மலைக்கவைக்கும் மலை வாழிடங்கள்


மலைக்கவைக்கும் மலை வாழிடங்கள்
x

இயற்கை எழில் கொஞ்சும் மலை பிரதேசங்களுக்கு நடுவே மலையேற்ற பயண பிரியர்களின் சொர்க்கபுரியாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்குகின்றன.

1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்து ஜனநாயக நாடாக மாறியதுடன் அதுவரை அரசாட்சி புரிந்து கொண்டிருந்த அரசர்களின் ஆதிக்கமும் முடிவடைந்தது. ஆனாலும் அவர்கள் கட்டியெழுப்பிய கோட்டைகள், அரண்மனைகள் இந்தியாவின் பாரம்பரியத்தையும், கட்டிடக்கலையையும் இன்றளவும் உலகுக்கு பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன. இந்தியாவின் கலாசார மையமாகவும் பல நகரங்கள் விளங்கிக்கொண்டிருக்கின்றன. அவற்றுள் 'கிழக்கின் ஆக்ஸ்போர்டு' என்று கருதப்படும் மகாராஷ்டிராவின் புனே நகரம் வரலாற்று பொக்கிஷங்களை தன்னகத்தே கொண்டது. வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு அரிய தகவல்களை சேகரிப்பதற்கு ஏற்ப வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டைகள் புனேயை சுற்றி அமைந்துள்ளன. அவை இயற்கை எழில் கொஞ்சும் மலை பிரதேசங்களுக்கு நடுவே மலையேற்ற பயண பிரியர்களின் சொர்க்கபுரியாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்குகின்றன. அவற்றுள் சிலவற்றின் பட்டியல்.

புரந்தர்:

சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் மகனான சாம்பாஜி ராஜே இங்குதான் பிறந்தார். இந்த கோட்டை புனேவில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கோட்டையின் வரலாற்றைப் பற்றி மேலும் விரிவாக அறிய விரும்பினால், இரட்டை கோட்டையாக விளங்கும் வஜ்ரகத்தையும் பார்வையிட வேண்டும். இதுவும் அருகில்தான் அமைந்துள்ளது. இந்த இரு கோட்டைகளும் மராட்டிய வரலாற்றையும், கட்டிடக்கலை பாணியையும் கண்முன் காட்சிப்படுத்தும்.

ராஜ்மாச்சி:

மலையேற்றம் மேற்கொள்பவர்கள் மிகவும் விரும்பும் கோட்டைகளில் இதுவும் ஒன்று. இந்த கோட்டையை ஒட்டி மலையேற்றம் செய்வது உற்சாகத்தை வரவழைக்கும். சஹ்யாத்ரி மலை தொடரில் அமைந்துள்ள பிரபலமான இந்த கோட்டை அனைத்து தரப்பினரும் வந்து செல்லும் சுற்றுலா தலமாக விளங்குகிறது. குறைந்த செலவில் சுற்றுலா சென்று வந்த அனுபவம் இந்த கோட்டையை சுற்றிப்பார்த்தால் கிடைக்கும். இது புனேவில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

சுதாகத் கோட்டை:

போராப்காட் என்றும் அழைக்கப்படும் இது மகாராஷ்டிராவில் சிறப்பாக புனரமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட கோட்டைகளில் ஒன்றாக விளங்குகிறது. மலையேற்ற பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள், புகைப்பட ஆர்வலர்கள் இருவருக்கும் சிறந்த இடமாக கருதப்படுகிறது.

கோட்டையின் கட்டமைப்பையும், இயற்கை அழகையும் ஒருசேர ரசித்து மகிழலாம். மலையேற்றம் மேற்கொண்டபடியே விதவிதமான போஸ்களில் புகைப்படம் எடுக்கலாம். இது புனேவில் இருந்து 53 கி.மீ. தொலைவில் உள்ளது.

சிங்ககாட்:

சிங்கக் கோட்டை என்று அழைக்கப்படும் இது புனே நகரத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது. புனேக்கு வருபவர்கள் தவறாமல் சுற்றிப்பார்க்கும் இடமாக உள்ளது. புனேவில் இருந்து பேருந்து வசதிகளும் இருக்கின்றன.

கோட்டையின் நுழைவு வாயிலில் விற்பனை செய்யப்படும் பலகாரங்கள் நாவிற்கு கூடுதல் சுவை சேர்க்கும். உள்ளூர்வாசிகளின் வாழ்வாதாரத்திற்கு வித்திடும் சுற்றுலாத்தலமாகவும் இது விளங்குகிறது. புனேவில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது.

1 More update

Next Story