ஆற்றில் கரைந்த உயிர்கள்... அரியலூர் ரெயில் விபத்து


ஆற்றில் கரைந்த உயிர்கள்... அரியலூர் ரெயில் விபத்து
x

எதிர்பாராத ஒன்று எதிர்பாராத நேரத்தில் நடப்பதற்கு பெயர்தான் விபத்து.

எல்லா விபத்துகளுக்கும் இரண்டு அம்சங்கள்தான் காரணமாக இருக்க முடியும். ஒன்று தொழில்நுட்ப கோளாறு; மற்றொன்று மனித தவறு. அலட்சியம், கவனக்குறைவு, தண்டனை பற்றிய அச்சமின்மை ஆகியவை மனித தவறுகளுக்கு காரணமாக அமைகின்றன. இந்த குறைகளை களைந்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவிட்டாலே பெரும்பாலான விபத்துகளை தவிர்க்க முடியும்.

சில சமயங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அசம்பாவிதங்கள் நடக்கின்றன. அந்த தொழில்நுட்பங்களை கையாளுவதும் மனிதர்கள்தான். எனவே தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடந்தது என்று கூறி பழியை எந்திரத்தின் மீது போட்டுவிட்டு மனிதன் தப்பித்துவிட முடியாது. மொத்தத்தில் பார்த்தால், கிட்டத்தட்ட எல்லா விபத்துகளுக்குமே மனிதன்தான் காரணமாக இருக்கிறான் என்பதுதான் கசப்பான உண்மை.

சமீபத்தில் குஜராத்தில் நடந்த மோர்பி தொங்கு பால விபத்து இந்தியாவையே உலுக்கி இருக்கிறது.

குஜராத்தின் கத்தியவார் தீபகற்ப பகுதியில் சுமார் 2 லட்சம் மக்கள் வசிக்கும் நகரான மோர்பி, மச்சு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தொங்கு பாலம் முக்கிய சுற்றுலாதலமாக விளங்குகிறது. கடந்த மாதம் 30-ந்தேதி மாலை 6.30 மணி அளவில் இந்த பாலம் திடீரென்று அறுந்து விழுந்ததில், அதில் நின்று கொண்டிருந்தவர்கள் ஆற்றுக்குள் விழுந்தனர். இதில் 54 குழந்தைகள் உள்பட 135 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். இருட்டிவிட்டதால், தண்ணீரில் விழுந்து தத்தளித்தவர்களையும், அறுந்த விழுந்த பாலத்தின் கம்பிகளை பிடித்து தொங்கியபடி உயிருக்கு போராடியவர்களையும் மீட்பது பெரும் சவாலாக இருந்தது. மேலும் ஆற்றில் அதிக அளவில் ஆகாய தாமரை செடிகள் படர்ந்து இருந்ததாலும், தண்ணீர் அசுத்தமாக இருந்ததாலும் உள்ளே இறங்கிச்செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. தீயணைப்பு படையினர், தேசிய, மாநில மீட்புப்படையினர், ராணுவத்தினர், கடலோர காவல் படையினர் என பல்வேறு தரப்பினரும் இணைந்து 2 நாட்களாக நடத்திய மீட்புப்பணியில் 180 பேர் மீட்கப்பட்டனர்.

மாநில அரசின் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக குஜராத் சென்றிருந்த பிரதமர் மோடி விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயம் அடைந்தவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இதேபோல், மாநில முதல்-மந்திரி பூபேந்திர படேல் தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று கூறி உள்ளார். காயம் அடைந்தவர்களுக்கும் உதவித்தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங் போன்ற உலக தலைவர்கள் இந்த விபத்து குறித்து தங்கள் அதிர்ச்சியையும், இரங்கலையும் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை நடந்த பால விபத்துகளில், இதுதான் அதிக உயிர்களை காவு வாங்கிய பெரிய விபத்து ஆகும்.

