கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு - முன்னோர்களால் முடியாததை சாதித்த மன்னர் ராஜேந்திரன்


கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு - முன்னோர்களால் முடியாததை சாதித்த மன்னர் ராஜேந்திரன்
x

பாட்டனுக்குப் பாட்டன் காலத்தில் இருந்து மீட்க முடியாமல் இருந்த பாண்டியர் குலச் சின்னங்களை மன்னர் ராஜேந்திரன் மீட்டது, அவரது வரலாற்றில் அரும்பெரும் சாதனையாகப் போற்றப்பட்டது.

மன்னர் ராஜராஜன் எந்தப் போரிலும் தோல்வியே காணாதவர் என்றபோதிலும், மேலைச்சாளுக்கிய நாட்டின் தலைநகர் மாண்யகேடத்தைக் கைப்பற்ற முடியவில்லை என்பதும், இலங்கை மன்னரிடம் பாண்டிய மன்னர் அடைக்கலமாகக் கொடுத்த பாண்டியர்களின் குலச் சின்னங்களை மீட்க முடியவில்லை என்பதும் அவரது கவலைகளாக இருந்தன.

(அடைக்கலமாக வைக்கப்பட்ட பாண்டியர்களின் குலச்சின்னங்கள் குறித்து 6-ம் அத்தியாயத்தில் விரிவாகப் பார்த்தோம்).

கடந்த 70 ஆண்டுகளாகத் தனது முன்னோர்களால் மீட்க முடியாத பாண்டியர்களின் குலச்சின்னங்களை எப்படியும் கைப்பற்றியே தீர வேண்டும் என்று ராஜராஜன் விரும்பினார்.

இதைத் தொடர்ந்து ராஜராஜன், கி.பி.991-ம் ஆண்டு இலங்கை மீது படையெடுத்துச் சென்று அந்த நாட்டை சோழர் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார். பொலன்னருவ என்ற நகரில் சிவன் ஆலயம் ஒன்றையும் கட்டினார்.

அப்போது மன்னராக இருந்த ஐந்தாம் மகிந்தன், போரில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, ராஜராஜனுக்குப் பயந்து தென்பகுதியில் உள்ள ரோகணா என்ற காட்டுப்பகுதிக்குச் சென்று தலைமறைவு வாழ்க்கை நடத்தினார்.

அவருடன் அவரது ஆதரவாளர்களும் தங்கி இருந்தனர். சில காலம் அமைதியாக இருந்த அவர்கள், ரகசியமாகப் படை திரட்டி, சோழர்களை எதிர்ப்பதற்கான காலத்திற்காகக் காத்து இருந்தனர்.

கி.பி.1014-ம் ஆண்டு மன்னர் ராஜராஜன் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, இளவரசராக அறிவிக்கப்பட்டு இருந்த ராஜேந்திரன், சோழப் பேரரசின் மன்னராக முடிசூட்டிக் கொண்டார்.

மன்னர் ராஜேந்திரனின் திறமையை குறைவாக மதிப்பிட்ட மகிந்தன், சோழர்களைத் தாக்க இதுதான் சரியான சமயம் என்று கருதினார். இதைத் தொடர்ந்து, இலங்கையின் வடபகுதியில் சோழப் படைக்குச் சொந்தமாக இருந்த பகுதிகளை ஒவ்வொன்றாகக் கைப்பற்றத் தொடங்கினார்.

இதை அறிந்த மன்னர் ராஜேந்திரன், இலங்கையில் இருக்கும் மகிந்தனின் கொட்டத்தை முழுமையாக அடக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.

இதற்காக கி.பி.1017-ம் ஆண்டு, சோழர்களின் கடற்படை மீண்டும் இலங்கைக்குப் பயணமானது. இந்தப் போருக்கு ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

இலங்கைக்குச் சென்ற சோழப் படைகள், காடுகளில் மறைந்து இருந்த மகிந்தனையும் அவரது படைகளையும் வேட்டையாடித் தாக்கத் தொடங்கின. இந்தப் போரில் மகிந்தனின் படை வீரர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர். உயிர் பிழைத்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

மகிந்தனின் படைகள் தப்பி ஓடியதைத் தொடர்ந்து, அந்த மன்னரின் அரண்மனையை சோழப் படைகள் சூறையாடினார்கள்.

