மலேசியாவில் பொங்கும் நெல்லை மண்பானை


மலேசியாவில் பொங்கும் நெல்லை மண்பானை
x

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பொங்கல் வைப்பதற்கு மண்பானைகளையே பலரும் பயன்படுத்துகின்றனர்.

பொங்கல் இடுவதற்கு மண்பானையை தேர்வு செய்பவர்கள் ஏராளம். அந்த பானையில் மஞ்சள் குலையையும், பூ மாலையையும் கட்டி அலங்கரித்து பொங்கல் வைப்பார்கள். இயற்கைக்கு நன்றி தொிவிக்கும் வகையில்தான், பஞ்சபூதங்களில் ஒன்றான மண்ணால் செய்யப்பட்ட பானையில் பொங்கல் வைக்கிறோம். அதுமட்டுமின்றி, மண்பானையில் வைக்கும் பொங்கலுக்கு சுவையும், ஆரோக்கியமும் மிகுந்தது.

பொங்கல் வைப்பதற்காக மண்பானைகள் தயார் செய்யும் பணி, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நடைபெறுகிறது. அந்த வகையில், நெல்லை மேலப்பாளையம் குறிச்சி, களக்காடு, சேரன்மாதேவி, காருக்குறிச்சி, கூனியூர், ஆழ்வார்குறிச்சி, தேன்பொத்தை, சுரண்டை, பொன்னன்குறிச்சி, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, மாதாபுரம், மயிலப்பபுரம், மருதமுத்தூர், சேரை குளம் உள்ளிட்ட ஊர்களில் பொங்கல் தயாரிப்பதற்கான மண்பானைகள் மற்றும் சாமி கும்பிடுவதற்கான சாம்பிராணி கரண்டி, கலயம் உள்ளிட்ட மண்பாண்ட பொருட்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழர்கள் அதிகம் வாழும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பொங்கல் பண்டிகை சீரும் சிறப்புமாக கொண்டாடப்படுகிறது. அங்கும் பொங்கல் வைப்பதற்கு மண்பானைகளையே பலரும் பயன்படுத்துகின்றனர். மலேசியாவில் உள்ள தமிழர்கள் பொங்கல் வைப்பதற்காக பிரத்யேகமாக, நெல்லை மேலப்பாளையம் குறிச்சியில் மண்பானை உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்படுகிறது. ஒரு கிலோ அரிசி மற்றும் ½கிலோ அரிசியில் பொங்கல் வைப்பதற்கு ஏதுவாக மண் பானைகள் இங்கு தயார் செய்யப்படுகின்றன.

இந்த மண்பானைகள் வண்ணம் பூசப்பட்டு வாகனங்களில் உடையாமல் இருக்க வைக்கோல் வைத்து சுற்றி, பெட்டிகளில் வைத்து பாதுகாப்பாக நெல்லையிலிருந்து லாரி மூலம் தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து கப்பல் மூலம் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பொங்கல் அன்று, நெல்லையில் இருந்து வரும் மண்பானையில் தான் மலேசிய தமிழர்கள் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படைக்கிறார்கள் என்பது நமக்குப் பெருமைதான்.


Next Story