இந்த சம்பவம் தொடர்பாக, பாலத்தை புதுப்பித்து பராமரிக்கும் ஒப்பந்தத்தை பெற்றிருந்த ஒரேவா நிறுவனத்தின் மேலாளர்கள் தீபக் பரேக், தினேஷ் தவே உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த குஜராத் அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

755 அடி நீளமும் 4 அடி அகலமும் கொண்ட இந்த தொங்கு பாலம் 143 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். அப்போதைய மன்னர் குடும்பத்தினர் வசித்த, ஆற்றின் ஒரு கரையில் உள்ள தர்பார்காத் அரண்மனையையும், மறுகரையில் உள்ள நாசர்பாக் அரண்மனையையும் (தற்போது தக்திர்ஜி என்ஜினீயரிங் கல்லூரி) இணைக்கும் வகையில் கட்டப்பட்ட இந்த பாலத்தை, 1879-ம் ஆண்டு பிப்ரவரி 10-ந்தேதி அப்போதைய மும்பை கவர்னர் ரிச்சர்டு டெம்பிள் என்பவர் திறந்துவைத்தார். மோர்பி பகுதியை அப்போது ஆட்சி பரிபாலனம் செய்த சர் வாஜி தாகோர், இங்கிலாந்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கட்டுமான பொருட்களை கொண்டு ரூ.3.5 லட்சம் செலவில் பாலத்தை கட்டி முடித்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இதுதான் இந்தியாவின் நீளமான தொங்கு பாலம் ஆகும்.

இந்த தொங்கு பாலத்தில் நின்றபடி நதியின் அழகையும், மோர்பி நகரின் இயற்கை எழிலையும் பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது உண்டு. விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதும்.

நூற்றாண்டை கடந்த இந்த பாலத்தில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது உண்டு. அந்த வகையில், இந்த பாலத்தை 2037-ம் ஆண்டு வரை பழுதுபார்த்து பராமரிப்பு பணியை மேற்கொள்வதற்காக ஆமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரேவா என்ற நிறுவனத்துடன் கடந்த மார்ச் மாதம் மோர்பி நகராட்சி ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி 15 ஆண்டுகளுக்கு பாலத்தை நிர்வகிக்க ஊழியர்களை நியமிப்பது; பராமரிப்பது; சுத்தம் செய்வது; பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட அதிகாரங்கள் இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. 2025-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பெரியவர்களுக்கான பார்வையாளர்கள் கட்டணத்தை 2 ரூபாய் கூட்டிக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிறுவனம் அஜந்தா என்ற பெயரில் கடிகாரங்களையும், மின்சார, மின்னணு மற்றும் வீட்டு உபயோக பொருட்களையும் தயாரிக்கிறது.

ரூ.2 கோடி செலவில் டிசம்பர் மாதத்துக்குள் பழுதுபார்ப்பு பணியை முடிக்க ஒரேவா நிறுவனத்தை மோர்பி நகராட்சி கேட்டுக்கொண்டது. இதற்காக கடந்த ஏப்ரல் மாதம் தொங்கு பாலம் மூடப்பட்டு பழுதுபார்ப்பு பணிகள் நடைபெற்று வந்தன. குஜராத் புத்தாண்டையொட்டியும், தீபாவளியை முன்னிட்டும் கடந்த மாதம் 26-ந்தேதி பொதுமக்கள் பார்வைக்காக பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.

அதற்கு இரு நாட்களுக்கு முன்பு இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்ட ஒரேவாவின் துணை நிறுவனமான அஜந்தா கடிகாரதயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் ஜெய்சுக் படேல், பழுதுபார்ப்பு பணிகள் முழுமையாக முடிந்து 6 மாதத்திலேயே வரலாற்று சிறப்பு மிக்க தொங்கு பாலம் திறக்கப்படுவதாகவும், பொதுமக்கள் பொறுப்புடன் பயன்படுத்தினால் இன்னும் 15 ஆண்டுகளுக்கு பாலம் வலுவாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

ஆனால் சொன்னது ஒன்று; நடந்தது ஒன்று. திறக்கப்பட்ட 4 நாட்களிலேயே பாலம் அறுந்து விழுந்துவிட்டது.