"இலங்கை மன்னர்கள் பரம்பரையாக அணியும் தங்கக் கிரீடம், இலங்கை மன்னருக்கு இறைவன் வழங்கியதாகக் கருதப்படும் வைரம் பதித்த கைக்காப்பு, அரண்மனை பொக்கிஷசாலையில் இருந்த ஏராளமான நகைகள், யாராலும் உடைக்க முடியாதது என்ற சிறப்புப் பெற்ற வாள் உள்பட அரண்மனையில் இருந்த அனைத்தையும் ராஜேந்திரன் வாரிச் சுருட்டிக் கொண்டதாக" இலங்கையின் வரலாற்று நூலான 'மகாவம்சம்' தெரிவிக்கிறது.

புத்தரின் புனிதச் சின்னங்கள் வைக்கப்பட்டு இருந்த இடங்களை சோழப் படைகள் நாசப்படுத்தியதாகவும், அங்கு இருந்த தங்கச் சிலைகள், விலை உயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை அவர்கள் எடுத்துக் கொண்டதாகவும், அவர்களது செயல், ரத்தத்தை உறிஞ்சும் யக்ஷர்கள் நடவடிக்கைபோல இருந்தது என்றும் மகாவம்சம் சொல்லி இருக்கிறது.

இந்தப் போரில் தோல்வி அடைந்த மகிந்தன், மீண்டும் தப்பி ஓடி காடுகளுக்குள் தஞ்சம் அடைந்தார்.

இவரை இப்படியே விட்டால் மீண்டும், மீண்டும் தொல்லை கொடுப்பார் என்று கருதிய ராஜேந்திரன், தந்திரமான ஓர் ஏற்பாட்டைச் செய்தார்.

மகிந்தனுடன் சமாதானப் பேச்சு நடத்தி, அவருடன் ஓர் உடன்பாடு செய்துகொள்ள விரும்புவதாகத் தூதர்கள் மூலம் செய்தி அனுப்பினார்.

மறைவிடத்தில் இருந்த மகிந்தன், இந்த அழைப்பு உண்மையானது என்று நம்பி, காடுகளில் இருந்து வெளியே வந்தார். மன்னர் ராஜேந்திரனைச் சந்திக்க ஆவலுடன் விரைந்தார்.

மன்னர் ராஜேந்திரன் முன்பு கொண்டு வரப்பட்ட மகிந்தன், உடனடியாகக் கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது மனைவிகள், மகள் ஆகியோரும் சிறைப்பிடிக்கப்பட்டனர். மகிந்தனின் படையில் இருந்த யானைகள், குதிரைகள் மற்றும் அவரது அனைத்து வாகனங்களும் கைப்பற்றப்பட்டன.

'தனது மனைவிகளும், மகளும் சிறைப்பிடிக்கப்பட்டதாலும், செல்வங்கள் அனைத்தையும் இழந்ததாலும் பயந்துபோன மகிந்தன், மன்னர் ராஜேந்திரனின் பாதங்களில் சரண் அடைந்தார்' என்று கரந்தைச் செப்பேடு, இந்த நிகழ்வைப் பதிவு செய்து இருக்கிறது.

80 ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கை மன்னரிடம் பாண்டிய மன்னர் கொடுத்து வைத்து இருந்த பாண்டியர்களின் குலச் சின்னங்களான மணிமகுடம், இந்திர ஆரம் ஆகியவற்றை மகிந்தன் ரகசிய இடத்தில் பதுக்கி வைத்து இருந்தார். அவற்றையும் ராஜேந்திரன் கைப்பற்றினார்.

தனது பாட்டனுக்குப் பாட்டன் காலத்தில் இருந்து மீட்க முடியாமல் இருந்த பாண்டியர் குலச் சின்னங்களை மன்னர் ராஜேந்திரன் மீட்டது, அவரது வரலாற்றில் அரும்பெரும் சாதனையாகப் போற்றப்பட்டது.

இந்தப் போரின் இறுதியில், இலங்கை முழுவதும் சோழப் படை வசம் ஆனது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, பொலன்னருவ நகரில் தனது தாயார் வானவன்மாதேவி பெயரில் ஒரு கோவிலை ராஜேந்திரன் கட்டினார்.

திரிகோணமலையில், சாதாரண நிலையில் இருந்த பத்திரகாளி கோவிலைப் பெரிய அளவில் கட்டினார். அந்தக் கோவிலில் மன்னர் ராஜேந்திரனின் போர் வெற்றிகள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டன.

