நீச்சலில் புதிய சாதனை படைத்த நடிகர் மாதவனின் மகன் வேதாந்த்


நீச்சலில் புதிய சாதனை படைத்த நடிகர் மாதவனின் மகன் வேதாந்த்
x
தினத்தந்தி 24 July 2022 12:44 PM GMT (Updated: 24 July 2022 2:02 PM GMT)

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், நீச்சல் வீரராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதுடன் நீச்சலில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். தற்போது 48-வது தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில்,1,500 மீட்டர் ப்ரீஸ்டைல் ​போட்டியில் புதிய சாதனை படைத்து இருக்கிறார்.

அவர் பந்தய தூரத்தை 16:01.73 வினாடிகளில் எட்டிப்பிடித்திருக்கிறார். இதற்கு முன்பு 2017-ம் ஆண்டு அத்வைத் பேஜ் 16:06.43 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். அதுவே ஜூனியர் பிரிவில் சாதனையாக இருந்தது. அதனை தற்போது வேதாந்த் முறியடித்திருக்கிறார்.

இதனை மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகனை வாழ்த்தியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த டேனிஷ் ஓபன் போட்டியில் வேதாந்த், வெள்ளி மற்றும் தங்க பதக்கங்களை வென்றார். 16 வயதாகும் வேதாந்த் நீச்சலில் மேலும் பல சாதனை படைக்க வேண்டும், ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டுள்ளார். ''நான் என் அப்பாவின் நிழலில் வாழ விரும்பவில்லை. ஆர். மாதவனின் மகனாக மட்டும் இருப்பதில் எனக்கு விருப்பமும் இல்லை. எனக்கான பெயரையும், அடையாளத்தையும் உருவாக்க விரும்புகிறேன்'' என்கிறார்.

மகனின் நீச்சல் பயிற்சிக்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாதவன் குடும்பத்துடன் துபாய்க்கு இடம் பெயர்ந்தார். அதுபற்றி மாதவன் கூறுகையில், ''மும்பையில் உள்ள பெரிய நீச்சல் குளங்கள் கொரோனா காரணமாக மூடப்பட்டுவிட்டன. சில இடங்களில் கடும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. துபாயில் என் மகன் பயிற்சி பெறுவதற்கு தேவையான எல்லா வசதிகளுடன் கூடிய பெரிய குளங்கள் உள்ளன. அவர் ஒலிம்பிக்கை நோக்கி உழைக்கிறார்'' என்கிறார்.

தனது மகன் யாரையும் சார்ந்திருக்காமல் தானே முத்திரை பதிக்க விரும்புவதை பெருமையாக உணர்கிறார். மகன் தன்னைப் போல் ஒரு நடிகனாக இருக்க விரும்பவில்லை என்பதில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் மாதவன் சொல்கிறார்.

கடந்த ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வேதாந்த் மகாராஷ்டிரா சார்பில் பங்கேற்று ஏழு பதக்கங்களை வென்றார். 12 வயதில் தாய்லாந்தில் நடந்த சர்வதேச நீச்சல் போட்டியில் வெற்றி வாகை சூடினார். தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில், மூன்று தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story