125 பேர் நிற்கும் வகையில்தான் இந்த பாலம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் விபத்து நடந்த அன்று ஒரே சமயத்தில் சுமார் 400 பேர் பாலத்தில் நின்றுள்ளனர். அவர்களில் பலர் உற்சாகத்தில் துள்ளிக்குதித்து இருக்கிறார்கள். எனவேதான் பாரம் தாங்காமல் பாலம் அறுந்து விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிக நபர்களை பாலத்தில் அனுமதித்தது ஏன் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மோர்பி நகராட்சி மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி ஒரேவா நிறுவனம், பெரியவர்களுக்கு 15 ரூபாயும், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 10 ரூபாயும் டிக்கெட் கட்டணமாக வசூலிக்க வேண்டும். ஆனால் இதை மீறும் வகையில் பெரியவர்களுக்கு 17 ரூபாயும், குழந்தைகளுக்கு 12 ரூபாயும் வசூலித்து இருக்கிறார்கள்.

பழுதுபார்ப்பு பணியின் போது பாலத்தின் நடைபாதையில் உள்ள மரப்பலகைகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக அலுமினிய தகடுகளை பொருத்தி இருக்கிறார்கள். பாலத்தை தாங்கும் இரும்பு வடங்களில் (கேபிள்) சேதம் அடைந்தவற்றை மாற்றவில்லை என்றும், வடங்களில் உள்ள துருவை நன்கு அகற்றாமல் அதன்மேல் பெயிண்ட் அடித்து ஒப்பேற்றி இருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. பழுதுபார்ப்பு பணி முடிய இன்னும் கால அவகாசம் இருக்கும் நிலையில், அவசர அவசரமாக பாலத்தை திறக்க அனுமதித்தது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.

மேலும் கடிகாரம், மின்சார-மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு, பாலத்தை பழுதுபார்க்கும் அனுபவம் இல்லாத போது, அதற்கான ஒப்பந்தத்தை வழங்கியது ஏன் என்ற முக்கியமான குற்றச்சாட்டையும் முன்வைக்கும் எதிர்க்கட்சிகள், இதில் முறைகேடு நடந்து இருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றன.

தகுதிச்சான்றிதழ் பெறாமலேயே பாலம் மீண்டும் திறக்கப்பட்டதாக மோர்பி நகராட்சி கூறி இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தகுதிச்சான்றிதழ் பெறாத நிலையில் ஒரேவா நிறுவனம் பாலத்தை மீண்டும் திறக்க முயற்சித்த போது அதை தடுத்து நிறுத்தாமல் அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

சீரமைக்கப்பட்ட பாலத்தை மீண்டும் திறக்க ஒரேவா நிறுவனம் தங்களிடம் அனுமதி கேட்கவில்லை என்றும், மேலும் இந்த சம்பவம் 'கடவுளின் செயல்' என்றும் மோர்பி நகராட்சி தலைமை அதிகாரி சந்தீப்சிங் ஜாலா கூறியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தை 'கடவுளின் செயல்' என்று ஜாலா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆனால் நகராட்சியின் அனுமதியுடன் பாலம் திறக்கப்பட்டதாக அந்த நிறுவனத்தின் தரப்பில் கூறப்படுகிறது. இதில் எது உண்மை என்பது முழுமையான விசாரணைக்கு பின்னர்தான் தெரியவரும்.

இவ்வளவு பெரிய விபத்து எப்படி நடந்தது, இதற்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு குஜராத் அரசுக்கு உள்ளது. அந்த மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், நடந்துள்ள இந்த கோர விபத்து, ஆளும் பாரதீய ஜனதாவுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தை எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஆதாயம் பெற முயற்சிப்பதை தடுக்க பாரதீய ஜனதா பகீரத பிரயத்தனம் செய்கிறது.

நம் நாட்டில் சுற்றுலாதலங்களில் இதுபோன்ற விபத்துகள் நடப்பது ஒன்றும் புதிது அல்ல. சுற்றுலாதலங்கள் சரியாக பராமரிக்கப்படாததும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காததுமே இதற்கு முக்கிய காரணம் ஆகும். துட்டு வசூலிப்பதில் காட்டும் அக்கறையை இதிலும் கொஞ்சம் காட்டினால் நல்லது.

பெரும்பாலான சுற்றுலாதலங்களில் உள்ள குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள், கருவிகள், நடைபாதைகள் சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமாக உள்ளன. சரியான குடிநீர் வசதி கிடையாது. தேங்கி கிடக்கும் குப்பை கூளங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன. இதுபற்றி அங்கிருக்கும் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால், ஓர் அலட்சியமான பார்வையும், எகத்தாளமான பதிலுமே கிடைக்கும்.

