புகைப்பழக்கம்: அன்றும், இன்றும்...!


புகைப்பழக்கம்: அன்றும், இன்றும்...!
x

யங்யாஷி என்ற சீன அறிஞர்தான் நுரையீரலை புகையிலை சுரண்டி சீரழித்துவிடும் என்றார்.

இளைய சமூகத்தினருக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் புகைப்பழக்கம், ஒரு காலத்தில் மருத்துவ குணம் நிறைந்த பழக்கமாக கருதப்பட்டது. பிறகு எப்படி, உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருளாக மாறியது எனத் தெரிந்து கொள்வோமா...?

புகையிலை... இன்றோ நேற்றோ வந்த பொருளல்ல. 'புது உலகம்' என அழைக்கப்பட்ட அமெரிக்காவுக்குள் ஐரோப்பியர்கள் புகுந்த காலத்திலேயே தென் அமெரிக்க பழங்குடிகளால் புகையிலை பயன்படுத்தப்பட்டு வந்தது.

மெக்சிகோவில் மாயன் இனத்தவர்களால் செதுக்கப்பட்ட பழங்கால சிற்பங்களும், கல்வெட்டுகளும் நிறைய கிடைத்துள்ளன. அவற்றில் புகையிலை பயன்பாடு பற்றிய குறிப்புகள் உள்ளன. அந்தக் கல்வெட்டுகள் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கணக்கிடப்பட்டுள்ளது. மக்கள் புகையிலையை மெல்வது, புகைப்பது, உடலில் பூசிக்கொள்வது என்று பல வழிகளில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

தலைவலி, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது, ஞாபகமறதி போன்றவற்றுக்கு புகையிலை மருந்தாகப் பரிந்துரைக்கப்பட்டது. 1492-ல் அமெரிக்காவைக் கண்டறிந்த கொலம்பஸ்தான் முதன்முதலில் புகையிலைச் செடியை ஐரோப்பிய கண்டத்துக்குக் கொண்டு வந்தார். அதன்பிறகே புகையிலை உலகின் மற்ற பகுதிகளுக்குப் பரவியது. ஐரோப்பியர்கள்தான் இந்தியாவுக்கு புகையிலையை அறிமுகப்படுத்தினர். 17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அக்பரின் ஆட்சிக்காலத்தில் போர்ச்சுகீசியர்கள் இந்தியாவுக்கு புகையிலைச் செடியைக் கொண்டு வந்தனர்.

பீஜப்பூர், கோல்கொண்டா பகுதியில் 1618-ம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவு புகையிலை பயிரிடப்பட்டதாகத் தெரிகிறது. 1664-66-ல் இங்கிலாந்தில் பிளேக் நோய் பரவியபோது, புகையிலை மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. அது நல்ல முன்னேற்றத்தைத் தந்ததாக அன்றைய மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். 'பிளேக் நோய் தாக்காமல் தடுக்க புகை பிடியுங்கள்' என அந்த சமயத்தில் இங்கிலாந்து மக்கள் அனைவருமே அறிவுறுத்தப்பட்டனர்.

19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னையிலிருந்து மைசூரு, கர்நாடகம், மலபார் ஆகிய பகுதிகளில் பயணம் மேற்கொண்ட பிரான்சிஸ் புக்கானன் என்பவர், கர்நாடகத்திலும், மலபார், கோயமுத்தூர் பகுதிகளிலும், மைசூர் சமஸ்தானத்திலும் பரந்த அளவில் புகையிலை பயிர்செய்யப்பட்டு வந்ததாகக் குறிப்பிடுகிறார்.

தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய பகுதிகளில் புகையிலை சிறப்பாக பயிர் செய்யப்பட்டது. அழகன் குளம், பரத்தை வயல், காங்கேயம் ஆகியவை புகையிலை செழித்து விளையும் இடங்களாக இருந்தன.

வெகு சமீபத்தில்தான் டச்சுக்காரர்கள் புகையிலை ஆண்மைக் குறைவை ஏற்படுத்துவதைக் கண்டறிந்தார்கள். யங்யாஷி என்ற சீன அறிஞர்தான் நுரையீரலை புகையிலை சுரண்டி சீரழித்துவிடும் என்றார்.

இப்போது புகையிலை வருஷத்துக்கு 9 லட்சம் இந்தியர்களைப் பலி வாங்குகிறது.


Next Story