தினமும் 22 மணி நேரம் தூங்கும் பெண்மணி

இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷைர் பகுதியில் உள்ள ஹாஸ்டில்போர்டு பகுதியில் வசிக்கும் அந்த பெண்மணியின் பெயர், ஜோனா காக்ஸ் தினமும் 18 முதல் 22 மணி நேரம் வரை தூங்கிக்கொண்டிருக்கிறார்.
இரவில் நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்க முடியாமல் தவிப்புக்கு ஆளாகுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இரவு, பகல் பார்க்காமல் விருப்பப்பட்ட நேரங்களில் எல்லாம் தூங்குபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஒரு பெண்மணி தினமும் 18 முதல் 22 மணி நேரம் வரை தூங்கிக்கொண்டிருக்கிறார். இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷைர் பகுதியில் உள்ள ஹாஸ்டில்போர்டு பகுதியில் வசிக்கும் அந்த பெண்மணியின் பெயர், ஜோனா காக்ஸ்.
இவருக்கு 2017-ம் ஆண்டு முதன் முதலில் தூக்க நோய்க்கான அறிகுறி தென்பட்டிருக்கிறது. பகல் வேளையில் மிகவும் சோர்வாக காணப்பட்டிருக்கிறார். துப்புரவு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்ததால் இரவு, பகல் பாராமல் வேலை செய்யும் பழக்கத்தை பின்பற்றி வந்திருக்கிறார். போதிய ஓய்வெடுக்க முடியாததால்தான் உடல் சோர்வு ஏற்பட்டிருப்பதாக கருதி இருக்கிறார். நாளடைவில் முன்பு போல் வேலை செய்ய முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார். வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போதே தன்னையும் அறியாமல் தூங்க தொடங்கி இருக்கிறார். அதுவே வழக்கமாகிவிட்டது.
38 வயதாகும் ஜோனா காக்ஸுக்கு இசபெல், கெய்ட்லின் ஆகிய இரு மகள்கள் இருக்கிறார்கள். ஒருமுறை எதுவும் சாப்பிடாமல் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக தூக்கத்திலேயே ஆழ்ந்திருக்கிறார். குடும்பத்தினர் பதறிப்போய் மருத்துமனையில் சேர்த்து பரிசோதித்திருக்கிறார்கள். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து போனதால் நிலைமை மோசமாகி இருக்கிறது. மருத்துவ சிகிச்சை அவரது உடல் நிலையை தேற்றினாலும் தூக்கத்தில் இருந்து மீள வைக்கவில்லை.
மன அழுத்தத்தால்தான் தனக்கு தூங்கும் பிரச்சினை இருப்பதாக கருதி மன நல நிபுணரை அணுகி இருக்கிறார். உடலில் சோர்வை தவிர வேறு எந்த அறிகுறியும் இல்லை என்று மன நல நிபுணர் கூறிவிட்டார். தூக்கத்தில் இருந்து மீள்வதற்காக பல்வேறு மருத்துவர்களை நாடி சிகிச்சை பெற்றிருக்கிறார். நீண்ட பரிசோதனைகளுக்கு பிறகு 2021-ம் ஆண்டில் 'இடியோபாடிக் ஹைப்பர்சோம்னியா' எனப்படும் அசாதாரண தூக்க கோளாறு பிரச்சினை இருப்பது தெரியவந்தது.
இந்த நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் இரவு முழுவதும் நன்றாக தூங்கினாலும் பகலிலும் தூங்கி வழியும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். அதற்கான காரணம் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை. உலகளவில் ஒரு சிலரே அரிதாக இந்த நோய் அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள். அவர்களில் ஜோனா காக்ஸ் முக்கியமானவர். ''நான் நிஜ வாழ்க்கையில் தூங்கும் அழகி போல் இருக்கிறேன். அதுவே என் வாழ்க்கையை சீரழிக்கிறது. தூக்கத்தில் இருந்து எழுவதற்கு போராடுகிறேன்'' என்று வேதனையோடு சொல்கிறார்.
இந்த தூக்க நோய் கண்டறியப்படுவதற்கு முன்பு வரை கோக்ஸ் எந்த இடத்திலும் தன்னை அறியாமல் தூங்கிவிடும் நிலைக்கு ஆளானார். எப்போது விழிப்பார் என்று உறுதியாக தெரியாததால் வெளி இடங்களுக்கு செல்வதை தவிர்த்தார். தன்னால் எந்தவொரு வேலையையும் திட்டமிட்டு செய்ய முடியாது என்கிறார். தன்னால் கார் ஓட்டவோ, மகள்களுடன் வெளி இடங்களுக்கு செல்லவோ முடிவதில்லை என்று ஆதங்கப்படுகிறார். ஒருமுறை மகள்களுடன் ஸ்பெயினுக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டார். தூக்கம் வருவதாக உணர்ந்தால் உடனே புரத வகை உணவுகளை உட்கொண்டு விடுகிறார். அப்படி சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றுவதால்தான் நீண்ட நேரம் தூங்கினாலும் தன்னால் உயிர்வாழ முடிகிறது என்றும் சொல்கிறார்.






