு விற்கப்படுகிறது'' என்று ஒருவர் கருத்து பகிர்ந்துள்ளார்.

விவசாயிகளின் அவல நிலையை வெளிக்காட்டுவதாக இந்த விற்பனை ரசீது அமைந்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.


Next Story