உடலியல் கல்வி - படிப்பும் வேலை வாய்ப்பும்


உடலியல் கல்வி - படிப்பும் வேலை வாய்ப்பும்
x

விளையாட்டு மற்றும் உடல் இயக்கத்தின் போது ஏற்படும் அனைத்து உடல் செயல்பாடுகள் மற்றும் சைக்கோமோட்டார் செயல்பாடுகளின் அறிவு மற்றும் ஆய்வு ஆகியவற்றை பற்றி படிப்பதே ஃபிசிகல் எஜுகேஷன் என்ற படிப்பாகும். பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் படிப்புடன் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு கட்டாயமாகும். பகுதிநேர நெறியாகவும் உடற்கல்வி பாடம் வழங்கப்படுகின்றது.

உடலியல் கல்வி என்பது இந்திய கல்வி முறையின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது என்றே சொல்லலாம். இப்பொழுது உடலியல் கல்வி என்பது வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் வாழ்க்கையில் தொழிலுக்கு அடிகோலும் துறையாகவும் உள்ளது. உடலியல் கல்வி என்பது மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகின்ற ஒரு பாடமாகும். பள்ளி அல்லது கல்லூரிகளில் உடலியல் கல்வியை ஒரு பாடமாக அறிமுகப்படுத்துவதன் நன்மைகள் என்னவென்றால் இது பல்வேறு விளையாட்டு நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் மாணவர்களை ஈடுபட செய்வதுடன், உடல் ரீதியாகவும் தயாராக்குகிறது. பெரும்பாலான கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் உடற்கல்வி கட்டாய பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

உடலியல் கல்வி என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் வளர்ச்சி, ஆளுமையின் வளர்ச்சி மற்றும் நரம்பு தசைகளின் வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. உடற்கல்வி என்பது ஒரு பரந்த பாடதிட்டம் ஆகும். இத்திட்டத்தில் பல்வேறு சான்றிதழ், டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்புகள் உள்ளன. பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு மாணவர்களின் சிறந்த தேர்வாக இது இருக்கும் என்று சொல்லலாம். இந்த பாட திட்டத்தின் சிறந்த பகுதி என்னவென்றால் எந்த ஒரு துறையின் மாணவரும் உடற்கல்வியில் சேர்க்கை பெற முடியும். சில சான்றிதழ் பாடங்களில் சேருவதற்கு வயது வரம்பு உள்ளது.

பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு உடற்கல்வி படிப்பில் உள்ள பாடநெறிகள்;-

சான்றிதழ் படிப்புகள்: இவை 12 ஆம் வகுப்பிற்கு பிறகு படிக்கக்கூடிய ஒரு வருட கால படிப்பாகும். சான்றிதழ் படிப்புகள் ஏரோபிக்ஸ், யோகா மற்றும் யோகா அறிவியல், இயற்கை மருத்துவம் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் போன்ற துறைகளில் இருக்கிறது.

டிப்ளமோ படிப்புகள்: இது பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு படிக்கக்கூடிய இரண்டு வருடகால படிப்பாகும். டிப்ளமோ படிப்புகளின் பட்டியல் ஏரோபிக்ஸ், யோகா ஆசிரியர் பயிற்சி, யோகா மற்றும் உடற்கல்வி, யோகா என்று நீள்கிறது.

உடற்கல்வி பட்டப்படிப்புகள்: இது மூன்று வருடகால பட்டப்படிப்புகளாகும். பிஏ யோகா, பிஏ உடற்கல்வி, பிபிஇடி(BPED) உடற்கல்வி போன்றவற்றில் பட்டப்படிப்புகள் உள்ளன.

தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள்: உடற்கல்வி நிபுணர்களின் தேவையானது அதிக அளவில் உள்ளது என்றே சொல்லலாம். ஒரு தொழிலாக உடற்கல்வியானது மிகவும் தேவைப்படுவதாகவும் நல்ல பணத்தை சம்பாதித்து தருவதாகவும் உள்ளது. உடல் தகுதி குறித்த விழிப்புணர்வை பரப்ப விரும்பும் எவருக்கும் இது மிகவும் நல்ல தொழில் என்று சொல்லலாம். இந்த பாடநெறி முடிந்ததும் மாணவர்கள் விளையாட்டு மற்றும் உடற்கல்வியில் உயர் படிப்புக்கு செல்லலாம். அல்லது ஆரோக்கியம் மற்றும் விளையாட்டு தொழில்களில் வேலைக்கு சேரலாம். சொந்தமாக உடற்பயிற்சிக்கூடம் அல்லது உடற்தகுதி மையத்தை தொடங்கி நடத்தலாம். சுகாதார சங்கங்கள், விளையாட்டு சங்கங்கள், விளையாட்டு அமைச்சகம், விளையாட்டு அரங்கங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உடற்பயிற்சி சாலை, பெரு நிறுவன பணிகள், ஆரோக்கியம் மற்றும் விளையாட்டு தொடர்பான நிறுவனங்களில் வேலை வாய்ப்பை இத்துறை பட்டதாரிகள் பெருகிறார்கள்.

தடகள பயிற்சியாளர், இருதய உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர், சத்து நிபுணர் செயல்பாட்டு இயக்குனர், உடற்தகுதி பயிற்றுவிப்பாளர், ஆசிரியர், மறுவாழ்வு நிபுணர், உடல் சிகிச்சை நிபுணர், தனிப்பட்ட பயிற்சியாளர் மற்றும் சமூக இயக்குனர் போன்ற பதவிகளை இத்துறை பட்டதாரிகள் வகிக்கின்றனர். இத்துறையில் மாத சம்பளம் ஆரம்பத்தில் குறைவாக இருந்தாலும் வருடங்கள் செல்லச் செல்ல திறமையும் அனுபவமும் பெருகும் பொழுது மிக நல்ல ஊதியத்தை பெற்றுத் தருகிறது. சொந்தமாக பயிற்சி அளிப்பவர்கள் உடற் பயிற்சி மையங்களை நடத்துபவர்களின் வருமானமானது அதிகமான ஒன்றாகவே இருக்கும்.


Next Story