பாலம் உடைந்து விழுவது, பள்ளியில் சுவர் அல்லது மேற்கூரை இடிந்து மாணவர்கள் பலியாவது, சாக்கடை மூடி திறந்துகிடப்பதால் தவறி உள்ளே விழுந்து உயிரிழப்பது, பஸ்சின் தரைப்பகுதி உடைந்து பயணி சாலையில் விழுவது போன்ற அவலங்கள் அவ்வப்போது நடந்துகொண்டேதான் இருக்கின்றன.

இதுபோன்று ஏதாவது விபத்து நடந்தால், சில நாட்கள் அதுபற்றி பரபரப்பாக பேசுவார்கள். தலைவர்கள், அதிகாரிகள் வருவார்கள், ஆறுதல் கூறுவார்கள்; உதவித்தொகை அறிவிப்பார்கள்; விசாரணை கமிஷன் அமைப்பார்கள்; இனிமேல் இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்ளப்படும் என்று உறுதிமொழி அளித்து பிரச்சினையின் வீரியத்தை தணிக்கும் வகையில் பூசி மெழுகிவிட்டு போய்விடுவார்கள். அவ்வளவுதான், அந்த கதை முடிந்துவிடும். அவரவர் தங்கள் அடுத்த வேலையை பார்க்க தொடங்கிவிடுவார்கள். மக்களும் மறந்துவிடுவார்கள்.

அடுத்த சில மாதங்களிலோ அல்லது சில ஆண்டுகளிலோ அதேபோன்ற விபத்து மீண்டும் நடக்கும். அப்போதும் இதேபோன்ற ஆறுதல், உதவித்தொகை அறிவிப்பு, விசாரணை என்ற வழக்கமான சடங்குகள் தொடரும்.

ஜனநாயகத்தில் இதுபோன்ற சம்பிரதாயங்கள் தொடர்கதையாகிவிட்டன. நிரந்தர தீர்வு பற்றியோ, மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது பற்றியோ யாரும் அதிகம் கவலைப்பட்டதாக தெரியவில்லை. மனித உயிருக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.

அநியாய மரணங்களும், அகால மரணங்களும் நடக்கும் போது, 'போனால் போகட்டும் போடா' என்று வேதாந்தம் பேசிக்கொண்டிருக்க முடியாது. அதற்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். தவறுகள் நடந்த பின் பூதக்கண்ணாடி வைத்து விசாரிப்பதை விட, தவறுகள் நடக்காமல் தடுப்பதுதான் நிர்வாகத்திறன் மிக்க சிறந்த அரசாக இருக்கமுடியும்.

வாழ்க்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடத்தை திரைப்பாடலாக வடித்துள்ள கலைஞர் கருணாநிதி, 'வருமுன் காப்பவன்தான் அறிவாளி, வந்த பின்னே தவிப்பவன்தான் ஏமாளி' என்கிறார்.

இன்னும் எத்தனை காலம்தான் நாம் ஏமாளிகளாக இருப்பது? அறிவாளிகளாக மாறுவது எப்போது?

மோர்பி தொங்கு பால விபத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, இனிமேலாவது இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்வது, சம்பந்தப்பட்ட அனைவரின் கடமை ஆகும்.

அப்போது தப்பினார்... இப்போது முடியவில்லை...


* 1979-ம் ஆண்டு மோர்பி அணை உடைந்து மச்சு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்ததில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி ஆனார்கள். இந்த கோர விபத்து கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்று உள்ளது. அந்த விபத்தில் உயிர் தப்பியவர்களில் 19 வயதான மும்தாஜ் மக்வானா என்பவரும் ஒருவர். தற்போது 62 வயதாகும் அவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 26-ந்தேதி தொங்கு பாலத்தை பார்க்க சென்றிருந்தார். அப்போது பாலம் அறுந்து விழுந்ததில் மும்தாஜ் மக்வானா, அவரது மருமகள் ஷபானா(வயது 28), பேரன்(8) ஆகியோர் இறந்துவிட்டனர்.