பொலன்னருவ நகரில் கிடைத்த கல்வெட்டுகளிலும், கொழும்பு நகர அருங்காட்சியகத்தில் உள்ள கல்வெட்டிலும், 'திருமன்னி வளர' என்று தொடங்கும் ராஜேந்திரனின் மெய்க்கீர்த்தி வாசகங்கள் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டுகள் சேதம் அடைந்த நிலையில் இருந்தாலும், இலங்கையில் ராஜேந்திரன் முழு வெற்றி பெற்றதற்கு அடையாளங்களாகத் திகழ்கின்றன. பொலன்னருவ நகரின் அருகே இருக்கும் சிவன் மற்றும் விஷ்ணு ஆலயங்கள், ராஜேந்திரன் காலத்தில் விரிவுபடுத்திக் கட்டப்பட்டவை என்பதை அவற்றின் கட்டுமானங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

போரின்போது கைது செய்யப்பட்ட இலங்கை மன்னர் மகிந்தன், அங்கு இருந்து தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்டார். தமிழகத்தில் 12 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு, மகிந்தன் தமிழகத்திலேயே மரணம் அடைந்தார்.

மன்னர் மகிந்தன், அவரது மனைவிகள், மகள் ஆகியோர் சோழப் படைகளால் கைது செய்யப்பட்டபோதிலும், மகிந்தனின் மகன் கஸ்ஸப்பா எப்படியோ சோழப் படைகளிடம் சிக்காமல் தப்பிவிட்டார்.

மகிந்தனின் விசுவாசிகள், சிறுவனாக இருந்த கஸ்ஸப்பாவை காட்டுக்குள் கடத்திச் சென்று ரகசியமாக வளர்த்தார்கள். அங்கே படை பலத்தையும் உருவாக்கினார்கள்.

ராஜேந்திரன் போர் நடத்திய 12 ஆண்டுகளுக்குப் பிறகு, காட்டுக்குள் ஒளிந்து இருந்த மகிந்தனின் மகனும் அவரது ஆதரவாளர்களும், காட்டைவிட்டு வெளியே வந்து, தாங்கள் இழந்த பகுதிகளை மீட்க சோழப் படைகளுடன் போர் நடத்தினார்கள்.

கொரில்லா தாக்குதல் முறையில் நடைபெற்ற இந்தப் போர், 6 மாதங்கள் நீடித்தது. இதில் சோழப் படையினர் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டதாகவும், இறுதியில் ரோகணா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சிங்களப் படைகள் கைப்பற்றிக் கொண்டன என்றும், ரோகணாவைத் தலைநகரமாகக் கொண்டு, முதலாம் விக்கிரமபாகு என்ற பெயரில் கஸ்ஸப்பா அங்கே சில ஆண்டுகள் ஆட்சி செய்ததாகவும் இலங்கை வரலாறு சொல்கிறது.

இலங்கையின் மற்ற பகுதிகளையும் மீட்க வேண்டும் என்று விக்கிரமபாகு முயற்சி செய்தபோது, அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.

விக்ரமபாகுவுக்கு நேரடி வாரிசு யாரும் இல்லாததால், ஆட்சியைக் கைப்பற்ற பலருக்கு இடையே போட்டி நடைபெற்றது. 10 ஆண்டுகாலம் இந்தக் குழப்பம் நீடித்தது. அந்தக் காலகட்டத்தில் ஆட்சிபொறுப்பு ஏற்ற பல இளவரசர்கள் சோழப் படைகளால் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே தமிழகத்தில் சோழப் படைக்கு பாண்டியர்களும் சேரர்களும் நெருக்கடி கொடுத்ததால், சோழர்களால் இலங்கை மீது அதிக கவனம் செலுத்த முடியவில்லை.

இறுதியாக 1055-ம் ஆண்டு விஜயபாகு என்பவர் ரோகணாவில் ஆட்சிக்கு வந்து, சோழர்களுடன் போரிட்டு இலங்கை முழுவதையும் தனது ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்து 17 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

பாண்டியர்களின் குலச் சின்னங்களை மீட்க வேண்டும் என்பதுதான் இலங்கையில் ராஜேந்திரன் நடத்திய போருக்குக் காரணமாக இருந்தது என்பது போல, சேர மன்னர்கள் வழி வழியாகப் பயன்படுத்திய குலச் சின்னங்களைக் கைப்பற்ற வேண்டும் என்பது, மன்னர் ராஜேந்திரன் நடத்திய மேலும் ஒரு முக்கியமான கடற் போருக்குக் காரணமாக அமைந்துவிட்டது.


Next Story