'நம்பிக்கை' கடைகள்


நம்பிக்கை கடைகள்
x

கடைக்கு யாரையும் நியமிக்காமல் விவசாயிகள் தங்கள் மீது நம்பிக்கை வைப்பதால் பொதுமக்களும் உரிய தொகையை பணப்பெட்டியில் போட்டுவிடுகிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் திருட்டு, குற்ற சம்பவங்கள் தினமும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் உண்மையும், நேர்மையும், கருணை உள்ளமும் கொண்ட மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மீது நம்பிக்கை வைத்தும், அவர்களை பார்த்து மற்றவர்களையும் அத்தகைய அணுகுமுறையை பின்பற்ற வைக்க தூண்டும் விதமான சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

மிசோரம் மாநிலத்தில் நடத்தப்படும் 'நம்பிக்கை கடைகள்' அதற்கு சிறந்த உதாரணங்களுள் ஒன்றாக இருக்கின்றன. அங்குள்ள செலிங் பகுதியில், கடைக்காரர்கள் யாரும் இல்லாமல் காட்சி அளிக்கும் இத்தகைய கடைகள் ஆங்காங்கே தென்படுகின்றன. குறிப்பாக நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்கள் இந்தக் கடைகளை காண முடியும். உள்ளூர் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் இந்தக் கடைகளுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளன.

விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை இந்தக் கடைகளில் வைத்துவிட்டு செல்கிறார்கள். ஒவ்வொரு விளை பொருட்களுக்கு அருகிலும் அந்த பொருளின் விலை எவ்வளவு என்பதை குறித்து வைக்கிறார்கள். அதன் அருகே பணம் செலுத்துவதற்குரிய பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. கடைக்கு வருபவர்கள் தாங்கள் விரும்பிய பொருட்களை எடுத்துக்கொண்டு அதற்குரிய தொகையை பெட்டியில் போட்டுவிடலாம்.

இந்தக் கடைகளில் பழங்கள், காய்கறிகள், பூக்கள் உள்ளிட்ட உள்ளூரில் விளையும் பொருட்கள் அனைத்தும் வைக்கப்படுகின்றன. அவை அறுவடை செய்யப்பட்டு நேரடியாக கடைகளில் வைக்கப்படுவதால் 'பிரஷ்'ஷாக காட்சி அளிக்கின்றன. இடைத்தரகர்கள் யாரும் இல்லை என்பதால் விவசாயிகளே விலையை நிர்ணயம் செய்கிறார்கள். அதனால் அவை குறைந்த விலையில் கிடைக்கின்றன.

பொதுமக்களும், சுற்றுலா செல்பவர்களும் அவற்றை ஆர்வமுடன் வாங்கிச் செல்கிறார்கள். கடைக்கு யாரையும் நியமிக்காமல் விவசாயிகள் தங்கள் மீது நம்பிக்கை வைப்பதால் பொதுமக்களும் உரிய தொகையை பணப்பெட்டியில் போட்டுவிடுகிறார்கள். இந்த நம்பிக்கை கடைகள் பற்றிய படங்கள், வீடியோக்கள் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் பரவி பலருடைய கவனத்தை ஈர்க்கின்றன. நேர்மையுடன் செயல்படுவதற்கு பாடம் புகட்டுகின்றன.


Next Story