கின்னஸ் சாதனை படைத்த இளம் எழுத்தாளர்


கின்னஸ் சாதனை படைத்த இளம் எழுத்தாளர்
x

சவூதி அரேபியாவை சேர்ந்த ரிதாஜ் ஹுசைன் அல்ஹாஸ்மி என்ற சிறுமி, உலகின் இளம் புத்தக வெளியீட்டாளர் என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார். ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை ஊக்குவிக்க தூண்டும் குழந்தைகளுக்கான புனைக்கதை புத்தகங்களை எழுதி வருகிறார்.

'தொலைந்த கடலின் பொக்கிஷம்', 'போர்ட்டல் ஆப் த ஹைடன் வேர்ல்டு', 'பியாண்ட் ஆப் த பியூச்சர் வேர்ல்டு' ஆகிய நாவல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

ரிதாஜ் ஹுசைன் அல்ஹாஸ்மி

ரிதாஜ் ஹுசைன் அல்ஹாமிஸ்மிக்கு 13 வயதுதான் ஆகிறது. ஆனால் முதிர்ச்சி அடைந்த பெண்மணி போல் அவரது செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. அவர் எழுதும் கதைகளும் இவர் சிறுமிதானா? என்று பிறரை ஆச்சரியப்பட வைக்கின்றன. அந்த அளவுக்கு திறமையான எழுத்தாளராக விளங்குகிறார். சிறுவர்-சிறுமியர்களை கற்பனை உலகத்திற்குள் அழைத்து செல்லும் சாரம்சங்களும் இவரது புனைக்கதைகளில் இடம் பெற்றுள்ளன. இணையதளம் வழியாகவும் தனது படைப்புகளை காட்சிப்படுத்துகிறார்.

ரிதாஜ் 6 வயதிலேயே எழுத தொடங்கி விட்டார். 7 வயதில் சவுதி அரேபியாவில் உள்ள நூலகங்களுக்கு செல்ல தொடங்கிவிட்டார். அங்கு ஏராளமான புத்தகங்களை படித்து தனது அறிவுத்திறனை மேம்படுத்திக்கொண்டார். அதுவே அவரை புத்தகம் எழுத தூண்டும் அளவுக்கு முன்னேற வைத்துவிட்டது. முதலில் சிறுகதைகள் எழுத தொடங்கி இருக்கிறார். 2019-ம் ஆண்டு ஆங்கில மொழியில் முதல் புத்தகத்தை வெளியிட்டார். அதே ஆண்டில் இரண்டாவது புத்தகத்தையும் வெளியிட்டு விட்டார். அந்த புத்தகம்தான் அவரது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தி விட்டது.

இளம் வயதிலேயே சிறப்பாக புத்தகம் எழுதுவதாக பலரும் பாராட்டினார்கள். இளம் வயதில் தொடர்ந்து புத்தகங்கள் எழுதும் சிறுமி என்ற பெருமையும் பெற்றார். 2020-ம் ஆண்டு தனது மூன்றாவது புத்தகத்தை வெளியிட்டுவிட்டார். நாவலாக வெளியான அந்த புத்தகம் ஆதரவற்ற குடும்பம் ஒன்றின் வாழ்க்கை போராட்டத்தை படம் பிடித்து காட்டுவதாக அமைந்திருந்தது.

இரண்டு சிறுவர்கள் தனது குடும்பத்துடன் தனிமை தீவில் வசிக்கிறார்கள். கஷ்டங்கள் சூழ்ந்த அவர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடக்கிறது. அதன் பிறகு அவர்களின் வாழ்க்கை புதிய உலகத்திற்குள் நுழைகிறது. அங்கு ஹீரோக்களாக வாழ்கிறார்கள். அந்த நாவலுக்கு கிடைத்த வரவேற்பும், இளம் வயதில் புத்தகம் எழுதும் ஆற்றலும் ரிதாஜை கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பெற வைத்துவிட்டது.

சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள தஹ்ரானில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அரபு மற்றும் ஆங்கில மொழிப்புலமை பெற்றிருப்பவர் தற்போது ஜப்பானிய மொழியையும் கற்று வருகிறார். நான்காவது புத்தகத்தை வெளியிடுவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்.


Next Story