பழைய ஆடைகளில் மனம் கவரும் பொக்கிஷங்கள்


பழைய ஆடைகளில் மனம் கவரும் பொக்கிஷங்கள்
x

துணிகளை மறுசுழற்சி செய்து கண்கவர் கலை வடிவம் கொண்ட நினைவுப் பொருளாக வழங்கி கொண்டிருக்கிறார், பரா அஹ்மத்.பச்சிளம் குழந்தைகளின் ஆடைகள், அவர்களுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை நினைவு பொருட்களாக மாற்றி கொடுக்கும் பணியை செய்து வருகிறார்.

மனதுக்கு நெருக்கமானவர்களின் எதிர்பாராத மரணம் துயரத்தில் ஆழ்த்திவிடும். அவர்களின் நினைவுகளை சுமக்கும் பரிசு பொருட்களை பத்திரப்படுத்தி வைப்பார்கள். அதுபோல் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பொக்கிஷமாக பாதுகாப்பார்கள். எனினும் அவர்கள் உடுத்திய ஆடைகள் அத்தனையையும் பத்திரப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

அத்தகைய துணிகளை மறுசுழற்சி செய்து கண்கவர் கலை வடிவம் கொண்ட நினைவுப் பொருளாக வழங்கி கொண்டிருக்கிறார், பரா அஹ்மத். 39 வயதாகும் தொழில்முனைவோரான இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசிக்கிறார். பச்சிளம் குழந்தைகளின் ஆடைகள், அவர்களுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை நினைவு பொருட்களாக மாற்றி கொடுக்கும் பணியை செய்து வருகிறார்.

கொரோனா இரண்டாவது அலை இவரது குடும்பத்தை உலுக்கிவிட்டது. தாயாரும், சகோதரரும் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி மரணம் அடைந்துவிட்டார்கள். அவர்களின் நினைவாக அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் நினைவு பொருட்களாக மாற்ற முடிவு செய்திருக்கிறார்.

''பிறந்த குழந்தைகளுக்கு வாங்கும் ஆடைகளை சில மாதங்கள் மட்டுமே உடுத்த முடியும். அதுபோல் அவர்களுக்கு பயன்படுத்தும் சின்ன சின்ன பொருட்களும் அலமாரியை நிரப்பிவிடும். அவற்றை குப்பையில் போடுவதற்கு மனம் ஒப்புக்கொள்ளாது. அப்படிப்பட்ட பொருட்களை ஒன்றாக அலங்கரித்து அழகுபடுத்தி பார்த்தேன். அவை பார்ப்பதற்கு அழகாகவும், அலங்கார பொருட்களாகவும், நினைவு பொக்கிஷங்களாகவும் என் கண்களுக்கு தெரிந்தன.

உடனே அவற்றை ஒழுங்குபடுத்தி அலங்கரித்தேன். அலமாரியில் குவிந்திருந்த பொருட்களின் எண்ணிக்கை குறைந்து போனதுடன் நினைவு பொருளாக மாறியது. அப்படி பழைய ஆடைகளை நினைவுப் பொருட்களாக மாற்றுவதன் மூலம் கழிவு பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது மன நிறைவு அளித்தது. நான் வடிவமைத்த விதத்தை பார்த்து பலரும் என்னை அணுகினார்கள். அதனால் அதையே சுயதொழிலாக மேற்கொள்ள தொடங்கினேன்'' என்பவர் அம்மாவின் ஆடைகளையும் நினைவு பொக்கிஷமாக மாற்றிவிட்டார்.

''என் அம்மாவை இழந்த பிறகு அவரது அலமாரியை சுத்தம் செய்து துணிகளை ஒழுங்குபடுத்தினேன். அவரது ஆடைகளை என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அவற்றை தூக்கி எறியவோ, மற்றவர்களுக்கு கொடுக்கவோ எனக்கு மனமில்லை.

அம்மாவின் நினைவாக பாதுகாக்க முடிவு செய்தேன். ஏற்கனவே குழந்தைகளின் ஆடைகளை வடிவமைத்ததால் அதே முறையை பின்பற்ற முடிவு செய்தேன். இறந்த குடும்ப உறுப்பினரின் ஆடைகளைப் பயன்படுத்துவது அவர்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது'' என்கிறார்.

பராவின் நண்பர்கள் வட்டத்தில் சிலர் கொரோனாவுக்கு அவர்களது குடும்ப உறவினர்களை இழந்தனர். அவர்களும் தங்கள் அன்புக்குரியவர்களின் பொருட்களை பாதுகாக்க முடிவு செய்து பராவை அணுகி இருக்கிறார்கள்.

''மனதுக்கு கஷ்டமாக இருக்கும் நாட்களில், நான் உருவாக்கிய நினைவு பொருட்களை என் அருகில் பரப்பி அமர்ந்திருப்பேன். என் அம்மா என்னைக் கட்டிப்பிடித்து, எல்லாம் சரியாகிவிடும் என்று என் காதில் கிசுகிசுப்பது போல் உணர்கிறேன்.

உங்களுக்கு நெருக்கமான ஒருவரை இழந்த வலியை பகிர்ந்துகொள்வது எளிதல்ல. அதுவும் முற்றிலும் அந்நியருடன் இருக்கும்போது வேதனை இன்னும் அதிகமாக இருக்கும். இருப்பினும், என் விஷயத்தில் நினைவுப்பொருட்கள் ஆறுதல் அளிக்கின்றன.

அன்பானவரிடம் இருந்து கிடைக்கும் பாதுகாப்பு விவரிக்க முடியாதது. அன்புக்குரியவர்களை இழந்த பலரை சந்தித்திருக்கிறேன். அவர்களின் கதைகளைக் கேட்பதும் என்னை வலிமையாக்கியது. அன்புக் குரியவர்கள் பயன்படுத்திய சிறிய ஆடையைப் பார்ப்பது பல நினைவுகளையும் அனுபவங்களையும் திரும்பக் கொண்டுவரும்'' என்றும் சொல்கிறார்.


Next Story