* தொங்கு பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ராஜ்கோட் தொகுதி பாரதீய ஜனதா எம்.பி. மோகன் குண்டரியா குடும்பத்தைச் சேர்ந்த 3 ஆண்கள், 4 பெண்கள், 5 குழந்தைகள் என 12 பேர் பலியாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் மோர்பி நகரைச் சேர்ந்தவர்கள்.

* மீட்புப்பணியில் ஈடுபட்ட ராஜூ என்ற டீக்கடைக்காரர் தண்ணீரில் தத்தளித்த ஒரு சிறுமியையும், 2 சிறுவர்களையும் போராடி மீட்டார். ஆனால் ஆம்புலன்சுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன் அந்த 3 குழந்தைகளும் உயிரிழந்துவிட்டன.

* இந்த விபத்தில் பவேஷ் பிண்டி என்ற நகை வியாபாரியின் குடும்பமே பலியாகிவிட்டது. 40 வயதான பவேஷ் பிண்டியுடன் அவரது மனைவி மற்றும் இரு பிள்ளைகளும் உயிரிழந்து இருக்கிறார்கள்.

பால விபத்துகள்



இந்தியாவில் சமீபத்தில் நடந்த முக்கிய பால விபத்துகள் பற்றிய விவரம் வருமாறு:-

* யூனியன் பிரதேசமான டாமனில் உள்ள டாமன்கங்கா ஆற்றுப்பாலம் 2003-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி இடிந்து விழுந்ததில் 28 பள்ளிக்குழந்தைகள் உயிரிழந்தனர்.

* 2016-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி கொல்கத்தா விவேகானந்தா ரோடு பகுதியில் கட்டப்பட்டு வந்த இரும்பு பாலம் சரிந்து விழுந்ததில் 27 பேர் பலி; 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

* 2017-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி மும்பை எல்பின்ஸ்டன் ரோடு ரெயில் நிலைய நடை மேம்பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் சாவு; 39 பேர் காயம்.

* 2018-ம் ஆண்டு செப்டம்பர் 4-ந்தேதி கொல்கத்தா மஜேர்ஹாத் மேம்பாலம் இடிந்த விபத்தில் சாவு-3: காயம்-24.

* 2019 மார்ச் 14-ந் தேதி மும்பை சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையத்தையும், பதாருதீன் தயாபி சந்து பகுதியையும் இணைக்கும் நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் சாவு; 30 பேர் படுகாயம்.

அது அந்த காலம்...



சென்னை எழும்பூரில் இருந்து சுமார் 800 பயணிகளுடன் தூத்துக்குடி சென்ற ரெயில் அரியலூர் அருகேயுள்ள மருதை ஆற்றுப்பாலத்தை கடந்த போது, பாலம் உடைந்து ஆற்றுக்குள் கவிழ்ந்ததில் வெள்ளத்தில் மூழ்கி 142 பயணிகள் பலியானார்கள்; 110 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். 1956-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ந்தேதி அதிகாலை இந்த கோர விபத்து நடந்தது. அப்போது மத்தியில் ஜவகர்லால் நேரு மந்திரிசபையில் ரெயில்வே மந்திரியாக இருந்த லால் பகதூர் சாஸ்திரி, இந்த விபத்துக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார்.

அவரைப்போன்ற ஒழுக்கசீலர்களையும், நேர்மையாளர்களையும் இப்போது காண்பது அரிது. இப்போதெல்லாம் அதுபோன்று ஏதாவது விபத்து நடந்தாலோ அல்லது மோசடிகள் நடந்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் அடுத்துவர்கள் மீதோ, தொழில்நுட்பத்தின் மீதோ பழிபோட்டுவிட்டு தங்கள் பொறுப்பை தட்டிக்கழித்துவிடுகிறார்கள். அதேசமயம் தங்கள் துறையில் ஏதாவது ஒரு நல்ல காரியம் நடந்துவிட்டால், அதை தங்கள் சாதனையாக சொல்லி பெருமைப்பட்டுக்கொள்வதோடு விளம்பரமும் தேடிக்கொள்கிறார்கள்.

அது அந்தக் காலம்; இது இந்த காலம்...


Next Story